யோவான் 7:32-53
யோவான் 7:32-53 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கூடியிருந்த மக்கள் இயேசுவைக்குறித்து இப்படிப்பட்ட காரியங்களை தங்களுக்குள் மெதுவாய் பேசிக்கொண்டதை பரிசேயர் கேட்டார்கள். எனவே தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்யும்படி, ஆலயக்காவலரை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு, “இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். பின்பு என்னை அனுப்பிய பிதாவிடம் நான் போய்விடுவேன். நீங்களோ என்னைத் தேடுவீர்கள். ஆனால் என்னைக் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கும் உங்களால் வரமுடியாது” என்றார். அப்பொழுது யூதத்தலைவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி, இவன் எங்குபோக இருக்கிறான்? “கிரேக்கருக்குள்ளே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற நம் மக்களிடம்போய், அங்கே கிரேக்கருக்குக் போதிக்க போகிறானா? ‘நீங்களோ என்னைத் தேடுவீர்கள், ஆனால் என்னைக் காணமாட்டீர்கள், நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்லுகிறானே. இதன் அர்த்தம் என்ன?” என்று பேசிக்கொண்டார்கள். பண்டிகையின் கடைசி நாளான அந்தப் பெரிய நாளிலே, இயேசு எழுந்து நின்று சத்தமாய்ச் சொன்னதாவது: “யாராவது தாகமுள்ளவராய் இருந்தால், அவர்கள் என்னிடம் வந்து பானம்பண்ணட்டும். வேதவசனத்தில் சொல்லியிருக்கிறபடி, என்னை விசுவாசிக்கிறவர்களுடைய உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீர் நதியாய் பெருக்கெடுத்து ஓடும்” என்றார். தம்மில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் பின்னர் பெறப்போகும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்தே அவர் இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமையடையாது இருந்தபடியால், பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை. இயேசுவினுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களில் சிலர், “உண்மையிலேயே இவர் வர இருக்கிற இறைவாக்கினனே” என்றார்கள். வேறுசிலரோ, “இவரே கிறிஸ்து” என்றார்கள். ஆனால் இன்னும் சிலர், “கலிலேயாவிலிருந்து எப்படி கிறிஸ்து வருவார்? கிறிஸ்து தாவீதின் குடும்பத்திலிருந்தும், தாவீது வாழ்ந்த பெத்லகேம் பட்டணத்தில் இருந்து வருவார் என்று வேதவசனம் சொல்லுகிறது அல்லவா?” என்றார்கள். இயேசுவின் நிமித்தம் இவ்விதமாய் மக்கள் கருத்து வேறுபட்டார்கள். சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை. பின்பு ஆலயக்காவலர், தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயரிடமும் போனபோது, “நீங்கள் ஏன் அவனைப் பிடித்துக் கொண்டுவரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் அதற்கு மறுமொழியாக, “இந்த மனிதன் பேசியதுபோல் ஒருவனும் ஒருக்காலும் பேசியதில்லையே” என்றார்கள். அப்பொழுது பரிசேயர் அவர்களிடம், “அவன் உங்களையும் ஏமாற்றி விட்டானா? ஆளுநர்களில், அல்லது பரிசேயரைச் சேர்ந்த எவராவது இயேசுவை விசுவாசிக்கிறார்களா? இல்லையே! ஆனால் இந்த மக்களோ மோசேயின் சட்டத்தை அறியாதவர்கள். இவர்கள்மேல் சாபம் உண்டு” என்றார்கள். முன்பு இயேசுவினிடம் போயிருந்தவனும், பரிசேயரைச் சேர்ந்தவனுமான நிக்கொதேமு அவர்களிடம், “ஒருவன் என்ன செய்கிறான் என்று அறியும்படி முதலாவது அவனை விசாரிக்காமல், அவனுக்கு நமது மோசேயின் சட்டம் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கிறதா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவைச் சேர்ந்தவனா? வேதவசனத்தை ஆராய்ந்து பார். அப்பொழுது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் வருவதில்லை என்பதைக் கண்டுகொள்வாய்” என்றார்கள். பின்பு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றார்கள்.
