யோவேல் 2:2-14
யோவேல் 2:2-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அது இருளும் காரிருளும் கலந்த நாள், மப்பும் மந்தாரமும் நிறைந்த நாள். விடியற்காலை வெளிச்சம் மலைகளின்மீது பரவுவதுபோல் வலிமைமிக்க வெட்டுக்கிளிகளின் பெரும் படையொன்று வருகிறது! இதுபோன்ற படை முற்காலத்தில் இருந்ததுமில்லை, வரப்போகும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை. அவற்றிற்கு முன்னாக நெருப்பு சுட்டெரிக்கும், அவற்றிற்கு பின்னாக நெருப்புப் பற்றியெரியும். அவற்றிற்கு முன்னாக நாடு ஏதேன் தோட்டத்தைப் போலவும், அவற்றிற்குப் பின்னாக நாடு பாழான பாலைவனம் போலவும் இருக்கிறது; அவற்றிலிருந்து தப்புவது எதுவுமேயில்லை. அவை குதிரைகளின் தோற்றமுடையவை; அவை குதிரைப் படைபோல் பாய்ந்தோடுகின்றன. தேர்களின் இரைச்சலைப் போன்ற சத்தத்துடனும், காய்ந்த சருகுகளை எரிக்கும்போது எழும்பும் சத்தத்துடனும், யுத்தத்திற்கு அணிவகுக்கும் வலிமைமிக்க படையைப்போல் அவை மலைமேல் பாய்ந்து வருகின்றன. அவைகளைக் கண்டதும் நாடுகள் நடுங்கும்; பயத்தால் எல்லாருடைய முகங்களும் வெளிறிப்போகும். வெட்டுக்கிளிகள் இராணுவவீரரைப்போல் தாவி ஓடுகின்றன; அவை போர் வீரரைப்போல் மதில்களில் ஏறுகின்றன. அவை தங்கள் பாதையிலிருந்து விலகாமல் நேராய் அணிவகுத்துச் செல்கின்றன. அவை ஒன்றையொன்று இடித்துக்கொள்ளாமல் ஒவ்வொன்றும் தன் வழிதவறாமல் செல்கின்றன. அணிவகுப்பைக் குலைக்காமல் போராயுதங்களை இடித்து முன்னேறுகின்றன. அவை நகரத்தை நோக்கி விரைகின்றன; மதில்கள்மேல் ஓடுகின்றன. வீடுகளுக்குள் ஏறுகின்றன; அவை திருடர்களைப்போல் ஜன்னல் வழியே நுழைகின்றன. அவற்றின் முன்பாக பூமி அதிருகிறது, வானம் அசைகிறது. சூரியனும் சந்திரனும் இருளடைகின்றன, நட்சத்திரங்கள் ஒளிகொடாதிருக்கின்றன. யெகோவா தமது படையின் முன்னின்று முழக்கமிடுகிறார்; அவருடைய பாளையம் மிகப்பெரியது, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறதற்கு வலிமைமிக்கது. யெகோவாவின் நாள் பெரிதும் பயங்கரமுமானது. அதை யாரால் சகிக்கமுடியும்? ஆகையால், “இப்பொழுதேனும் நீங்கள் உபவாசித்து, அழுது புலம்பி, உங்கள் முழுமனதுடன் என்னிடம் திரும்புங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். உங்கள் உடைகளையல்ல, உங்கள் உள்ளத்தையே கிழியுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்; ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர், கோபிக்கத் தாமதிக்கிறவர், அன்பு நிறைந்தவர்; பேரழிவை அனுப்பாமல் மனம் மாறுகிறவர். யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் மனமாறி, அனுதாபங்கொண்டு, உங்களுக்குத் தனது ஆசீர்வாதத்தையும் தரக்கூடும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்காக தானிய காணிக்கையையும் பானகாணிக்கையையும் நீங்கள் கொண்டுவரலாம்.
