யோவான் எழுதிய சுவிசேஷம் 9:29-41

யோவான் எழுதிய சுவிசேஷம் 9:29-41 TAERV

தேவன் மோசேயிடம் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றனர். அதற்கு அம்மனிதன் “இது மிகவும் ஆச்சரியமான ஒன்று. இயேசு எங்கிருந்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் என் கண்களைக் குணப்படுத்தினார். பாவிகளுக்கு தேவன் செவிக்கொடுப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம். பக்தியும் கீழ்ப்படிதலும் உள்ள ஒருவனுக்கு தேவன் செவிகொடுப்பார். பிறவி குருட்டு மனிதனைக் குணப்படுத்திய அற்புதம் முதன் முறையாக இப்போதுதான் நிகழ்ந்துள்ளது. இயேசு தேவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். அவர் தேவனிடமிருந்து வந்திராவிட்டால் அவரால் இதுபோன்ற செயல்களைச் செய்ய இயலாது” என்றான். அதற்கு யூதத்தலைவர்கள், “நீ முழுவதும் பாவத்தில் பிறந்திருக்கிறாய். நீ எங்களுக்கு உபதேசிக்க முயற்சிக்கிறாயா?” என்று கேட்டனர். பின்னர் அவனை வெளியே தள்ளினர். அவர்கள் அவனை வெளியேற்றியதை இயேசு அறிந்தார். அவர் அவனிடம் வந்து, “நீ மனிதகுமாரனிடத்தில் நம்பிக்கை உடையவனாக இருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “அவரை நான் நம்பும்படியாக அந்த மனிதகுமாரன் யார் என்று எனக்குச் சொல்லுங்கள்” என்றான். “நீ ஏற்கெனவே அவரைப் பார்த்திருக்கிறாய். இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருப்பவர்தான் அந்த மனிதகுமாரன்” என்றார். உடனே அவன், “ஆண்டவரே! நான் நம்புகிறேன்” என்றான். இயேசுவை அவன் குனிந்து வணங்கினான். “இந்த உலகம் நியாயம் தீர்க்கப்படும்படியாக நான் இந்த உலகத்துக்கு வந்தேன். குருடர்கள் பார்வை பெறும்படியாக நான் வந்தேன். காண்கிறவர்கள் எனத் தம்மை நினைத்துக்கொள்கிறவர்கள் குருடராகும்படியாக நான் வந்தேன்” என்றார் இயேசு. இயேசுவுடன் சில பரிசேயர்களும் இருந்தனர். அவர்கள் இயேசு சொல்வதைக் கேட்டனர். “என்ன? நாங்களும்கூட குருடர்கள் என்றா கூறுகின்றாய்?” எனக் கேட்டனர். இயேசு அவர்களுக்கு, “நீங்கள் உண்மையிலேயே குருடராயிருந்தால் நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகள் அல்ல. ஆனால் உங்களுக்குப் பார்வை உண்டு என நீங்கள் சொல்வதால், நீங்கள் குற்றவாளிகளே” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்