யோவான் எழுதிய சுவிசேஷம் 21:7-19

யோவான் எழுதிய சுவிசேஷம் 21:7-19 TAERV

எனவே இயேசுவிடம் அன்பாயிருந்த சீஷன் பேதுருவிடம் “இவர் ஆண்டவர்” என்றார். “அவர் இயேசு” என்று சொல்லக் கேட்டவுடன் பேதுரு, இதுவரை மூடப்படாத தன் சரீரத்தை ஆடையால் மூடினான். பிறகு அவன் கடலுக்குள் குதித்துவிட்டான். மற்ற சீஷர்கள் படகின் மூலம் கரைக்குச் சென்றனர். அவர்கள் மீன் நிறைந்த வலையை இழுத்தனர். அவர்கள் கரையிலிருந்து வெகு தூரத்தில் கடலுக்குள் இருக்கவில்லை. ஏறக்குறைய 200 முழம் தூரத்துக்குள்ளேயே இருந்தனர். அவர்கள் படகிலிருந்து இறங்கிக் கரைக்கு வந்தனர். அங்கே கரி அடுப்பு பற்றவைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அதில் மீன்களும் அப்பமும் சுடப்பட்டிருந்தன. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி வலையைக் கரைக்கு இழுத்தான். அது பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அதில் 153 மீன்கள் இருந்தன. மீன்கள் மிகவும் கனமுடையனவாய் இருந்தன. எனினும் வலை கிழியாமல் இருந்தது. இயேசு அவர்களிடம் “வாருங்கள், சாப்பிடுங்கள்” என்றார். அவர்களில் எவரும் “நீங்கள் யார்?” என்று தைரியமாகக் கேட்கவில்லை. அவர்தான் இயேசு கிறிஸ்து என்று அவர்கள் தெரிந்திருந்தனர். இயேசு உணவின் அருகில் சென்றார். அவர் அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அத்துடன் மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, இவ்வாறு மூன்றாவது முறையாகத் தம் சீஷர்களுக்குக் காட்சி தந்தார். உண்டு முடித்ததும் இயேசு பேதுருவிடம், “யோவானின் குமாரனான சீமோனே! மற்றவர்கள் நேசிப்பதைவிட என்னை நீ மிகுதியாக நேசிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்குப் பேதுரு, “ஆம் ஆண்டவரே, நான் நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான். பிறகு இயேசு அவனிடம், “எனது ஆட்டுக் குட்டிகளைக் கவனித்துக்கொள்” என்றார். மீண்டும் பேதுருவிடம் இயேசு “யோவானின் குமாரனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார். “ஆம் ஆண்டவரே. நான் உம்மை நேசிப்பது உமக்குத் தெரியும்” என்று பேதுரு சொன்னான். பிறகு பேதுருவிடம் இயேசு, “எனது மந்தையைக் கவனித்துக்கொள்” என்று சொன்னார். மூன்றாவது முறையாக இயேசு “யோவானின் குமாரனான சீமோனே என்னை நீ நேசிக்கிறாயா?” என்று கேட்டார். இயேசு மூன்றுமுறை இவ்வாறு கேட்டதால் பேதுருவுக்கு வருத்தமாக இருந்தது. பேதுரு அவரிடம், “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும். நான் உம்மை நேசிப்பதும் உமக்குத் தெரியும்” என்றான். பேதுருவிடம் இயேசு “எனது மந்தையைக் கவனித்துக்கொள். நான் உனக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீ இளைஞனாக இருந்தபோது, உனது இடுப்புவாரை நீயே கட்டிக்கொண்டு விரும்பும் இடங்களுக்கு சென்றாய். ஆனால் நீ முதியவன் ஆகும்போது உன் கைகளை நீட்டுவாய். வேறு ஒருவன் உன் இடுப்புவாரைக் கட்டிவிடுவான். அதோடு உனக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கும் உன்னை இழுத்துக்கொண்டு போவான்” என்றார். (எவ்வாறு பேதுரு மரணம் அடைந்து தேவனுக்கு மகிமைசேர்க்கப் போகிறான் என்பதைக் குறிப்பிட்டே இயேசு இவ்வாறு கூறினார்.) பிறகு இயேசு பேதுருவிடம் “என்னைப் பின்தொடர்ந்து வா” என்று கூறினார்.