யோவான் 7:1-31
யோவான் 7:1-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்கமனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார். யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப்போம். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள். இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார். அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார். பண்டிகையிலே யூதர்கள் அவரைத்தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள். ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை. பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்யமனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார். ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள். விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள். மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள் என்றார். அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத் தேடுகிறார்கள்? இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ? இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள். அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள்.
யோவான் 7:1-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இவைகளுக்குப்பின், இயேசுவைக் கொலைசெய்வதற்கு யூதத்தலைவர்கள் வழி தேடிக்கொண்டிருந்ததால், அவர் யூதேயாவுக்குப் போக விரும்பாமல் கலிலேயாவிலேயே வெவ்வேறு இடங்களுக்குச் சென்றார். ஆனால் யூதரின் கூடாரப்பண்டிகைச் சமீபித்தபோது, இயேசுவின் சகோதரர் அவரிடம், “நீர் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு யூதேயாவுக்குச் செல்லும். அப்பொழுதே நீர் செய்யும் கிரியைகளை உமது சீடர்கள் காண்பார்கள். பிரபலமடைய விரும்புகிற எவனும் இரகசியமாக செயல்படுவதில்லை. நீர் இந்தக் காரியங்களைச் செய்கிறதினால், உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தலாமே” என்றார்கள். ஏனெனில் இயேசுவின் சொந்தச் சகோதரர்கள்கூட அவரை விசுவாசிக்கவில்லை. எனவே இயேசு அவர்களிடம், “எனது நேரம் இன்னும் வரவில்லை; ஆனால் உங்களுக்கோ எந்த நேரமும் சரியானதே. உலகம் உங்களை வெறுக்க முடியாது. உலகத்தின் செயல்கள் தீமையென்று நான் சாட்சிக் கொடுக்கிறதினால் உலகம் என்னை வெறுக்கிறது. இந்தப் பண்டிகைக்கு நீங்கள் போங்கள். நானோ இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை. ஏனெனில் எனக்கேற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார். இதைச் சொல்லிவிட்டு, இயேசு கலிலேயாவிலேயே தங்கியிருந்தார். ஆனால் அவருடைய சகோதரர் பண்டிகைக்குப் போனபின் அவரும் வெளிப்படையாக அல்ல, இரகசியமாகவே சென்றார். அந்தப் பண்டிகையிலே யூதர் இயேசுவைத் தேடிக்கொண்டு, “அவர் எங்கே?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். கூடியிருந்த மக்களுக்கிடையில் இயேசுவைக்குறித்து கருத்து வேறுபாடு இருந்தது. சிலர், “அவர் ஒரு நல்ல மனிதர்” என்றார்கள். மற்றவர்களோ, “அப்படியல்ல, அவன் மக்களை ஏமாற்றுகிறான்” என்றார்கள். ஆனால், அவர்கள் யூதருக்குப் பயந்ததினால், ஒருவரும் அவரைப்பற்றி வெளிப்படையாக எதையும் பேசவில்லை. பண்டிகை நாட்கள் முடிந்தபின்பு இயேசு ஆலய முற்றத்திற்கு போய், அங்கே போதிக்கத் தொடங்கினார். யூதர்களோ வியப்படைந்து, “படிக்காமலே இந்த மனிதனுக்கு இவ்வளவு அறிவு எப்படி வந்தது?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “எனது போதனை என்னுடையது அல்ல, அது என்னை அனுப்பின பிதாவிடமிருந்தே வருகிறது. இறைவனுடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிறவன் எவனோ, அவன் எனது போதனை இறைவனிடமிருந்து வருகிறதா, அல்லது நான் என் சுயமாய் சொல்கிறேனா என்று அறிந்துகொள்வான். தனது சுய சிந்தனையில் பேசுகிறவன் தனக்கே மகிமையைத் தேட முயற்சிக்கிறான். ஆனால் தம்மை அனுப்பியவரின் மகிமையைத் தேடுகிறவன் உண்மையுள்ளவனாய் இருக்கிறான்; அவனில் அநீதி எதுவுமில்லை. மோசே உங்களுக்கு சட்டத்தைக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்கிறதில்லை. நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறீர்கள்?” என்றார். அப்பொழுது கூடியிருந்த கூட்டம், “நீ பிசாசு பிடித்தவன். யார் உன்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்?” என்றார்கள். இயேசு அவர்களிடம், “நான் ஒரு கிரியையை செய்தேன். அதனால் நீங்கள் எல்லோரும் வியப்படைந்திருக்கிறீர்கள். விருத்தசேதனத்தை மோசே உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தான். நீங்கள் ஓய்வுநாளிலும் ஒரு பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்கிறீர்கள். உண்மையிலேயே விருத்தசேதனம் மோசேயினால் ஏற்படுத்தப்படவில்லை. நமது