யோவான் 21:7-19

யோவான் 21:7-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது இயேசுவுக்கு அன்பான சீடன், “அவர் கர்த்தர்” என்று பேதுருவிடம் கூறினான். அவர் கர்த்தர் என்று அவன் சொன்னதைச் சீமோன் பேதுரு கேட்டவுடனே, அவன், தான் மேலுடைகளின்றி நின்றதினால் இடையில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் குதித்தான். மற்றச் சீடரோ மீன்கள் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு படகிலே வந்தார்கள். ஏனெனில் அவர்கள் கரையிலிருந்து அதிக தூரத்தில் இருக்கவில்லை. அவர்கள் ஏறக்குறைய தொண்ணூறு மீட்டர் தூரத்திலேயே இருந்தார்கள். அவர்கள் கரைக்கு வந்தபோது, அங்கே எரிகின்ற நெருப்புத்தழலின்மேல் மீன் வைக்கப்பட்டிருப்பதையும், சில அப்பங்கள் இருப்பதையும் கண்டார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் பிடித்த மீன்களிலும் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்துக்கொண்டுவந்தான். வலை 153 பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அவ்வளவு மீன்கள் இருந்துங்கூட வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “வந்து சாப்பிடுங்கள்” என்றார். அவருடைய சீடர்களில் ஒருவரும், “நீர் யார்?” என்று கேட்கத் துணியவில்லை. அவர் கர்த்தர் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். இயேசு வந்து அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். மீனையும் அப்படியே கொடுத்தார். இயேசு மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்தபின்பு தமது சீடர்களுக்குக் காட்சியளித்தது இது மூன்றாவது முறையாகும். அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பு, இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ என்னில் அதிக அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்” என்றான். அப்பொழுது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளைப் பராமரிப்பாயாக” என்றார். இயேசு இரண்டாவது முறை அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னில் அன்பு கூறுகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று உமக்குத் தெரியும்” என்றான். அப்பொழுது இயேசு, “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்றார். மூன்றாவது முறை அவர் அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். மூன்றாவது முறை, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று இயேசு கேட்டதனால் பேதுரு துக்கமடைந்து, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறீர்” என்றான். இயேசு அவனிடம், “என் ஆடுகளைப் பராமரிப்பாயாக என்றார். மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன், நீ இளைஞனாய் இருந்தபோது, நீயே உடை உடுத்திக்கொண்டு நீ விரும்பிய இடத்திற்குப் போனாய்; ஆனால் நீ முதிர்வயதாகும்போது நீ உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உனக்கு உடை உடுத்தி, நீ போகவிரும்பாத இடத்திற்கு உன்னை வழிநடத்திக் கொண்டுபோவான்” என்றார். பேதுரு எவ்விதமான மரணத்தை ஏற்றுக்கொண்டு இறைவனை மகிமைப்படுத்தப் போகிறான் என்பதைக் காட்டும்படியாகவே இயேசு இதைச் சொன்னார். பின்பு அவர் அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.

யோவான் 21:7-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான். மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார். சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார். அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார்.

யோவான் 21:7-19 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் பேதுருவிடம் “இவர் ஆண்டவர்” என்றார். “அவர் இயேசு” என்று சொல்லக் கேட்டவுடன் பேதுரு, இதுவரை மூடப்படாத தன் சரீரத்தை ஆடையால் மூடினான். பிறகு அவன் கடலுக்குள் குதித்துவிட்டான். மற்ற சீஷர்கள் படகின் மூலம் கரைக்குச் சென்றனர். அவர்கள் மீன் நிறைந்த வலையை இழுத்தனர். அவர்கள் கரையிலிருந்து வெகு தூரத்தில் கடலுக்குள் இருக்கவில்லை. ஏறக்குறைய 200 முழம் தூரத்துக்குள்ளேயே இருந்தனர். அவர்கள் படகிலிருந்து இறங்கிக் கரைக்கு வந்தனர். அங்கே கரி அடுப்பு பற்றவைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அதில் மீன்களும் அப்பமும் சுடப்பட்டிருந்தன. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்தான். அது பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அதில் 153 மீன்கள் இருந்தன. மீன்கள் மிகவும் கனமுடையனவாய் இருந்தன. எனினும் வலை கிழியாமல் இருந்தது. இயேசு அவர்களிடம் “வாருங்கள், சாப்பிடுங்கள்” என்றார். அவர்களில் எவரும் “நீங்கள் யார்?” என்று தைரியமாகக் கேட்கவில்லை. அவர்தான் இயேசு கிறிஸ்து என்று அவர்கள் தெரிந்திருந்தனர். இயேசு உணவின் அருகில் சென்றார். அவர் அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அத்துடன் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இவ்வாறு மூன்றாவது முறையாகத் தம் சீஷர்களுக்குக் காட்சி தந்தார். உண்டு முடித்ததும் இயேசு பேதுருவிடம், “யோவானின் குமாரனான சீமோனே! மற்றவர்கள் நேசிப்பதைவிட என்னை நீ மிகுதியாக நேசிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்குப் பேதுரு, “ஆம் ஆண்டவரே, நான் நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான். பிறகு இயேசு அவனிடம், “எனது ஆட்டுக் குட்டிகளைக் கவனித்துக்கொள்” என்றார். மீண்டும் பேதுருவிடம் இயேசு “யோவானின் குமாரனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார். “ஆம் ஆண்டவரே. நான் உம்மை நேசிப்பது உமக்குத் தெரியும்” என்று பேதுரு சொன்னான். பிறகு பேதுருவிடம் இயேசு, “எனது மந்தையைக் கவனித்துக்கொள்” என்று சொன்னார். மூன்றாவது முறையாக இயேசு “யோவானின் குமாரனான சீமோனே என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார். இயேசு மூன்றுமுறை இவ்வாறு கேட்டதால் பேதுருவுக்கு வருத்தமாக இருந்தது. பேதுரு அவரிடம், “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும். நான் உம்மை நேசிப்பதும் உமக்குத் தெரியும்” என்றான். பேதுருவிடம் இயேசு “எனது மந்தையைக் கவனித்துக்கொள். நான் உனக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீ இளைஞனாக இருந்தபோது, உனது இடுப்புவாரை நீயே கட்டிக்கொண்டு விரும்பும் இடங்களுக்கு சென்றாய். ஆனால் நீ முதியவன் ஆகும்போது உன் கைகளை நீட்டுவாய். வேறு ஒருவன் உன் இடுப்புவாரைக் கட்டிவிடுவான். அதோடு உனக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கும் உன்னை இழுத்துக்கொண்டு போவான்” என்றார். (எவ்வாறு பேதுரு மரணம் அடைந்து தேவனுக்கு மகிமைசேர்க்கப் போகிறான் என்பதைக் குறிப்பிட்டே இயேசு இவ்வாறு கூறினார்.) பிறகு இயேசு பேதுருவிடம் “என்னைப் பின்தொடர்ந்து வா” என்று கூறினார்.

யோவான் 21:7-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். மற்ற சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழ தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார். சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். இயேசு மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம். அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். நீ இளயவதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.