யோபு 38
38
அத்தியாயம் 38
யெகோவாவின் வார்த்தைகள்
1அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக:
2“அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்?
3இப்போதும் மனிதனைப்போல் ஆடையைக்கட்டிக்கொள்;
நான் உன்னைக் கேட்பேன்;
நீ எனக்குப் பதில் சொல்
4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?
நீ அறிவாளியானால் அதைச் சொல்.
5அதற்கு அளவு குறித்தவர் யார்?
அதின்மேல் நூல்போட்டவர் யார்?
இதை நீ அறிந்திருந்தால் சொல்.
6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது?
அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?
7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி,
தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே.
8கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது,
அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
9மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
10நான் அதற்கு எல்லையைக் குறித்து,
அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:
11இதுவரை வா, மீறி வராதே;
உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
12தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக,
அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க,
13உன் வாழ்நாளிலே எப்போதாவது நீ அதிகாலைக்குக் கட்டளை கொடுத்து,
சூரிய உதயத்திற்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?
14பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல வேறே தோற்றம்கொள்ளும்;
அனைத்தும் ஆடை அணிந்திருக்கிறதுபோலக் காணப்படும்.
15துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்;
மேட்டிமையான கை முறிக்கப்படும். 16நீ சமுத்திரத்தின் அடித்தளங்கள்வரை புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?
17மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ?
மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?
18நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ?
இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்.
19வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே?
இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே?
20அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ?
அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?
21நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ?
உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ?
22உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ?
கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ?
23ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும்,
பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.
24வெளிச்சம் பரப்புகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே?
25பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி,
இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு,
26பூமியெங்கும் மனிதர் குடியில்லாத இடத்திலும்,
மனிதநடமாட்டமில்லாத வனாந்திரத்திலும் மழையைப் பொழியச்செய்து,
27வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும்,
இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?
28மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?
29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது?
ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
30தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து,
ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே.
31அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ?
அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ?
32நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ?
துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
33வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ?
அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ?
34ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று
உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ?
35நீ மின்னல்களை வரவழைத்து,
அவைகள் புறப்பட்டுவந்து: இதோ,
இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ?
36மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்?
உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?
37ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்?
38தூசியானது பரவலாகவும்,
மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும்,
வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?
39நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி,
40சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது,
அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?
41காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு,
ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது,
அவைகளுக்கு இரையைச் சேகரித்துக் கொடுக்கிறவர் யார்?
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யோபு 38: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.