யோபுடைய சரித்திரம் 38:1-41

யோபுடைய சரித்திரம் 38:1-41 TAERV

அப்போது கர்த்தர் சூறாவளியிலிருந்து யோபுவிடம் பேசினார். தேவன்: “மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும், இந்த அறியாமையுள்ள மனிதன் (அஞ்ஞானி) யார்? யோபுவே, நீ இடையைக் கட்டிக்கொள் நான் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு ஆயத்தமாகு. “யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்? நீ அத்தனை கெட்டிக்காரனானால், எனக்குப் பதில் கூறு. நீ அத்தனை கெட்டிக்காரனானால், உலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமென யார் முடிவெடுத்தவர்? அளவு நூலால் யார் உலகை அளந்தார்? பூமியின் அஸ்திபாரம் எங்கு நிலைத்திருக்கிறது? அதன் முதற்கல்லை (கோடிக் கல்லை) வைத்தவர் யார்? காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின, அது நிகழ்ந்தபோது தேவதூதர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்! “யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது, கடலைத் தடை செய்யும்பொருட்டு வாயில்களை அடைத்தது யார்? அப்போது நான் அதனை மேகங்களால் மூடி, அதனை இருளால் பொதிந்து வைத்தேன். நான் கடலுக்கு எல்லையை வகுத்து, அதை அடைத்த வாயிலுக்கு பின்னே நிறுத்தினேன். நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல, உனது பெருமையான அலைகள் இங்கே நின்றுவிடும்’ என்றேன். “யோபுவே, உன் வாழ்க்கையில் என்றைக்காவது நீ காலையை ஆரம்பிக்கவோ, ஒரு நாளைத் தொடங்கவோ கூறமுடியுமா? யோபுவே, பூமியைப் பிடித்து, தீயோரை அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவருமாறு உதறிவிட காலையொளிக்கு நீ கூற முடியுமா? மலைகளையும் பள்ளத்தாக்கையும் எளிதில் காலையொளியில் காணலாம். பகலொளி பூமிக்கு வரும்போது அங்கியின் மடிப்புக்களைப்போல இந்த இடங்களின் அமைப்புக்கள் (வடிவங்கள்) வெளித்தோன்றும். முத்திரையிடப்பட்ட களிமண்ணைப் போல அவ்விடங்கள் வடிவங்கொள்ளும். தீயோர் பகலொளியை விரும்பார்கள். பிரகாசமாக அது ஒளிவிடும்போது, அவர்கள் தீயக் காரியங்களைச் செய்யாதபடி தடுக்கும். “யோபுவே, கடல் புறப்படும் கடலின் ஆழமான பகுதிகளுக்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? சமுத்திரத்தின் அடிப்பகுதியில் நீ எப்போதாவது நடந்திருக்கிறாயா? மரித்தோரின் உலகத்திற்கு வழிகாட்டும் வாயிற் கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? மரணத்தின் இருண்ட இடத்திற்கு வழிகாட்டும் வாயிற்கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? யோபுவே, பூமி எவ்வளவு பெரிய தென்று நீ உண்மையில் அறிந்திருக்கிறாயா? நீ இவற்றை அறிந்திருந்தால், எனக்குக் கூறு. “யோபுவே, ஒளி எங்கிருந்து வருகிறது? எங்கிருந்து இருள் வருகிறது? யோபுவே, ஒளியையும், இருளையும் அவை புறப்படும் இடத்திற்கு நீ திரும்ப கொண்டு செல்ல முடியுமா? அந்த இடத்திற்குப் போகும் வகையை நீ அறிவாயா? யோபுவே, நீ நிச்சயமாக இக்காரியங்களை அறிவாய். நீ வயது முதிர்ந்தவனும் ஞானியுமானவன். நான் அவற்றை உண்டாக்கியபோது நீ உயிரோடிருந்தாய் அல்லவா? “யோபுவே, பனியையும் கல்மழையையும் வைத்திருக்கும் பண்டகசாலைக்குள் நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? தொல்லைகள் மிக்க காலங்களுக்காகவும், போரும் யுத்தமும் நிரம்பிய காலங்களுக்காகவும், நான் பனியையும், கல்மழையையும் சேமித்து வைக்கிறேன். யோபுவே, சூரியன் மேலெழுந்து வருமிடத்திற்கு, அது கிழக்குக் காற்றைப் பூமியெங்கும் வீசச் செய்யுமிடத்திற்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? யோபுவே, மிகுந்த மழைக்காக வானத்தில் பள்ளங்களைத் தோண்டியவர் யார்? இடிமுழக்கத்திற்குப் பாதையை உண்டாகியவர் யார்? யோபுவே, ஜனங்கள் வாழாத இடங்களிலும், மழையைப் பெய்யப்பண்ணுகிறவர் யார்? பாழான அந்நிலத்திற்கு மழை மிகுந்த தண்ணீரைக் கொடுக்கிறது, புல் முளைக்க ஆரம்பிக்கிறது. யோபுவே, மழைக்குத் தகப்பன் (தந்தை) உண்டா? பனித்துளிகள் எங்கிருந்து தோன்றுகின்றன? யோபுவே, பனிக்கட்டிக்கு தாய் உண்டா? வானிலிருந்து விழும் உறை பனியைப் பிறப்பிக்கிறவர் யார்? பாறையைப் போல் கடினமாக நீர் உறைகிறது. சமுத்திரத்தின் மேற்பரப்பும் உறைந்து போகிறது! “நட்சத்திர கூட்டங்களை நீ இணைக்கக் கூடுமா? மிருக சீரிஷத்தின் கட்டை நீ அவிழ்க்க முடியுமா? யோபுவே, நீ சரியான நேரங்களில் வின்மீன் கூட்டங்களை வெளிக்கொணர முடியுமா? (துருவச்சக்கர நட்சத்திரமும் அதைச் சார்ந்த நட்சத்திரங்களும்) கரடியை அதன் குட்டிகளோடு நீ வெளி நடத்த இயலுமா? யோபுவே, வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா? பூமியை அவை ஆளும்படிச் செய்ய உன்னால் முடியுமா? “யோபுவே, நீ மேகங்களை உரக்கக் கூப்பிட்டு உன்னை மழையில் மூடும்படி கட்டளையிட முடியுமா? மின்னல்களுக்கு நீ கட்டளை பிறப்பிக்கக் கூடுமா? அவை உன்னிடம் வந்து, ‘நாங்கள் இங்கு இருக்கிறோம், ஐயா, உனக்கு என்ன வேண்டும்’ எனக் கூறுமா? அவை எங்கெங்குப் போகவேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அங்கெல்லாம் அவை செல்லுமா? “யோபுவே, யார் ஜனங்களை ஞானிகளாக்குகிறார்? அவர்களுக்குள்ளே ஆழமாக ஞானத்தை வைப்பவன் யார்? யோபுவே, மேகங்களை எண்ணுமளவிற்கும் அவற்றின் மழையைப் பொழியத் தூண்டும்படியும் ஞானம் படைத்தவன் யார்? அதனால் துகள்கள் சேறாக மாறி, அழுக்குகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன. “யோபுவே, நீ சிங்கங்களுக்கு இரை தேட முடியுமா? அவற்றின் பசித்த குட்டிகளுக்கு நீ உணவுக் கொடுக்கிறாயா? அச்சிங்கங்கள் அவற்றின் குகைகளில் படுத்திருக்கின்றன. அவற்றின் இரையைத் தாக்குவதற்கு அவை புல்லினுள்ளே பதுங்கிக்கொள்கின்றன. காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கத்தும்போதும், உணவின்றி அங்குமிங்கும் அலையும்போதும் யோபுவே, அவற்றிற்கு உணவு ஊட்டுபவன் யார்? என்றார்.