இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்கமனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார்.
யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது.
அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப்போம்.
பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.
உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
பண்டிகையிலே யூதர்கள் அவரைத்தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.
ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.
பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார்.
அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
அவருடைய சித்தத்தின்படி செய்யமனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள்.
மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள் என்றார்.
அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?
இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள்.