யோவான் 7:32-53

யோவான் 7:32-53 TCV

கூடியிருந்த மக்கள் இயேசுவைக்குறித்து இப்படிப்பட்ட காரியங்களை தங்களுக்குள் மெதுவாய் பேசிக்கொண்டதை பரிசேயர் கேட்டார்கள். எனவே தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்யும்படி, ஆலயக்காவலரை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு, “இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். பின்பு என்னை அனுப்பிய பிதாவிடம் நான் போய்விடுவேன். நீங்களோ என்னைத் தேடுவீர்கள். ஆனால் என்னைக் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கும் உங்களால் வரமுடியாது” என்றார். அப்பொழுது யூதத்தலைவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி, இவன் எங்குபோக இருக்கிறான்? “கிரேக்கருக்குள்ளே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற நம் மக்களிடம்போய், அங்கே கிரேக்கருக்குக் போதிக்க போகிறானா? ‘நீங்களோ என்னைத் தேடுவீர்கள், ஆனால் என்னைக் காணமாட்டீர்கள், நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்லுகிறானே. இதன் அர்த்தம் என்ன?” என்று பேசிக்கொண்டார்கள். பண்டிகையின் கடைசி நாளான அந்தப் பெரிய நாளிலே, இயேசு எழுந்து நின்று சத்தமாய்ச் சொன்னதாவது: “யாராவது தாகமுள்ளவராய் இருந்தால், அவர்கள் என்னிடம் வந்து பானம்பண்ணட்டும். வேதவசனத்தில் சொல்லியிருக்கிறபடி, என்னை விசுவாசிக்கிறவர்களுடைய உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீர் நதியாய் பெருக்கெடுத்து ஓடும்” என்றார். தம்மில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் பின்னர் பெறப்போகும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்தே அவர் இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமையடையாது இருந்தபடியால், பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை. இயேசுவினுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களில் சிலர், “உண்மையிலேயே இவர் வர இருக்கிற இறைவாக்கினனே” என்றார்கள். வேறுசிலரோ, “இவரே கிறிஸ்து” என்றார்கள். ஆனால் இன்னும் சிலர், “கலிலேயாவிலிருந்து எப்படி கிறிஸ்து வருவார்? கிறிஸ்து தாவீதின் குடும்பத்திலிருந்தும், தாவீது வாழ்ந்த பெத்லகேம் பட்டணத்தில் இருந்து வருவார் என்று வேதவசனம் சொல்லுகிறது அல்லவா?” என்றார்கள். இயேசுவின் நிமித்தம் இவ்விதமாய் மக்கள் கருத்து வேறுபட்டார்கள். சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை. பின்பு ஆலயக்காவலர், தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயரிடமும் போனபோது, “நீங்கள் ஏன் அவனைப் பிடித்துக் கொண்டுவரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் அதற்கு மறுமொழியாக, “இந்த மனிதன் பேசியதுபோல் ஒருவனும் ஒருக்காலும் பேசியதில்லையே” என்றார்கள். அப்பொழுது பரிசேயர் அவர்களிடம், “அவன் உங்களையும் ஏமாற்றி விட்டானா? ஆளுநர்களில், அல்லது பரிசேயரைச் சேர்ந்த எவராவது இயேசுவை விசுவாசிக்கிறார்களா? இல்லையே! ஆனால் இந்த மக்களோ மோசேயின் சட்டத்தை அறியாதவர்கள். இவர்கள்மேல் சாபம் உண்டு” என்றார்கள். முன்பு இயேசுவினிடம் போயிருந்தவனும், பரிசேயரைச் சேர்ந்தவனுமான நிக்கொதேமு அவர்களிடம், “ஒருவன் என்ன செய்கிறான் என்று அறியும்படி முதலாவது அவனை விசாரிக்காமல், அவனுக்கு நமது மோசேயின் சட்டம் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கிறதா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவைச் சேர்ந்தவனா? வேதவசனத்தை ஆராய்ந்து பார். அப்பொழுது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் வருவதில்லை என்பதைக் கண்டுகொள்வாய்” என்றார்கள். பின்பு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றார்கள்.