மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. இக்காலத்திலேயே மரித்தவர்கள் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கிறவர்கள் ஜீவனைப் பெறுவார்கள். பிதா தம்மில்தாமே ஜீவனாய் இருப்பதுபோல, மகனும் தம்மில்தாமே நித்திய ஜீவனாய் இருக்கும்படி செய்கிறார். நான் மானிடமகனாய் இருப்பதால், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரத்தையும் பிதா அவருக்கே கொடுத்திருக்கிறார். “இதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம். ஏனெனில் காலம் வருகிறது, கல்லறைகளில் இருக்கிறவர்கள் எல்லோரும் மானிடமகனுடைய குரலைக் கேட்டு, வெளியே வருவார்கள். நல்ல செயல்களைச் செய்தவர்கள் ஜீவன் பெறும்படி எழுந்திருப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறும்படி எழுந்திருப்பார்கள். சுயமாய் நான் எதையும் செய்ய முடியாதிருக்கிறேன்; பிதா சொல்கிறபடி மட்டுமே நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறேன். எனது நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனெனில் நான் என் சித்தத்தை அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றவே நாடுகிறேன். “என்னைப்பற்றி நானே சாட்சி கூறினால், எனது சாட்சி உண்மையற்றது. எனக்காகச் சாட்சி கூறுகிற இன்னொருவர் இருக்கிறார். என்னைப்பற்றிய அவருடைய சாட்சி உண்மையானது என்று நான் அறிவேன். “நீங்கள் யோவானிடம் ஆட்களை அனுப்பினீர்கள். அவன் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான். மனிதனுடைய சாட்சியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; நீங்கள் இரட்சிக்கப்படும்படியாகவே நான் இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து வெளிச்சம் கொடுத்த ஒரு விளக்காய் இருந்தான். நீங்களும் அவனுடைய வெளிச்சத்தில் சொற்ப காலத்திற்கு மகிழ்ச்சியடைவதைத் தெரிந்துகொண்டீர்கள். “யோவான் கொடுத்த சாட்சியைப் பார்க்கிலும், அதிக மதிப்புள்ள சாட்சி எனக்கு இருக்கிறது. நான் செய்து முடிக்கும்படி பிதா எனக்கு ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். அதையே நான் செய்கிறேன். அந்த வேலையே பிதா என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கிறது. என்னை அனுப்பிய பிதா தாமே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தார். நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவருடைய உருவத்தைக் கண்டதும் இல்லை, அவருடைய வார்த்தை உங்களில் தங்கியிருப்பதும் இல்லை. ஏனெனில் நீங்கள் அவர் அனுப்பியவரை விசுவாசியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. ஆனால் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி என்னிடம் வருவதற்கு உங்களுக்கு விருப்பமில்லை. “மனிதரிடமிருந்து வரும் புகழ்ச்சியை நான் ஏற்றுக்கொள்கிறதில்லை. ஆனால் உங்களை எனக்குத் தெரியும். உங்கள் இருதயத்தில் இறைவனுக்கு அன்பு இல்லை என்பதை நான் அறிவேன். நான் என் பிதாவின் பெயரில் வந்திருக்கிறேன். நீங்களோ என்னை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்; இன்னொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், நீங்கள் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். நீங்களோ ஒருவரிடமிருந்து இன்னொருவர் புகழ்ச்சியை பெற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரே இறைவனாயிருக்கும் அவரிடமிருந்து வரும் புகழைத் தேட முயற்சியாமல் இருக்கிறீர்கள். இப்படியிருக்க நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? “பிதாவுக்கு முன் நான் உங்களைக் குற்றம் சாட்டுவேன் என்று நினைக்கவேண்டாம். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த மோசேயே உங்களைக் குற்றம் சாட்டுவான். நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள். ஏனெனில் அவன் என்னைக் குறித்தே எழுதியிருக்கிறான். மோசே எழுதி வைத்திருப்பதையே நீங்கள் விசுவாசிக்கவில்லை. அப்படியிருக்க நான் சொல்வதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் யோவான் 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோவான் 5:25-47
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்