கோத்திரப் பிதாக்களினாலேயே ஏற்படுத்தப்பட்டது. மோசேயின் சட்டம் மீறப்படாதபடி ஒரு பிள்ளை ஓய்வுநாளில் விருத்தசேதனம் பண்ணப்படலாம் என்கிறீர்கள். அப்படியானால் ஓய்வுநாளிலே ஒருவனை முழுவதும் குணமாக்கிய என்மேல் ஏன் கோபம் கொள்கிறீர்கள்? வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பு செய்வதை நிறுத்துங்கள். நீதியாய் தீர்ப்பு செய்யுங்கள்” என்றார். அப்பொழுது எருசலேமைச் சேர்ந்த மக்களில் சிலர், “இந்த மனிதனையல்லவா அவர்கள் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்? இதோ இங்கே இவர் வெளிப்படையாகப் பேசுகிறார். அவர்கள் இவரை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லாதிருக்கிறார்கள். ஒருவேளை அதிகாரத்தில் உள்ளவர்கள் இவர்தான் கிறிஸ்து என்று உண்மையாகவே அறிந்துகொண்டார்களோ? ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று நமக்குத் தெரியும்; ஆனால் கிறிஸ்து வரும்போது, அவர் எங்கிருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாதே” என்று பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது தொடர்ந்து ஆலய முற்றத்தில் போதித்துக்கொண்டிருந்த இயேசு, சத்தமாய் சொன்னதாவது, “ஆம்! நீங்கள் என்னை அறிவீர்கள். நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் என் சுயவிருப்பத்தின்படி வரவில்லை. என்னை அனுப்பிய பிதா உண்மையுள்ளவர். நீங்களோ அவரை அறியவில்லை. நானோ பிதாவை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் அவரிடமிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பினவர்” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் கூடியிருந்த மக்களில் பலர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள். அவர்கள், “கிறிஸ்து வரும்போது, இவர் செய்ததைப் பார்க்கிலும் அதிகமான அடையாளங்களை அவர் செய்வாரோ?” என்றார்கள்.
யோவான் 7:1-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார். யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது. அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும். பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது. உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது. நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார். அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார். பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள். மக்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டானது. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படி இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை. பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார். அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது. அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். சொந்தமாக பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மை உள்ளவனாக இருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார். மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: ஒரே செயலை செய்தேன், அதைக்குறித்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறீர்கள். விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், முன்னோர்களால் உண்டானது; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனிதனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள். மோசேயின் நியாயப்பிரமாணம் மீறாமல் இருக்கும்படி ஓய்வுநாளில் மனிதன் விருத்தசேதனம் பெறலாம் என்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார். அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்? இதோ, இவன் வெளிப்படையாக பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, உண்மையாக இவன் கிறிஸ்து தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ? இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவன் என்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவர் என்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள். அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கும்போது சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் அறிவீர்கள்; நான் நானாகவே வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியம் உள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அவரால் வந்திருக்கிறதினாலும், அவர் என்னை அனுப்பி இருக்கிறதினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய நேரம் இன்னும் வராததினால் ஒருவனும் அவரைத் தொடவில்லை. மக்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைவிட அதிகமாகச் செய்வாரோ என்றார்கள்.
