யோபு 38:1-41

யோபு 38:1-41 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு, உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளை கொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறது போல் காணப்படும். துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும். நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு. வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே? அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ? உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிலிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ? ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே? பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி, பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி, வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்? உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்? ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே. அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ? இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள் பரியந்தம் உயர்த்துவாயோ? நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ? அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்? தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்? நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி, சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?

யோபு 38:1-41 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்: “அறிவற்ற வார்த்தைகளினால் என் ஆலோசனையை தெளிவற்றதாக்குகிற இவன் யார்? இப்பொழுது நீ ஒரு திடமனிதனாய் நில்; நான் உன்னிடம் கேள்வி கேட்கப்போகிறேன், நீ எனக்குப் பதில் சொல்லவேண்டும். “நான் பூமிக்கு அஸ்திபாரம் போடும்போது நீ எங்கேயிருந்தாய்? உனக்கு விளங்கினால் அதை எனக்குச் சொல். அதின் அளவைக் குறித்தவர் யார்? அதின்மேல் அளவுநூலைப் பிடித்தது யார்? நீ சொல், உனக்குத் தெரிந்திருக்குமே! அதின் தூண்கள் எதன்மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடிவெள்ளிகள் ஒன்றாகக்கூடி பாட்டுப்பாடின; இறைத்தூதர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனரே. “கடல் தன் கருப்பையிலிருந்து வெடித்து வெளிப்பட்டபோது, அதைக் கதவுகளுக்குப் பின்வைத்து அடைத்தவர் யார்? நான் மேகத்தை அதற்கு உடையாக வைத்தபோதும், காரிருளினால் அதைச் சுற்றியபோதும், நான் அதற்கு எல்லைகளை அமைத்துத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் வைத்தபோது நீ எங்கேயிருந்தாய்? நான் அதனிடம், ‘நீ இதுவரை வா, மீறி வராதே; உன் அகங்கார அலைகள் அடங்குவதாக’ என்று சொன்னபோது நீ எங்கேயிருந்தாய்? “உன் வாழ்நாளில் காலைநேரத்திற்குக் கட்டளையிட்டு, அதிகாலைப்பொழுதுக்கு அதின் இடத்தைக் காட்டினதுண்டோ? இவ்வாறு, பூமியின் ஓரங்களைப் பிடித்து அதிலிருந்து கொடியவர்களை உதறித் தள்ளும்படி சொன்னதுண்டோ? முத்திரையிடப்பட்ட களிமண்போல் பூமி உருப்பெறுகிறது; அதின் இயற்கைத் தோற்றங்களும் உடைகளைப்போல் நிற்கின்றன. கொடியவர்களுக்கு வெளிச்சம் மறுக்கப்படுகிறது; உயர்த்தப்பட்ட அவர்களின் புயம் முறிக்கப்படும். “கடலின் ஊற்றுக்களுக்கு நீ போனதுண்டோ? அல்லது ஆழத்தின் உள்ளிடங்களில் நடந்திருக்கிறாயோ? மரண வாசல்கள் உனக்குக் காண்பிக்கப்பட்டதுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ கண்டதுண்டோ? பூமியின் அகன்ற வெளிகளை நீ விளங்கிக்கொண்டாயோ? இவைகளெல்லாம் உனக்குத் தெரியுமானால் எனக்குச் சொல். “வெளிச்சம் வசிக்கும் இடத்திற்குப் போகும் வழி எது? இருள் எங்கே குடியிருக்கிறது? அவற்றை அவை இருக்கும் இடத்திற்குக் கூட்டிச்செல்ல உன்னால் முடியுமா? அவைகள் தங்குமிடத்திற்கான பாதைகளை நீ அறிவாயோ? இவை உனக்குத் தெரிந்திருக்குமே; இவைகளுக்கு முன்னே நீ பிறந்து பல வருடங்கள் வாழ்ந்துவிட்டாய் அல்லவா! “உறைபனியின் களஞ்சியங்களுக்குள் நீ போயிருக்கிறாயோ? பனிக்கட்டி மழையின் களஞ்சியங்களைக் கண்டிருக்கிறாயோ? கஷ்ட