மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார். அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ? நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை. மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது. அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை. பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள். காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள். அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா? வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து: ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள். பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் யோவா 7
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோவா 7:32-53
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்