யோவான் 7:1-31 பரிசுத்த பைபிள் (TAERV)
இதற்குப் பிறகு இயேசு கலிலேயாவைச் சுற்றிப் பிரயாணம் செய்தார். அவர் யூதேயா நாட்டில் பிரயாணம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் அங்குள்ள யூதர்கள் அவரைக் கொலை செய்ய விரும்பினர். அப்பொழுது யூதர்களின் கூடாரப் பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகையால் இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், “நீங்கள் இந்த இடத்தை விட்டு பண்டிகைக்காக யூதேயாவிற்கு போங்கள். அங்கே உமது சீஷர்கள் உம்முடைய அற்புதங்களைக் காண்பார்கள். மக்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் அவன், தான் செய்கிற காரியங்களை மறைக்கக் கூடாது. உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்துங்கள். அவர்களும் நீங்கள் செய்யும் அற்புதங்களைக் கண்டுகொள்ளட்டும்” என்றார்கள். (இயேசுவின் சகோதரர்கூட அவரிடம் நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்கள்.) இயேசு தனது சகோதரர்களிடம், “எனக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் நீங்கள் போவதற்கு எந்த நேரமும் சரியான நேரம்தான். இந்த உலகம் உங்களை வெறுப்பதில்லை. ஆனால் உலகம் என்னை வெறுக்கிறது. ஏனென்றால் நான் அவர்களிடம் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்று சொல்கிறேன். ஆகையால் நீங்கள் பண்டிகைக்குப் போங்கள். நான் இப்பொழுது பண்டிகைக்குப் போவதாக இல்லை. எனக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை” என்றார். இயேசு இவற்றைச் சொன்ன பிறகு கலிலேயாவிலேயே தங்கிவிட்டார். எனவே, இயேசுவின் சகோதரர்கள் பண்டிகைக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் போனபிறகு இயேசுவும் போனார். ஆனால் அவர் மக்களுக்குக் காட்சி தரவில்லை. அப்பண்டிகையின்போது யூதர்கள் இயேசுவைத் தேடினார்கள். “எங்கே அந்த மனிதன்?” என்றார்கள். அங்கே ஒரு பெருங்கூட்டம் இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் இயேசுவைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். சிலர் “அவர் மிக நல்ல மனிதர்” என்றனர். ஆனால் வேறு சிலர், “இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன்” என்றனர். ஆனால் எவருக்கும் இயேசுவைப்பற்றி வெளிப்படையாகக் கூறுவதற்குரிய தைரியம் இல்லை. மக்கள் யூதத் தலைவர்களுக்கு அஞ்சினர். பண்டிகை பாதி முடிந்துவிட்டது. பிறகு இயேசு தேவாலயத்துக்குப் போய் அங்கே உபதேசம் செய்தார். யூதர்கள் ஆச்சரியப்பட்டனர். “இந்த மனிதர் பள்ளியில் படித்ததில்லை. இவற்றை இவர் எவ்வாறு கற்றுக்கொண்டார்?” என்று கூறிக்கொண்டனர். “நான் உங்களுக்கு செய்கிற உபதேசம் எனக்குச் சொந்தமானவை அல்ல. அவை என்னை அனுப்பினவரிடமிருந்து எனக்கு வந்தவை. தேவனின் விருப்பப்படி செயல்புரிய ஒருவன் விரும்பினால், அவன் என் உபதேசம் தேவனிடமிருந்து வந்தது என்பதை அறிந்துகொள்வான். அதோடு அவன், இந்த உபதேசம் எனக்குச் சொந்தமானது அல்ல என்பதையும் அறிந்துகொள்வான். தன் சொந்தமான சிந்தனைகளை உபதேசிக்கிற எவனும் தனக்குரிய