யோவான் 9:29-41

யோவான் 9:29-41 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசேயுடன் இறைவன் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இவனைப் பற்றியோ, இவன் எங்கிருந்து வந்தான் என்றோ எங்களுக்குத் தெரியாது” என்றார்கள். அதற்கு அவன், “இது வியப்பாயிருக்கிறது! என் கண்களை அவரே திறந்தார். அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தார் என்று உங்களுக்குத் தெரியாது என்கிறீர்களே. இறைவன் பாவிகளுக்குச் செவிகொடுப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். தமது சித்தத்தைச் செய்கிற இறை பக்தியுள்ளவருக்கே அவர் செவிகொடுக்கிறார். பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. அவர் இறைவனிடமிருந்து வந்திராவிட்டால், அவரால் ஒன்றையுமே செய்திருக்க முடியாது” என்றான். அதற்கு அவர்கள், “பிறப்பிலேயே பாவத்தில் மூழ்கியிருந்த நீ எங்களுக்குப் போதிக்கத் துணிந்துவிட்டாயோ!” என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள். யூதத்தலைவர்கள் அவனை ஜெப ஆலயத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டார்கள் என்று இயேசு கேள்விப்பட்டார். இயேசு அவனைத் திரும்பவும் கண்டபோது, “நீ மானிடமகனை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஐயா, அவர் யார் என்று சொல்லும். அப்பொழுது நான் அவரை விசுவாசிக்கிறேன்” என்றான். அதற்கு இயேசு, “நீ அவரை இப்பொழுது பார்க்கிறாய்; உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற நானே அவர்” என்றார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி, அவரை வழிபட்டான். அப்பொழுது இயேசு, “நியாயத்தீர்ப்பிற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். இதனால் பார்வையற்றவர்கள் காண்பார்கள். காண்கிறவர்கள் பார்வையற்றவராவார்கள்” என்றார். அப்பொழுது இயேசுவுடன் இருந்த சில பரிசேயர்கள் இதைக் கேட்டு, “என்ன! நாங்களும் பார்வையற்றோர்களோ?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாயிருந்தால், பாவத்தின் குற்றம் உங்களுக்கு இராது; ஆனால் உங்களால் பார்க்கமுடியும் என்று நீங்கள் சொல்கிறபடியால், குற்றம் உங்கள்மேல் இருக்கிறது” என்றார்.

யோவான் 9:29-41 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம். பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள். அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.

யோவான் 9:29-41 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் மோசேயிடம் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றனர். அதற்கு அம்மனிதன் “இது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இயேசு எங்கிருந்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் என் கண்களைக் குணப்படுத்தினார். பாவிகளுக்கு தேவன் செவிக்கொடுப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம். பக்தியும் கீழ்ப்படிதலும் உள்ள ஒருவனுக்கு தேவன் செவிகொடுப்பார். பிறவி குருட்டு மனிதனைக் குணப்படுத்திய அற்புதம் முதன் முறையாக இப்போதுதான் நிகழ்ந்துள்ளது. இயேசு தேவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். அவர் தேவனிடமிருந்து வந்திராவிட்டால் அவரால் இதுபோன்ற செயல்களைச் செய்ய இயலாது” என்றான். அதற்கு யூதத்தலைவர்கள், “நீ முழுவதும் பாவத்தில் பிறந்திருக்கிறாய். நீ எங்களுக்கு உபதேசிக்க முயற்சிக்கிறாயா?” என்று கேட்டனர். பின்னர் அவனை வெளியே தள்ளினர். அவர்கள் அவனை வெளியேற்றியதை இயேசு அறிந்தார். அவர் அவனிடம் வந்து, “நீ மனிதகுமாரனிடத்தில் நம்பிக்கை உடையவனாக இருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “அவரை நான் நம்பும்படியாக அந்த மனிதகுமாரன் யார் என்று எனக்குச் சொல்லுங்கள்” என்றான். “நீ ஏற்கெனவே அவரைப் பார்த்திருக்கிறாய். இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருப்பவர்தான் அந்த மனிதகுமாரன்” என்றார். உடனே அவன், “ஆண்டவரே! நான் நம்புகிறேன்” என்றான். இயேசுவை அவன் குனிந்து வணங்கினான். “இந்த உலகம் நியாயம் தீர்க்கப்படும்படியாக நான் இந்த உலகத்துக்கு வந்தேன். குருடர்கள் பார்வை பெறும்படியாக நான் வந்தேன். காண்கிறவர்கள் எனத் தம்மை நினைத்துக்கொள்கிறவர்கள் குருடராகும்படியாக நான் வந்தேன்” என்றார் இயேசு. இயேசுவுடன் சில பரிசேயர்களும் இருந்தனர். அவர்கள் இயேசு சொல்வதைக் கேட்டனர். “என்ன? நாங்களும்கூட குருடர்கள் என்றா கூறுகின்றாய்?” எனக் கேட்டனர். இயேசு அவர்களுக்கு, “நீங்கள் உண்மையிலேயே குருடராயிருந்தால் நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகள் அல்ல. ஆனால் உங்களுக்குப் பார்வை உண்டு என நீங்கள் சொல்வதால், நீங்கள் குற்றவாளிகளே” என்றார்.

யோவான் 9:29-41 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள். அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம். பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள். அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்