யோவா 5:25-47

யோவா 5:25-47 IRVTAM

மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனிதகுமாரனாக இருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், கல்லறைகளில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். நான் தானாக ஒன்றும் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்கு விருப்பமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவிற்கு விருப்பமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாக இருக்கிறது. என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி உண்மையாக இருக்காது. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி உண்மையான சாட்சி என்று அறிந்திருக்கிறேன். நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தான். நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனிதர்களுடைய சாட்சி இல்லை, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்; நீங்களும் சிலநேரம் அவன் வெளிச்சத்திலே மகிழ்ச்சியாக இருக்க விருப்பமாக இருந்தீர்கள். யோவானுடைய சாட்சியைவிட மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அது என்னவென்றால், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான செயல்களே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருபோதும் அவர் சத்தத்தைக் கேட்டதும் இல்லை, அவர் உருவத்தைப் பார்த்ததும் இல்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிக்காதபடியால் அவருடைய வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதும் இல்லை. வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படி இருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு விருப்பம் இல்லை. நான் மனிதர்களால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதும் இல்லை. உங்களில் தேவஅன்பு இல்லை என்று உங்களை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சொந்த பெயரினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள். தேவனாலேமட்டும் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவருக்கு ஒருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினைக்காதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமல் இருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.