யோவேல் 2:2-14

யோவேல் 2:2-14 TAERV

அது இருண்ட அந்தகாரமான நாளாக இருக்கும். அது இருளும் மந்தாரமுமான நாளாக இருக்கும். சூரிய உதயத்தின்போது நீங்கள் மலை முழுவதும் படை பரவியிருப்பதைப் பார்ப்பீர்கள். அப்படை சிறந்ததாகவும் வல்லமையுடையதாகவும் இருக்கும். இதற்கு முன்னால் எதுவும் இதுபோல் இருந்ததில்லை. இதற்கு பிறகு எதுவும் இதுபோல் இருப்பதில்லை. படையானது எரியும் நெருப்பைப் போன்று நாட்டை அழிக்கும். அவைகளின் முன்னால் அந்நாடு ஏதேன் தோட்டம் போன்றிருக்கும். அதற்குப் பிறகு நாடானது வெற்று வனாந்தரம் போன்றிருக்கும். அவைகளிடமிருந்து எதுவும் தப்பமுடியாது. வெட்டுக்கிளிகள் குதிரைகளைப் போன்று தோன்றும். அவை போர்க் குதிரைகளைப்போன்று ஓடும். அவைகளுக்குச் செவிகொடுங்கள். இது மலைகளின் மேல்வரும் இரதங்களின் ஒலி போல் உள்ளது. இது பதரை எரிக்கும் நெருப்பின் ஒலிபோல் உள்ளது. அவர்கள் வல்லமை வாய்ந்த ஜனங்கள். அவர்கள் போருக்குத் தயாராக இருக்கிறார்கள். இந்தப் படைக்கு முன்னால் ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்களின் முகங்கள் அச்சத்தால் வெளுத்தன. வீரர்கள் விரைவாக ஓடுகிறார்கள். வீரர்கள் சுவர்களின் ஏறுகிறார்கள். ஒவ்வொரு வீரனும் நேராகக் செல்கிறான். அவர்கள் தம் பாதையில் இருந்து விலகமாட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் விழச்செய்யமாட்டார்கள். ஒவ்வொரு வீரனும் தன் சொந்தப் பாதையில் நடக்கிறான். வீரர்களில் ஒருவன் மோதிக் கீழே விழுந்தாலும் மற்றவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் நகரத்திற்கு ஓடுகிறார்கள். அவர்கள் விரைவாகச் சுவர்மேல் ஏறுகிறார்கள். அவர்கள் வீடுகளுக்குள் ஏறுகிறார்கள். அவர்கள் ஜன்னல் வழியாகத் திருடர்களைப்போல் ஏறுகின்றனர். அவர்களுக்கு முன்பு, பூமியும் வானமும் நடுங்குகிறது. சூரியனும் சந்திரனும் இருளாகிவிடுகின்றன. நட்சத்திரங்கள் ஒளிவீசுவதை நிறுத்துகின்றன. கர்த்தர் தனது படையை உரக்க அழைக்கிறார். அவரது பாளையம் மிகப்பெரியது. அப்படை அவரது கட்டளைக்கு அடிபணிகிறது. அப்படை மிகவும் வல்லமையுடையது. கர்த்தருடைய சிறப்பு நாள் உயர்வானதாகவும் பயங்கரமானதாகவும் உள்ளது. ஒருவரும் இதை நிறுத்த முடியாது. இது கர்த்தருடைய செய்தி. “உங்கள் முழுமனதோடு இப்பொழுது என்னிடம் திரும்பி வாருங்கள். நீங்கள் தீமை செய்தீர்கள். அழுங்கள், உணவு உண்ணவேண்டாம். உங்கள் ஆடைகளையல்ல, இதயத்தைக் கிழியுங்கள்.” உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வாருங்கள். அவர் இரக்கமும் கருணையும் உள்ளவர். அவர் விரைவாகக் கோபப்படமாட்டார். அவரிடம் மிகுந்த அன்பு உண்டு. ஒருவேளை அவர் தனது மனதை, திட்டமிட்டிருந்த பயங்கரமான தண்டனையிலிருந்து மாற்றிக்கொள்ளலாம். யாருக்குத் தெரியும். கர்த்தர் தனது மனதை மாற்றிக்கொள்ளலாம். ஒருவேளை அவர் உங்களுக்காக ஆசீர்வாதத்தை விட்டு வைத்திருக்கலாம். பிறகு நீங்கள் உங்கள் தேவானாகிய கர்த்தருக்கு தானியக் காணிக்கைகளும் பானங்களின் காணிக்கைகளும் தரலாம்.