யோவான் 21:7-19

யோவான் 21:7-19 TCV

அப்பொழுது இயேசுவுக்கு அன்பான சீடன், “அவர் கர்த்தர்” என்று பேதுருவிடம் கூறினான். அவர் கர்த்தர் என்று அவன் சொன்னதைச் சீமோன் பேதுரு கேட்டவுடனே, அவன், தான் மேலுடைகளின்றி நின்றதினால் இடையில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் குதித்தான். மற்றச் சீடரோ மீன்கள் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு படகிலே வந்தார்கள். ஏனெனில் அவர்கள் கரையிலிருந்து அதிக தூரத்தில் இருக்கவில்லை. அவர்கள் ஏறக்குறைய தொண்ணூறு மீட்டர் தூரத்திலேயே இருந்தார்கள். அவர்கள் கரைக்கு வந்தபோது, அங்கே எரிகின்ற நெருப்புத்தழலின்மேல் மீன் வைக்கப்பட்டிருப்பதையும், சில அப்பங்கள் இருப்பதையும் கண்டார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் பிடித்த மீன்களிலும் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்துக்கொண்டுவந்தான். வலை 153 பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அவ்வளவு மீன்கள் இருந்துங்கூட வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “வந்து சாப்பிடுங்கள்” என்றார். அவருடைய சீடர்களில் ஒருவரும், “நீர் யார்?” என்று கேட்கத் துணியவில்லை. அவர் கர்த்தர் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். இயேசு வந்து அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். மீனையும் அப்படியே கொடுத்தார். இயேசு மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்தபின்பு தமது சீடர்களுக்குக் காட்சியளித்தது இது மூன்றாவது முறையாகும். அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பு, இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ என்னில் அதிக அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்” என்றான். அப்பொழுது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளைப் பராமரிப்பாயாக” என்றார். இயேசு இரண்டாவது முறை அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னில் அன்பு கூறுகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று உமக்குத் தெரியும்” என்றான். அப்பொழுது இயேசு, “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்றார். மூன்றாவது முறை அவர் அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். மூன்றாவது முறை, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று இயேசு கேட்டதனால் பேதுரு துக்கமடைந்து, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறீர்” என்றான். இயேசு அவனிடம், “என் ஆடுகளைப் பராமரிப்பாயாக என்றார். மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன், நீ இளைஞனாய் இருந்தபோது, நீயே உடை உடுத்திக்கொண்டு நீ விரும்பிய இடத்திற்குப் போனாய்; ஆனால் நீ முதிர்வயதாகும்போது நீ உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உனக்கு உடை உடுத்தி, நீ போகவிரும்பாத இடத்திற்கு உன்னை வழிநடத்திக் கொண்டுபோவான்” என்றார். பேதுரு எவ்விதமான மரணத்தை ஏற்றுக்கொண்டு இறைவனை மகிமைப்படுத்தப் போகிறான் என்பதைக் காட்டும்படியாகவே இயேசு இதைச் சொன்னார். பின்பு அவர் அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.