யோவான் 5:25-47
யோவான் 5:25-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. இக்காலத்திலேயே மரித்தவர்கள் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கிறவர்கள் ஜீவனைப் பெறுவார்கள். பிதா தம்மில்தாமே ஜீவனாய் இருப்பதுபோல, மகனும் தம்மில்தாமே நித்திய ஜீவனாய் இருக்கும்படி செய்கிறார். நான் மானிடமகனாய் இருப்பதால், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரத்தையும் பிதா அவருக்கே கொடுத்திருக்கிறார். “இதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம். ஏனெனில் காலம் வருகிறது, கல்லறைகளில் இருக்கிறவர்கள் எல்லோரும் மானிடமகனுடைய குரலைக் கேட்டு, வெளியே வருவார்கள். நல்ல செயல்களைச் செய்தவர்கள் ஜீவன் பெறும்படி எழுந்திருப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறும்படி எழுந்திருப்பார்கள். சுயமாய் நான் எதையும் செய்ய முடியாதிருக்கிறேன்; பிதா சொல்கிறபடி மட்டுமே நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறேன். எனது நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனெனில் நான் என் சித்தத்தை அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றவே நாடுகிறேன். “என்னைப்பற்றி நானே சாட்சி கூறினால், எனது சாட்சி உண்மையற்றது. எனக்காகச் சாட்சி கூறுகிற இன்னொருவர் இருக்கிறார். என்னைப்பற்றிய அவருடைய சாட்சி உண்மையானது என்று நான் அறிவேன். “நீங்கள் யோவானிடம் ஆட்களை அனுப்பினீர்கள். அவன் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான். மனிதனுடைய சாட்சியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; நீங்கள் இரட்சிக்கப்படும்படியாகவே நான் இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து வெளிச்சம் கொடுத்த ஒரு விளக்காய் இருந்தான். நீங்களும் அவனுடைய வெளிச்சத்தில் சொற்ப காலத்திற்கு மகிழ்ச்சியடைவதைத் தெரிந்துகொண்டீர்கள். “யோவான் கொடுத்த சாட்சியைப் பார்க்கிலும், அதிக மதிப்புள்ள சாட்சி எனக்கு இருக்கிறது. நான் செய்து முடிக்கும்படி பிதா எனக்கு ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். அதையே நான் செய்கிறேன். அந்த வேலையே பிதா என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கிறது. என்னை அனுப்பிய பிதா தாமே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தார். நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவருடைய உருவத்தைக் கண்டதும் இல்லை, அவருடைய வார்த்தை உங்களில் தங்கியிருப்பதும் இல்லை. ஏனெனில் நீங்கள் அவர் அனுப்பியவரை விசுவாசியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. ஆனால் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி என்னிடம் வருவதற்கு உங்களுக்கு விருப்பமில்லை. “மனிதரிடமிருந்து வரும் புகழ்ச்சியை நான் ஏற்றுக்கொள்கிறதில்லை. ஆனால் உங்களை எனக்குத் தெரியும். உங்கள் இருதயத்தில் இறைவனுக்கு அன்பு இல்லை என்பதை நான் அறிவேன். நான் என் பிதாவின் பெயரில் வந்திருக்கிறேன். நீங்களோ என்னை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்; இன்னொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், நீங்கள் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். நீங்களோ ஒருவரிடமிருந்து இன்னொருவர் புகழ்ச்சியை பெற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரே இறைவனாயிருக்கும் அவரிடமிருந்து வரும் புகழைத் தேட முயற்சியாமல் இருக்கிறீர்கள். இப்படியிருக்க நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? “பிதாவுக்கு முன் நான் உங்களைக் குற்றம் சாட்டுவேன் என்று நினைக்கவேண்டாம். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த மோசேயே உங்களைக் குற்றம் சாட்டுவான். நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள். ஏனெனில் அவன் என்னைக் குறித்தே எழுதியிருக்கிறான். மோசே எழுதி வைத்திருப்பதையே நீங்கள் விசுவாசிக்கவில்லை. அப்படியிருக்க நான் சொல்வதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார்.
யோவான் 5:25-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனிதகுமாரனாக இருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், கல்லறைகளில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். நான் தானாக ஒன்றும் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்கு விருப்பமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவிற்கு விருப்பமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாக இருக்கிறது. என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி உண்மையாக இருக்காது. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி உண்மையான சாட்சி என்று அறிந்திருக்கிறேன். நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தான். நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனிதர்களுடைய சாட்சி இல்லை, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்; நீங்களும் சிலநேரம் அவன் வெளிச்சத்திலே மகிழ்ச்சியாக இருக்க விருப்பமாக இருந்தீர்கள். யோவானுடைய சாட்சியைவிட மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அது என்னவென்றால், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான செயல்களே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருபோதும் அவர் சத்தத்தைக் கேட்டதும் இல்லை, அவர் உருவத்தைப் பார்த்ததும் இல்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிக்காதபடியால் அவருடைய வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதும் இல்லை. வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படி இருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு விருப்பம் இல்லை. நான் மனிதர்களால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதும் இல்லை. உங்களில் தேவஅன்பு இல்லை என்று உங்களை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சொந்த பெயரினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள். தேவனாலேமட்டும் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவருக்கு ஒருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினைக்காதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமல் இருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
யோவான் 5:25-47 பரிசுத்த பைபிள் (TAERV)
உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முக்கியமான வேளை வரும். அவ்வேளை ஏற்கெனவே இங்கே இருக்கிறது. பாவத்தில் இறந்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். குமாரனிடமிருந்து கேட்பவற்றை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றார்கள். பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். அத்துடன் அவர் குமாரனுக்கு, அனைத்து மக்களுக்கும் தீர்ப்பளிக்கிற அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அந்தக் குமாரனே மனித குமாரனாக இருக்கிறார். “இதுபற்றி நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் அவரது சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள். “நான் தனியாக எதுவும் செய்வதில்லை. நான் எனக்குச் சொல்லியிருக்கிறபடியே தீர்ப்பளிக்கிறேன். எனவே எனது தீர்ப்பு நீதியானதே. ஏனென்றால் நான் எனக்குப் பிடித்தமானதைச் செய்வதில்லை; என்னை அனுப்பினவருக்குப் பிடித்தமானதையே செய்கிறேன். “நானே என்னைப்பற்றிச் சொல்லி வந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் என்னைக்குறித்து மக்களிடம் சொல்லுகிற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைக் குறித்துச் சொல்வது உண்மையென்று எனக்கும் தெரியும். “நீங்கள் யோவானிடம் சிலரை அனுப்பியிருந்தீர்கள். அவன் உங்களுக்கு உண்மையைப்பற்றிச் சொன்னான். மக்களுக்கு என்னைப்பற்றி ஒருவன் சாட்சி சொல்லி விளக்க வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும்படியாக இவற்றை நான் உங்களுக்குக் கூறுகிறேன். யோவான் எரிந்து ஒளியைக் கொடுக்கிற ஒரு விளக்கைப்போன்றிருந்தான். நீங்கள் அவனது ஒளியைப் பெற்று சில காலம் மகிழ்ச்சி அடைந்தீர்கள். “ஆனால் நான் யோவானைவிடப் பெரியவர் என்பதற்கு என்னிடம் சாட்சி உள்ளது. நான் செய்கிற செயல்களே எனக்கு உரிய சாட்சிகளாகும். இவைகளே என் பிதா, நான் செய்யும்படியாகக் கொடுத்தவை என்பதைக் காட்டுகின்றன. என்னை அனுப்பிய என் பிதா, என்னைப் பற்றி அவரே சாட்சி தருகிறார். ஆனால் நீங்கள் அவர் சத்தத்தை ஒருபொழுதும் கேட்டதில்லை. அவர் எப்படி இருப்பார் என்று நீங்கள் பார்த்ததும் இல்லை. பிதாவின் அறிவுரை உங்களில் வாழ்வதுமில்லை. ஏனென்றால் பிதா அனுப்பிய ஒருவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன. ஆனால் அந்த நித்திய ஜீவனைப் பெற விரும்பும் நீங்கள், என்னிடம் வர மறுக்கின்றீர்கள். “நான் மனிதர்களிடமிருந்து பாராட்டைப் பெற விரும்பவில்லை. ஆனால் நான் உங்களை அறிவேன். தேவனுடைய அன்பு உங்களில் இல்லை என்பதையும் அறிவேன். நான் என் பிதாவிடமிருந்து வந்திருக்கிறேன். நான் அவருக்காகப் பேசுகிறேன். ஆனால் என்னை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். வேறொருவன் வந்து அவன் தனக்காகவே பேசினால் அவனை ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் உங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டுவதில் விருப்பம்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய பாராட்டைப் பெற முயற்சி செய்வதில்லை. ஆகையால் நீங்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? நான் பிதாவின் முன்னால் நின்று உங்களைக் குற்றம் சொல்வேன் என்று நினைக்கவேண்டாம். மோசேதான் உங்கள் குறைகளைச் சொல்கிறவன். மோசே மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மோசேயை நம்பினீர்களானால் என்னிலும் நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஏனென்றால் மோசே என்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான். ஆனால் நீங்கள் மோசே எழுதினவைகளை நம்பமாட்டீர்கள். ஆகையால் நான் சொல்வதையும் உங்களால் நம்பமுடியாது” என்று கூறினார்.
யோவான் 5:25-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான். நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள். தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.