யோவான் 7:32-53 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார். அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ? நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை. மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது. அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை. பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள். காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள். அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா? வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து: ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள். பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
யோவான் 7:32-53 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசுவைப்பற்றி மக்கள் பேசிக்கொள்வதைப் பரிசேயர்கள் அறிந்தனர். தலைமை ஆசாரியரும், பரிசேயரும் தேவாலயச் சேவகர்களை இயேசுவைக் கைதுசெய்ய அனுப்பினர். இயேசு மக்களிடம், “இன்னும் கொஞ்சக் காலம் நான் உங்களோடு இருப்பேன். பிறகு நான் என்னை அனுப்பியவரிடம் திரும்பிப்போவேன். அப்போது என்னை நீங்கள் தேடுவீர்கள். ஆனால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. நான் இருக்கும் இடத்துக்கும் உங்களால் வர முடியாது” என்றார். “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி இவன் எந்த இடத்திற்குப் போகப்போகிறான்? இவன் நமது மக்கள் வாழ்கிற கிரேக்க நகரங்களுக்குப் போகப் போகிறானா? அல்லது அங்கேயுள்ள கிரேக்க மக்களுக்கு உபதேசிக்கப் போகிறானா? ‘நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியாது’ என்று கூறுகிறானே. ‘நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்றும் கூறுகிறானே, அதற்கு என்ன பொருள்?” என்று யூதர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பண்டிகையின் இறுதி நாளும் வந்தது. இது மிக முக்கியமான நாள். அன்று இயேசு எழுந்து நின்று உரத்த குரலில் பேசினார். “ஒருவன் தாகமாய் இருந்தால் அவன் என்னிடம் வந்து பருகட்டும். என்னில் நம்பிக்கை வைக்கிறவனுடைய இதயத்தில் இருந்து ஜீவத் தண்ணீருள்ள ஆறுகள் பெருக்கெடுக்கும், இதைத்தான் வேத வாக்கியங்கள் கூறுகின்றன” என்றார். இயேசு பரிசுத்த ஆவியானவரைப்பற்றி இவ்வாறு பேசினார். இன்னும் மக்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் பகிர்ந்தளிக்கப்படவில்லை. ஏனென்றால் இயேசு இன்னும் மரணமடையவும் இல்லை; மகிமையாக உயிர்த்தெழவும் இல்லை. ஆனால் பிறகு அவரிடம் விசுவாசம் வைக்கப்போகிற மக்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவர். இயேசு சொன்ன இக்காரியங்களை மக்கள் கேட்டனர். சிலர், “இந்த மனிதர் உண்மையான தீர்க்கதரிசிதான்” என்றனர். வேறு சிலரோ, “இவர்தான் கிறிஸ்து” என்றனர். மற்றும் சிலரோ, “கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வரமாட்டார். வேதவாக்கியங்கள், தாவீதின் குடும்பத்திலிருந்து தான் கிறிஸ்து வரப்போகிறார் என்று கூறுகின்றன. அத்துடன் தாவீது வாழ்ந்த பெத்லகேமிலிருந்துதான் கிறிஸ்து வருவார் என்றும் கூறுகின்றன” என்றனர். எனவே, இயேசுவைப் பற்றிய கருத்துக்களில் ஒருவருக்கொருவர் ஒத்துக்கொள்ளவில்லை. சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினர். ஆனால் ஒருவரும் உண்மையில் அவர் மேல் கை வைக்கவில்லை. தேவாலயச் சேவகர்கள் தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயர்களிடமும் திரும்பிப் போனார்கள். “ஏன் இயேசுவைக் கொண்டுவரவில்லை?” என்று அவர்கள் கேட்டனர். தேவாலயச் சேவகர்களோ, “எந்த ஒரு மனிதனும் அவரைப்போல் கருத்துக்களைக் கூறியதில்லை” என்றனர். இதற்குப் பரிசேயர்கள், “அப்படியானால் இயேசு உங்களையும் முட்டாளாக்கிவிட்டார். எந்தத் தலைவராவது இயேசுவின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? இல்லை. எந்தப் பரிசேயராவது அவனை நம்புகிறார்களா? இல்லை. ஆனால் அவரை நம்புகிற மக்கள் மோசேயின் சட்டத்தைப்பற்றி ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனின் சாபத்திற்கு ஆளாவார்கள்” என்றார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் நிக்கொதேமுவும் இருந்தான். நிக்கொதேமுவும் இயேசுவைக் காண்பதற்காகப் போனவர்களில் ஒருவன். அவன், “ஒரு மனிதனைப் பற்றி முழுவதும் கேட்டறிவதற்கு முன்னால் தண்டிப்பதற்கு நம் சட்டம் இடம் கொடுப்பதில்லை. அவன் என்னென்ன செய்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளும்வரை நாம் தீர்ப்பளிக்க முடியாது” என்றான். யூதத் தலைவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவிலிருந்துதான் வந்திருக்கிறாயா? வேதவாக்கியங்களைப் படித்துப் பார். கலிலேயாவிலிருந்து எந்தவொரு தீர்க்கதரிசியும் வர முடியாது என்று நீ அறிந்துகொள்வாய்” என்றனர். யூதத் தலைவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு வீட்டிற்குப் போயினர்.
யோவான் 7:32-53 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார். அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ? நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள். சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள். அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி: ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள். பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.