இவைகளுக்குப்பின், இயேசுவைக் கொலைசெய்வதற்கு யூதத்தலைவர்கள் வழி தேடிக்கொண்டிருந்ததால், அவர் யூதேயாவுக்குப் போக விரும்பாமல் கலிலேயாவிலேயே வெவ்வேறு இடங்களுக்குச் சென்றார். ஆனால் யூதரின் கூடாரப்பண்டிகைச் சமீபித்தபோது, இயேசுவின் சகோதரர் அவரிடம், “நீர் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு யூதேயாவுக்குச் செல்லும். அப்பொழுதே நீர் செய்யும் கிரியைகளை உமது சீடர்கள் காண்பார்கள். பிரபலமடைய விரும்புகிற எவனும் இரகசியமாக செயல்படுவதில்லை. நீர் இந்தக் காரியங்களைச் செய்கிறதினால், உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தலாமே” என்றார்கள். ஏனெனில் இயேசுவின் சொந்தச் சகோதரர்கள்கூட அவரை விசுவாசிக்கவில்லை.
எனவே இயேசு அவர்களிடம், “எனது நேரம் இன்னும் வரவில்லை; ஆனால் உங்களுக்கோ எந்த நேரமும் சரியானதே. உலகம் உங்களை வெறுக்க முடியாது. உலகத்தின் செயல்கள் தீமையென்று நான் சாட்சிக் கொடுக்கிறதினால் உலகம் என்னை வெறுக்கிறது. இந்தப் பண்டிகைக்கு நீங்கள் போங்கள். நானோ இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை. ஏனெனில் எனக்கேற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார். இதைச் சொல்லிவிட்டு, இயேசு கலிலேயாவிலேயே தங்கியிருந்தார்.
ஆனால் அவருடைய சகோதரர் பண்டிகைக்குப் போனபின் அவரும் வெளிப்படையாக அல்ல, இரகசியமாகவே சென்றார். அந்தப் பண்டிகையிலே யூதர் இயேசுவைத் தேடிக்கொண்டு, “அவர் எங்கே?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
கூடியிருந்த மக்களுக்கிடையில் இயேசுவைக்குறித்து கருத்து வேறுபாடு இருந்தது. சிலர், “அவர் ஒரு நல்ல மனிதர்” என்றார்கள்.
மற்றவர்களோ, “அப்படியல்ல, அவன் மக்களை ஏமாற்றுகிறான்” என்றார்கள். ஆனால், அவர்கள் யூதருக்குப் பயந்ததினால், ஒருவரும் அவரைப்பற்றி வெளிப்படையாக எதையும் பேசவில்லை.
பண்டிகை நாட்கள் முடிந்தபின்பு இயேசு ஆலய முற்றத்திற்கு போய், அங்கே போதிக்கத் தொடங்கினார். யூதர்களோ வியப்படைந்து, “படிக்காமலே இந்த மனிதனுக்கு இவ்வளவு அறிவு எப்படி வந்தது?” என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “எனது போதனை என்னுடையது அல்ல, அது என்னை அனுப்பின பிதாவிடமிருந்தே வருகிறது. இறைவனுடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிறவன் எவனோ, அவன் எனது போதனை இறைவனிடமிருந்து வருகிறதா, அல்லது நான் என் சுயமாய் சொல்கிறேனா என்று அறிந்துகொள்வான். தனது சுய சிந்தனையில் பேசுகிறவன் தனக்கே மகிமையைத் தேட முயற்சிக்கிறான். ஆனால் தம்மை அனுப்பியவரின் மகிமையைத் தேடுகிறவன் உண்மையுள்ளவனாய் இருக்கிறான்; அவனில் அநீதி எதுவுமில்லை. மோசே உங்களுக்கு சட்டத்தைக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்கிறதில்லை. நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறீர்கள்?” என்றார்.
அப்பொழுது கூடியிருந்த கூட்டம், “நீ பிசாசு பிடித்தவன். யார் உன்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்?” என்றார்கள்.
இயேசு அவர்களிடம், “நான் ஒரு கிரியையை செய்தேன். அதனால் நீங்கள் எல்லோரும் வியப்படைந்திருக்கிறீர்கள். விருத்தசேதனத்தை மோசே உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தான். நீங்கள் ஓய்வுநாளிலும் ஒரு பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்கிறீர்கள். உண்மையிலேயே விருத்தசேதனம் மோசேயினால் ஏற்படுத்தப்படவில்லை. நமது கோத்திரப் பிதாக்களினாலேயே ஏற்படுத்தப்பட்டது. மோசேயின் சட்டம் மீறப்படாதபடி ஒரு பிள்ளை ஓய்வுநாளில் விருத்தசேதனம் பண்ணப்படலாம் என்கிறீர்கள். அப்படியானால் ஓய்வுநாளிலே ஒருவனை முழுவதும் குணமாக்கிய என்மேல் ஏன் கோபம் கொள்கிறீர்கள்? வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பு செய்வதை நிறுத்துங்கள். நீதியாய் தீர்ப்பு செய்யுங்கள்” என்றார்.
அப்பொழுது எருசலேமைச் சேர்ந்த மக்களில் சிலர், “இந்த மனிதனையல்லவா அவர்கள் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்? இதோ இங்கே இவர் வெளிப்படையாகப் பேசுகிறார். அவர்கள் இவரை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லாதிருக்கிறார்கள். ஒருவேளை அதிகாரத்தில் உள்ளவர்கள் இவர்தான் கிறிஸ்து என்று உண்மையாகவே அறிந்துகொண்டார்களோ? ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று நமக்குத் தெரியும்; ஆனால் கிறிஸ்து வரும்போது, அவர் எங்கிருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாதே” என்று பேசத் தொடங்கினார்கள்.
அப்பொழுது தொடர்ந்து ஆலய முற்றத்தில் போதித்துக்கொண்டிருந்த இயேசு, சத்தமாய் சொன்னதாவது, “ஆம்! நீங்கள் என்னை அறிவீர்கள். நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் என் சுயவிருப்பத்தின்படி வரவில்லை. என்னை அனுப்பிய பிதா உண்மையுள்ளவர். நீங்களோ அவரை அறியவில்லை. நானோ பிதாவை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் அவரிடமிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பினவர்” என்றார்.
அப்பொழுது அவர்கள் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் கூடியிருந்த மக்களில் பலர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள். அவர்கள், “கிறிஸ்து வரும்போது, இவர் செய்ததைப் பார்க்கிலும் அதிகமான அடையாளங்களை அவர் செய்வாரோ?” என்றார்கள்.