காலத்திலும், கலகமும் யுத்தமும் வரும் நாட்களிலும் பயன்படுத்தும்படி நான் அவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன். மின்னல் புறப்படும் இடத்திற்கு வழி எங்கே? கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? பலத்த மழைக்கு வாய்க்காலை வெட்டுபவர் யார்? இடி மின்னலோடு வரும் மழைக்கு வழியை ஏற்படுத்துகிறவர் யார்? ஒருவரும் குடியிராத நிலத்திற்கும், எவருமே இல்லாத பாலைவனத்திற்கும் பசுமையைக் கொடுப்பதற்காகவும், வனாந்திரமான பாழ்நிலத்தை பசுமையாக்கி, அதில் புல் பூண்டுகளை முளைக்கப்பண்ணும்படி செய்கிறவர் யார்? மழைக்கு ஒரு தகப்பன் உண்டோ? பனித்துளிகளைப் பெற்றெடுத்தவர் யார்? யாருடைய கருப்பையிலிருந்து பனிக்கட்டி வருகிறது? வானங்களிலிருந்து வரும் உறைபனியைப் பெற்றெடுக்கிறவர் யார்? தண்ணீர்கள் கல்லைப்போலவும், ஆழத்தின் மேற்பரப்பு உறைந்துபோகவும் செய்கிறவர் யார்? “அழகான கார்த்திகை நட்சத்திரத்தை நீ இணைக்கமுடியுமோ? மிருகசீரிட நட்சத்திரத்தைக் கட்டவிழ்க்க உன்னால் முடியுமோ? விடிவெள்ளிக் கூட்டங்களை அதினதின் காலத்தில் கொண்டுவருவாயோ? சிம்மராசி நட்சத்திரத்தையும் அதின் கூட்டத்தையும் வழிநடத்த உன்னால் முடியுமோ? வானமண்டலத்தை ஆளும் சட்டங்களை நீ அறிவாயோ? பூமியின்மேல் அவைகளின் ஆட்சியை நீ அமைப்பாயோ? “நீ மேகங்களுக்குச் சத்தமிட்டுச் சொல்லி வெள்ளம் உன்னை மூடும்படிச் செய்வாயோ? மின்னல்களின் தாக்குதல்களை அதின் வழியிலே அனுப்புவது நீயா? ‘இதோ பார், நாங்கள் இருக்கிறோம்’ என அவை உன்னிடம் அறிவிக்குமோ? இருதயத்தை ஞானத்தால் நிரப்பியவரும், மனதுக்கு விளங்கும் ஆற்றலைக் கொடுத்தவரும் யார்? யாருக்கு மேகங்களைக் கணக்கிடும் ஞானம்? வானத்தின் தண்ணீர்ச் சாடிகளை, தூசியானது மண்கட்டிகளாகி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்? “நீ சிங்கத்திற்கு இரையை தேடி, அவைகளின் பசியை தீர்ப்பாயோ? சிங்கக்குட்டிகள் குகைகளிலும் புதர்களுக்குள்ளும் இருக்கும்போது அவைகளின் பசியை நீ தீர்ப்பாயோ? காக்கைக்குஞ்சுகள் இறைவனை நோக்கிக் கூப்பிட்டு, உணவின்றி அலையும்போது உணவைக் கொடுப்பது யார்?

யோபு 38:1-41 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: “அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்குப் பதில் சொல் நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதைச் சொல். அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல். அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே. கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: இதுவரை வா, மீறி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து, சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்; அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும். துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான கை முறிக்கப்படும். நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல். வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ? ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும், பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே? பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு, பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும், மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து, வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்? தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே. அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ? நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ? ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ? நீ மின்னல்களை வரவழைத்து, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ? மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்? தூசியானது பரவலாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்? நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி, சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?

