யோவா 9:29-41

யோவா 9:29-41 IRVTAM

மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம். பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள். அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான். இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்