பெருமையை அடையவே முயற்சிக்கிறான். தன்னை அனுப்பினவரைப் பெருமைப்படுத்த முயற்சிக்கும் ஒருவன் எப்பொழுதும் உண்மையையே பேசுகிறான். அவனிடம் எந்தத் தவறும் இல்லை. மோசே உங்களுக்குச் சில சட்டங்களைக் கொடுத்திருக்கிறார் இல்லையா? ஆனால் உங்களில் எவரும் அதற்குக் கீழ்ப்படிவதில்லை. என்னை ஏன் கொலை செய்ய முயற்சி செய்கிறீர்கள்?” என்று இயேசு கேட்டார். “நீ பிசாசு பிடித்தவன். அதனால்தான் இப்படி உளறுகிறாய். நாங்கள் உன்னைக் கொலை செய்ய முயற்சி செய்யவில்லை” என்று மக்கள் பதில் சொன்னார்கள். “நான் ஓர் அற்புதம் செய்தேன். நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். மோசே விருத்தசேதனம்பற்றிய சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். (ஆனால் உண்மையில் மோசே உங்களுக்கு விருத்தசேதனத்தைத் தரவில்லை. அது மோசேக்கு முற்காலத்திலேயே நமது மக்களிடமிருந்து வந்துவிட்டது) ஆகையால் சில வேளைகளில் ஓய்வு நாட்களிலும் நீங்கள் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள். மோசேயின் கட்டளைக்குக் கீழ்ப்படிய ஓய்வு நாளிலும் ஒரு குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யலாம் என்பதை இது காட்டுகிறது. எனவே, நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனின் முழு சரீரத்தையும் குணமாக்கினேன் என்பதற்காக என்மேல் ஏன் கோபமாக இருக்கிறீர்கள்? வெளித் தோற்றத்தை வைத்து முடிவுக்கு வருவதை நிறுத்துங்கள். சரி எது என்பதைக்கொண்டு அதன் மூலம் நியாயமாக முடிவு செய்யுங்கள்” என்றார் இயேசு. எருசலேமில் உள்ள மக்களில் சிலர் “அவர்கள் கொலை செய்ய முயல்கிற மனிதர் இவர்தான். ஆனால் இவரோ எல்லோரும் காணும்படியும் கேட்கும்படியும் உபதேசம் செய்துகொண்டிருக்கிறார். ஒருவரும் அவர் உபதேசிப்பதை நிறுத்திவிட முயற்சி செய்யவில்லை. ஒருவேளை, யூதத் தலைவர்கள் இவர்தான் உண்மையான கிறிஸ்து என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும். ஆனால் இந்த மனிதர் எங்கிருந்து வருகிறாரென்று நாம் அறிவோம். ஆனால் உண்மையான கிறிஸ்து வரும்போது அவர் எங்கிருந்து வந்தார் என்பது எவருக்கும் தெரியாமல் இருக்கும்” என்றனர். இயேசு தேவாலயத்தில் தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருந்தார். “ஆம், நான் யார் என்பதையும் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. உண்மையான ஒருவரால் நான் அனுப்பப்பட்டேன். நீங்கள் அவரை அறியமாட்டீர்கள். ஆனால் அவரை நான் அறிவேன். நான் அவரிடமிருந்தே வந்தேன். அவர் என்னை அனுப்பினார்” என்றார் இயேசு. இயேசு இவ்வாறு சொன்னபிறகு மக்கள் அவரைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் ஒருவராலும் இயேசுவைத் தொடமுடியவில்லை. இயேசு கொல்லப்படுவதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தார்கள். “நாங்கள் கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். கிறிஸ்து வந்தால், அவர் இந்த மனிதரைவிட அதிகமான அற்புதங்களைச் செய்வாரோ? இல்லை. எனவே, இந்த மனிதரே கிறிஸ்துவாக இருக்க வேண்டும்” என்றனர்.