யோபு 38:1-41 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது கர்த்தர் சூறாவளியிலிருந்து யோபுவிடம் பேசினார். தேவன்: “மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும், இந்த அறியாமையுள்ள மனிதன் (அஞ்ஞானி) யார்? யோபுவே, நீ இடையைக் கட்டிக்கொள் நான் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு ஆயத்தமாகு. “யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்? நீ அத்தனை கெட்டிக்காரனானால், எனக்குப் பதில் கூறு. நீ அத்தனை கெட்டிக்காரனானால், உலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமென யார் முடிவெடுத்தவர்? அளவு நூலால் யார் உலகை அளந்தார்? பூமியின் அஸ்திபாரம் எங்கு நிலைத்திருக்கிறது? அதன் முதற்கல்லை (கோடிக் கல்லை) வைத்தவர் யார்? காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின, அது நிகழ்ந்தபோது தேவதூதர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்! “யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது, கடலைத் தடை செய்யும்பொருட்டு வாயில்களை அடைத்தது யார்? அப்போது நான் அதனை மேகங்களால் மூடி, அதனை இருளால் பொதிந்து வைத்தேன். நான் கடலுக்கு எல்லையை வகுத்து, அதை அடைத்த வாயிலுக்கு பின்னே நிறுத்தினேன். நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல, உனது பெருமையான அலைகள் இங்கே நின்றுவிடும்’ என்றேன். “யோபுவே, உன் வாழ்க்கையில் என்றைக்காவது நீ காலையை ஆரம்பிக்கவோ, ஒரு நாளைத் தொடங்கவோ கூறமுடியுமா? யோபுவே, பூமியைப் பிடித்து, தீயோரை அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவருமாறு உதறிவிட காலையொளிக்கு நீ கூற முடியுமா? மலைகளையும் பள்ளத்தாக்கையும் எளிதில் காலையொளியில் காணலாம். பகலொளி பூமிக்கு வரும்போது அங்கியின் மடிப்புக்களைப்போல இந்த இடங்களின் அமைப்புக்கள் (வடிவங்கள்) வெளித்தோன்றும். முத்திரையிடப்பட்ட களிமண்ணைப் போல அவ்விடங்கள் வடிவங்கொள்ளும். தீயோர் பகலொளியை விரும்பார்கள். பிரகாசமாக அது ஒளிவிடும்போது, அவர்கள் தீயக் காரியங்களைச் செய்யாதபடி தடுக்கும். “யோபுவே, கடல் புறப்படும் கடலின் ஆழமான பகுதிகளுக்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? சமுத்திரத்தின் அடிப்பகுதியில் நீ எப்போதாவது நடந்திருக்கிறாயா? மரித்தோரின் உலகத்திற்கு வழிகாட்டும் வாயிற் கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? மரணத்தின் இருண்ட இடத்திற்கு வழிகாட்டும் வாயிற்கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? யோபுவே, பூமி எவ்வளவு பெரிய தென்று நீ உண்மையில் அறிந்திருக்கிறாயா? நீ இவற்றை அறிந்திருந்தால், எனக்குக் கூறு. “யோபுவே, ஒளி எங்கிருந்து வருகிறது? எங்கிருந்து இருள் வருகிறது? யோபுவே, ஒளியையும், இருளையும் அவை புறப்படும் இடத்திற்கு நீ திரும்ப கொண்டு செல்ல முடியுமா? அந்த இடத்திற்குப் போகும் வகையை நீ அறிவாயா? யோபுவே, நீ நிச்சயமாக இக்காரியங்களை அறிவாய். நீ வயது முதிர்ந்தவனும் ஞானியுமானவன். நான் அவற்றை உண்டாக்கியபோது நீ உயிரோடிருந்தாய் அல்லவா? “யோபுவே, பனியையும் கல்மழையையும் வைத்திருக்கும் பண்டகசாலைக்குள் நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? தொல்லைகள் மிக்க காலங்களுக்காகவும், போரும் யுத்தமும் நிரம்பிய காலங்களுக்காகவும், நான் பனியையும், கல்மழையையும் சேமித்து வைக்கிறேன். யோபுவே, சூரியன் மேலெழுந்து வருமிடத்திற்கு, அது கிழக்குக் காற்றைப் பூமியெங்கும் வீசச் செய்யுமிடத்திற்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? யோபுவே, மிகுந்த மழைக்காக வானத்தில் பள்ளங்களைத் தோண்டியவர் யார்? இடிமுழக்கத்திற்குப் பாதையை உண்டாகியவர் யார்? யோபுவே, ஜனங்கள் வாழாத இடங்களிலும், மழையைப் பெய்யப்பண்ணுகிறவர் யார்? பாழான அந்நிலத்திற்கு மழை மிகுந்த தண்ணீரைக் கொடுக்கிறது, புல் முளைக்க ஆரம்பிக்கிறது. யோபுவே, மழைக்குத் தகப்பன் (தந்தை) உண்டா? பனித்துளிகள் எங்கிருந்து தோன்றுகின்றன? யோபுவே, பனிக்கட்டிக்கு தாய் உண்டா? வானிலிருந்து விழும் உறை பனியைப் பிறப்பிக்கிறவர் யார்? பாறையைப் போல் கடினமாக நீர் உறைகிறது. சமுத்திரத்தின் மேற்பரப்பும் உறைந்து போகிறது! “நட்சத்திர கூட்டங்களை நீ இணைக்கக் கூடுமா? மிருக சீரிஷத்தின் கட்டை நீ அவிழ்க்க முடியுமா? யோபுவே, நீ சரியான நேரங்களில் வின்மீன் கூட்டங்களை வெளிக்கொணர முடியுமா? (துருவச்சக்கர நட்சத்திரமும் அதைச் சார்ந்த நட்சத்திரங்களும்) கரடியை அதன் குட்டிகளோடு நீ வெளி நடத்த இயலுமா? யோபுவே, வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா? பூமியை அவை ஆளும்படிச் செய்ய உன்னால் முடியுமா? “யோபுவே, நீ மேகங்களை உரக்கக் கூப்பிட்டு உன்னை மழையில் மூடும்படி கட்டளையிட முடியுமா? மின்னல்களுக்கு நீ கட்டளை பிறப்பிக்கக் கூடுமா? அவை உன்னிடம் வந்து, ‘நாங்கள் இங்கு இருக்கிறோம், ஐயா, உனக்கு என்ன வேண்டும்’ எனக் கூறுமா? அவை எங்கெங்குப் போகவேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அங்கெல்லாம் அவை செல்லுமா? “யோபுவே, யார் ஜனங்களை ஞானிகளாக்குகிறார்? அவர்களுக்குள்ளே ஆழமாக ஞானத்தை வைப்பவன் யார்? யோபுவே, மேகங்களை எண்ணுமளவிற்கும் அவற்றின் மழையைப் பொழியத் தூண்டும்படியும் ஞானம் படைத்தவன் யார்? அதனால் துகள்கள் சேறாக மாறி, அழுக்குகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன. “யோபுவே, நீ சிங்கங்களுக்கு இரை தேட முடியுமா? அவற்றின் பசித்த குட்டிகளுக்கு நீ உணவுக் கொடுக்கிறாயா? அச்சிங்கங்கள் அவற்றின் குகைகளில் படுத்திருக்கின்றன. அவற்றின் இரையைத் தாக்குவதற்கு அவை புல்லினுள்ளே பதுங்கிக்கொள்கின்றன. காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கத்தும்போதும், உணவின்றி அங்குமிங்கும் அலையும்போதும் யோபுவே, அவற்றிற்கு உணவு ஊட்டுபவன் யார்? என்றார்.