லேவியராகமம் 22:17-33
லேவியராகமம் 22:17-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ, அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக. பழுதுள்ள ஒன்றையும் செலுத்தவேண்டாம்; அது உங்கள்நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை. ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும். குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக. நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது, விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்தில் பலியிடாமலும் இருப்பீர்களாக. அந்நிய புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள் முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும். பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம். கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக. அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர். நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர். என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். நான் உங்களுக்கு தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
லேவியராகமம் 22:17-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனோடும், அவன் மகன்களோடும், இஸ்ரயேலர் அனைவரோடும் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேலனோ, இஸ்ரயேலில் வசிக்கும் பிறநாட்டினனோ, யாராவது தன் நேர்த்திக்கடனைச் செலுத்தும்படியாகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கையாகவோ யெகோவாவுக்கு ஒரு தகனகாணிக்கையைக் கொடையாகக் கொண்டுவரலாம். அவ்வாறு கொண்டுவருவதானால், அது உங்கள் சார்பாக அங்கீகரிக்கப்படும்படி மாட்டு மந்தையிலிருந்தோ, ஆட்டு மந்தையிலிருந்தோ அல்லது வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ குறைபாடற்ற ஒரு ஆண் மிருகமாக இருக்கவேண்டும். குறைபாடுள்ள எதையும் கொண்டுவர வேண்டாம். ஏனெனில் அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஒருவன் ஒரு விசேஷ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கைக்காகவோ தன் மாட்டு மந்தையில் இருந்தாவது, ஆட்டு மந்தையில் இருந்தாவது யெகோவாவுக்கு ஒரு சமாதான காணிக்கையைக் கொண்டுவந்தால், அது ஏற்கத்தக்கதாக இருக்கும்படி, குறைபாடற்றதாகவும், பழுதற்றதாகவும் இருக்கவேண்டும். குருடானதையோ, காயமடைந்ததையோ, முடமானதையோ அல்லது தோலில் மருவுள்ளதையோ, சொறி அல்லது சீழ்வடியும் புண்ணுள்ளதையோ யெகோவாவுக்குச் செலுத்தவேண்டாம். இவைகளில் எதையும், நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கையாக, பலிபீடத்தின்மேல் வைக்கவேண்டாம். ஆனாலும் வளர்ச்சி குன்றிய அல்லது உருவம் சிதைவுற்ற ஒரு மாட்டையோ, செம்மறியாட்டையோ நீங்கள் சுயவிருப்பக் காணிக்கையாகச் செலுத்தலாம்; ஆனால் அவை நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விதைகள் காயப்பட்ட, நசுக்கப்பட்ட, கிழிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட எந்தவொரு மிருகத்தையும், நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்தக்கூடாது. உங்கள் சொந்த நாட்டில் இதைச் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட மிருகங்களை நீங்கள் அந்நிய நாட்டினரின் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளவும், அவற்றை உங்கள் இறைவனின் உணவாகச் செலுத்தவும் வேண்டாம். உங்கள் சார்பில் அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏனெனில், அவை உருவம் சிதைந்தவைகளாயும், குறைபாடுள்ளவைகளாயும் இருக்கின்றன.’ ” யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “கன்றுக்குட்டியோ, செம்மறியாட்டு குட்டியோ அல்லது வெள்ளாட்டு குட்டியோ பிறக்கும்போது அது தன் தாயுடன் ஏழு நாட்கள் தொடர்ந்து இருக்கவேண்டும். எட்டாம் நாளிலிருந்து யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக அது ஏற்றுக்கொள்ளப்படும். பசுவை அதன் கன்றுடனும், ஆட்டை அதன் குட்டியுடனும் ஒரே நாளில் வெட்டிக் கொல்லவேண்டாம்.” “நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக் காணிக்கை ஒன்றைப் பலியிடும்போது, அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் அதைப் பலியிடுங்கள். அந்த நாளிலேயே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும். காலைவரை ஒன்றையும் விட்டுவைக்கவேண்டாம். நானே யெகோவா. “என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா. என் பரிசுத்த பெயரை அசுத்தமாக்க வேண்டாம். இஸ்ரயேலரால் நான் பரிசுத்தர் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும். உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே. உங்கள் இறைவனாயிருக்கும்படி நானே உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்தேன். நானே யெகோவா” என்றார்.
