லேவியராகமம் 22:17-33

லேவியராகமம் 22:17-33 TCV

யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனோடும், அவன் மகன்களோடும், இஸ்ரயேலர் அனைவரோடும் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேலனோ, இஸ்ரயேலில் வசிக்கும் பிறநாட்டினனோ, யாராவது தன் நேர்த்திக்கடனைச் செலுத்தும்படியாகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கையாகவோ யெகோவாவுக்கு ஒரு தகனகாணிக்கையைக் கொடையாகக் கொண்டுவரலாம். அவ்வாறு கொண்டுவருவதானால், அது உங்கள் சார்பாக அங்கீகரிக்கப்படும்படி மாட்டு மந்தையிலிருந்தோ, ஆட்டு மந்தையிலிருந்தோ அல்லது வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ குறைபாடற்ற ஒரு ஆண் மிருகமாக இருக்கவேண்டும். குறைபாடுள்ள எதையும் கொண்டுவர வேண்டாம். ஏனெனில் அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஒருவன் ஒரு விசேஷ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கைக்காகவோ தன் மாட்டு மந்தையில் இருந்தாவது, ஆட்டு மந்தையில் இருந்தாவது யெகோவாவுக்கு ஒரு சமாதான காணிக்கையைக் கொண்டுவந்தால், அது ஏற்கத்தக்கதாக இருக்கும்படி, குறைபாடற்றதாகவும், பழுதற்றதாகவும் இருக்கவேண்டும். குருடானதையோ, காயமடைந்ததையோ, முடமானதையோ அல்லது தோலில் மருவுள்ளதையோ, சொறி அல்லது சீழ்வடியும் புண்ணுள்ளதையோ யெகோவாவுக்குச் செலுத்தவேண்டாம். இவைகளில் எதையும், நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கையாக, பலிபீடத்தின்மேல் வைக்கவேண்டாம். ஆனாலும் வளர்ச்சி குன்றிய அல்லது உருவம் சிதைவுற்ற ஒரு மாட்டையோ, செம்மறியாட்டையோ நீங்கள் சுயவிருப்பக் காணிக்கையாகச் செலுத்தலாம்; ஆனால் அவை நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விதைகள் காயப்பட்ட, நசுக்கப்பட்ட, கிழிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட எந்தவொரு மிருகத்தையும், நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்தக்கூடாது. உங்கள் சொந்த நாட்டில் இதைச் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட மிருகங்களை நீங்கள் அந்நிய நாட்டினரின் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளவும், அவற்றை உங்கள் இறைவனின் உணவாகச் செலுத்தவும் வேண்டாம். உங்கள் சார்பில் அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏனெனில், அவை உருவம் சிதைந்தவைகளாயும், குறைபாடுள்ளவைகளாயும் இருக்கின்றன.’ ” யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “கன்றுக்குட்டியோ, செம்மறியாட்டு குட்டியோ அல்லது வெள்ளாட்டு குட்டியோ பிறக்கும்போது அது தன் தாயுடன் ஏழு நாட்கள் தொடர்ந்து இருக்கவேண்டும். எட்டாம் நாளிலிருந்து யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக அது ஏற்றுக்கொள்ளப்படும். பசுவை அதன் கன்றுடனும், ஆட்டை அதன் குட்டியுடனும் ஒரே நாளில் வெட்டிக் கொல்லவேண்டாம்.” “நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக் காணிக்கை ஒன்றைப் பலியிடும்போது, அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் அதைப் பலியிடுங்கள். அந்த நாளிலேயே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும். காலைவரை ஒன்றையும் விட்டுவைக்கவேண்டாம். நானே யெகோவா. “என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா. என் பரிசுத்த பெயரை அசுத்தமாக்க வேண்டாம். இஸ்ரயேலரால் நான் பரிசுத்தர் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும். உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே. உங்கள் இறைவனாயிருக்கும்படி நானே உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்தேன். நானே யெகோவா” என்றார்.