லூக்கா எழுதிய சுவிசேஷம் 15:1-10

லூக்கா எழுதிய சுவிசேஷம் 15:1-10 TAERV

வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள். உடனே பரிசேயரும் வேதபாரகரும் குறை கூற ஆரம்பித்தவர்களாக, “பாருங்கள்! இந்த மனிதன் (இயேசு) தீயோரை வரவேற்று அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்” என்றனர். அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்: “உங்களில் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்று காணாமல் போகிறது. அப்போது அவன் மற்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் தனியே விட்டுவிட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லமாட்டானா? அந்தக் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் அவன் அதைத் தேடிக்கொண்டே இருப்பான். அந்த ஆட்டை அவன் கண்டுபிடிக்கிறபோது மிகவும் சந்தோஷம் அடைவான். அந்த மனிதன் அந்த ஆட்டைத் தன் தோள்களில் சுமந்துக்கொண்டு தன் வீட்டை அடைவான். தன் நண்பர்களையும் அக்கம் பக்கத்தவர்களையும் அழைத்து அவர்களிடம் ‘எனது காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தங்கள் இதயத்தை மாற்றத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நல்ல மனிதருக்காக ஏற்படும் சந்தோஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பாவிக்காக ஏற்படும் சந்தோஷம் அதிகமாக இருக்கும். “ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக் காசுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் ஒன்றை அவள் தொலைத்து விடுகிறாள். அவள் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வாள் அல்லவா? அந்தக் காசு கிடைக்கும் மட்டும் கவனமாகத் தேடுவாள். தொலைந்து போன அந்தக் காசைக் கண்டெடுக்கும்போது அவள் தனது நண்பர்களையும் அக்கம் பக்கத்தாரையும் ஒன்றாக அழைத்து அவர்களை நோக்கி, ‘நான் தொலைத்த காசைக் கண்டெடுத்ததால் நீங்கள் என்னோடு கூட சந்தோஷப்படுங்கள்’ என்பாள். அதைப்போலவே ஒரு பாவி மனந்திருந்தி தன் வாழ்வை மாற்றினால் தேவ தூதருக்கு முன்பாக மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்