லேவியராகமம் 22:17-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் யெகோவாவுக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ, அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக. ஊனமுள்ள ஒன்றையும் செலுத்தவேண்டாம்; அது உங்கள்நிமித்தம் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, யெகோவாவுக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கீகரிக்கப்படும்படி, ஒரு ஊனமில்லாமல் உத்தமமாக இருக்கவேண்டும். குருடு, எலும்பு முறிந்தவை, முடம், கட்டிகள் உள்ளவை, சொறி, புண் முதலிய குறைபாடு உள்ளவைகளை நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தாமலும், அவைகளாலே யெகோவாவுக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக. நீண்ட அல்லது குறுகின உறுப்புள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக செலுத்தலாம்; பொருத்தனைக்காக அது அங்கீகரிக்கப்படமாட்டாது. விதை நசுங்கினதையும், நொறுங்கினதையும், காயப்பட்டதையும், விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்தில் பலியிடாமலும் இருப்பீர்களாக. அந்நியர்களின் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தவேண்டாம்; அவைகளின் குறைபாடும், ஊனமும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கீகரிக்கப்படுவதில்லை என்று சொல்” என்றார். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது, வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாட்கள் தன் தாயினிடத்தில் இருப்பதாக; எட்டாம் நாள் முதல் அது யெகோவாவுக்குத் தகனபலியாக அங்கீகரிக்கப்படும். பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம். யெகோவாவுக்கு நன்றிபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாக அதைச் செலுத்துவீர்களாக. அந்நாளிலேயே அதைச் சாப்பிட்டுவிடவேண்டும்; விடியற்காலம்வரை நீங்கள் அதில் ஒன்றையும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் யெகோவா. “நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் யெகோவா. என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் மக்கள் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா. நான் உங்களுக்கு தேவனாக இருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.
லேவியராகமம் 22:17-33 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், “ஆரோனிடமும் அவனது குமாரர்களிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கூறு. இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனோ அல்லது அந்நியரில் ஒருவனோ எனக்குப் பலி கொண்டுவர விரும்பலாம். அது அவன் செய்த சிறப்பான பொருத்தனையாக இருக்கலாம், அல்லது அது அவன் கொடுக்க விரும்பும் சிறப்பான பலியாக இருக்கலாம். அவர்கள் அந்த அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஏனென்றால் உண்மையில் அவர்கள் தேவனுக்கு அன்பளிப்பு செலுத்த விரும்புகின்றனர். அந்த அன்பளிப்புகளில் ஏதாவது குறை இருக்குமானால் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அந்த அன்பளிப்பால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன். அந்த அன்பளிப்பானது ஒரு காளையாகவோ, ஆடாகவோ, வெள்ளாடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆணாக இருக்க வேண்டும். அதில் எவ்வித குறையும் இருக்கக்கூடாது. “ஒருவன் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரலாம். அந்த சமாதானப் பலியானது அவன் ஏற்கெனவே செய்த சிறப்பான பொருத்தனைக்கு உரியதாக இருக்கலாம். அல்லது சிறப்பாக அவன் கர்த்தருக்குக் கொடுக்கக் கூடிய அன்பளிப்பாக இருக்கலாம். அது மாடாகவோ ஆடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமானதாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். குருடான, அல்லது எலும்பு முறிந்த, அல்லது நொண்டியான, அல்லது உடற்கழிவுடைய, அல்லது சொறியும் புண்ணும் உடைய மிருகங்களை கர்த்தருக்குப் பலியாகக் கொடுக்கக்கூடாது. நோயுற்ற மிருகங்களையும் கர்த்தரின் பலிபீடத்தில் செலுத்தக் கூடாது. “சில நேரங்களில் மாடு அல்லது ஆட்டிற்கு கால்கள் மிக நீளமாகவோ அல்லது குறுகியோ இருக்கலாம். எனினும் ஒருவன் இதனை கர்த்தருக்கு சிறப்பான அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பினால் அது ஏற்றுக்கொள்ளப்படலாம்; ஆனால் இது சிறப்பான பொருத்தனையின் அன்பளிப்பாக ஒருவனால் கொடுக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. “ஒரு மிருகம் காயப்பட்டதாகவோ, நசுங்கியதாகவோ, விதை நொறுங்கியதாகவோ இருந்தால் அதை கர்த்தருக்கு பலியாகக் கொடுக்கக்கூடாது. “நீங்கள் அந்நியரிடமிருந்து மிருகங்களை கர்த்தருக்குரிய பலியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அம்மிருகம் ஏதாவது ஒரு இடத்தில் புண் உள்ளதாகவோ, குறையுடையதாகவோ இருக்கலாம். எனவே, அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது!” என்று கூறினார். கர்த்தர் மேலும் மோசேயிடம், “ஒரு கன்றுக் குட்டியோ, ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியோ, ஒரு வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்ததும் அது ஏழு நாட்கள் தன் தாயோடு இருக்க வேண்டும். எட்டாவது நாளே அது தகன பலியாக கர்த்தருக்கு முன்பு பலியிடத் தகுதியுள்ளதாகும். ஆனால் தாயையும், குட்டியையும் ஒரே நாளில் பலியிடக்கூடாது. இந்த விதி பசுவுக்கும் கன்றுக் குட்டிக்கும் பொருந்தும். “நீ நன்றி தெரிவிப்பதற்காக கர்த்தருக்குச் சிறப்பான பலியைச் செலுத்த விரும்பினால் அது உன் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அது தேவனுக்கும் விருப்பமானதாக அமைய வேண்டும். ஆனால் பலியிடப்படும் முழு மிருகத்தையும் அன்றே சாப்பிட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் அதன் இறைச்சியில் எதுவும் மீதியிருக்கக் கூடாது. நானே கர்த்தர். “எனது கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நட. நானே கர்த்தர். எனது பரிசுத்தமான பெயருக்கு மதிப்புகொடு. நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சிறப்பானவராயிருப்பேன். கர்த்தராகிய நான் உங்களை என் சிறப்பான ஜனங்களாக்கியிருக்கிறேன். நான் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.