யோவேல் 2:2-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அது இருளும் காரிருளுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு மலைகளின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு மக்கள்கூட்டம் தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்பு ஒரு காலத்திலும் உண்டாகவுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக இனிவரும் வருடங்களிலும் உண்டாவதுமில்லை. அவைகளுக்கு முன்னாக நெருப்பு எரிக்கும், அவைகளுக்குப் பின்னாக தழல் எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்திரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலைப்போல இருக்கும்; அவைகள் குதிரை வீரர்களைப்போல ஓடும். அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சலைப்போலவும், வைக்கோலை எரிக்கிற நெருப்பு ஜூவாலையின் சத்தத்தைப்போலவும், போருக்கு ஆயத்தப்பட்ட பெரும் மக்கள்கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், மலைகளுடைய உச்சியின்மேல் குதிக்கும். அவைகளுக்கு முன்பாக மக்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும். அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; போர்வீரர்களைப்போல மதில் ஏறும்; வரிசைகள் கலையாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம் ஏற்படாமற்போகும். அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; ஜன்னல் வழியாகத் திருடனைப்போல உள்ளே நுழையும். அவைகளுக்கு முன்பாக பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மங்கும். யெகோவா தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; யெகோவாவுடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார். நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாக இருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு உணவுபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
யோவேல் 2:2-14 பரிசுத்த பைபிள் (TAERV)
அது இருண்ட அந்தகாரமான நாளாக இருக்கும். அது இருளும் மந்தாரமுமான நாளாக இருக்கும். சூரிய உதயத்தின்போது நீங்கள் மலை முழுவதும் படை பரவியிருப்பதைப் பார்ப்பீர்கள். அப்படை சிறந்ததாகவும் வல்லமையுடையதாகவும் இருக்கும். இதற்கு முன்னால் எதுவும் இதுபோல் இருந்ததில்லை. இதற்கு பிறகு எதுவும் இதுபோல் இருப்பதில்லை. படையானது எரியும் நெருப்பைப் போன்று நாட்டை அழிக்கும். அவைகளின் முன்னால் அந்நாடு ஏதேன் தோட்டம் போன்றிருக்கும். அதற்குப் பிறகு நாடானது வெற்று வனாந்தரம் போன்றிருக்கும். அவைகளிடமிருந்து எதுவும் தப்பமுடியாது. வெட்டுக்கிளிகள் குதிரைகளைப் போன்று தோன்றும். அவை போர்க் குதிரைகளைப்போன்று ஓடும். அவைகளுக்குச் செவிகொடுங்கள். இது மலைகளின் மேல்வரும் இரதங்களின் ஒலி போல் உள்ளது. இது பதரை எரிக்கும் நெருப்பின் ஒலிபோல் உள்ளது. அவர்கள் வல்லமை வாய்ந்த ஜனங்கள். அவர்கள் போருக்குத் தயாராக இருக்கிறார்கள். இந்தப் படைக்கு முன்னால் ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்களின் முகங்கள் அச்சத்தால் வெளுத்தன. வீரர்கள் விரைவாக ஓடுகிறார்கள். வீரர்கள் சுவர்களின் ஏறுகிறார்கள். ஒவ்வொரு வீரனும் நேராகக் செல்கிறான். அவர்கள் தம் பாதையில் இருந்து விலகமாட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் விழச்செய்யமாட்டார்கள். ஒவ்வொரு வீரனும் தன் சொந்தப் பாதையில் நடக்கிறான். வீரர்களில் ஒருவன் மோதிக் கீழே விழுந்தாலும் மற்றவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் நகரத்திற்கு ஓடுகிறார்கள். அவர்கள் விரைவாகச் சுவர்மேல் ஏறுகிறார்கள். அவர்கள் வீடுகளுக்குள் ஏறுகிறார்கள். அவர்கள் ஜன்னல் வழியாகத் திருடர்களைப்போல் ஏறுகின்றனர். அவர்களுக்கு முன்பு, பூமியும் வானமும் நடுங்குகிறது. சூரியனும் சந்திரனும் இருளாகிவிடுகின்றன. நட்சத்திரங்கள் ஒளிவீசுவதை நிறுத்துகின்றன. கர்த்தர் தனது படையை உரக்க அழைக்கிறார். அவரது பாளையம் மிகப்பெரியது. அப்படை அவரது கட்டளைக்கு அடிபணிகிறது. அப்படை மிகவும் வல்லமையுடையது. கர்த்தருடைய சிறப்பு நாள் உயர்வானதாகவும் பயங்கரமானதாகவும் உள்ளது. ஒருவரும் இதை நிறுத்த முடியாது. இது கர்த்தருடைய செய்தி. “உங்கள் முழுமனதோடு இப்பொழுது என்னிடம் திரும்பி வாருங்கள். நீங்கள் தீமை செய்தீர்கள். அழுங்கள், உணவு உண்ணவேண்டாம். உங்கள் ஆடைகளையல்ல, இதயத்தைக் கிழியுங்கள்.” உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வாருங்கள். அவர் இரக்கமும் கருணையும் உள்ளவர். அவர் விரைவாகக் கோபப்படமாட்டார். அவரிடம் மிகுந்த அன்பு உண்டு. ஒருவேளை அவர் தனது மனதை, திட்டமிட்டிருந்த பயங்கரமான தண்டனையிலிருந்து மாற்றிக்கொள்ளலாம். யாருக்குத் தெரியும். கர்த்தர் தனது மனதை மாற்றிக்கொள்ளலாம். ஒருவேளை அவர் உங்களுக்காக ஆசீர்வாதத்தை விட்டு வைத்திருக்கலாம். பிறகு நீங்கள் உங்கள் தேவானாகிய கர்த்தருக்கு தானியக் காணிக்கைகளும் பானங்களின் காணிக்கைகளும் தரலாம்.
யோவேல் 2:2-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை. அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜூவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும். அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல் போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினி ஜூவாலையின் இரைச்சல் போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும். அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும். அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும். அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; பலகணி வழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும். அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.