எரேமியா 15:15-18

எரேமியா 15:15-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே! நீர் என்னை அறிந்திருக்கிறீர். என்னை நினைவுகூர்ந்து என்னை ஆதரியும். என்னைத் துன்பப்படுத்தியவர்களை பழிவாங்கும். நீர் நீடிய பொறுமையுடையவர். நீர் என்னை எடுத்துப்போடாதேயும். உமக்காக நான் எவ்வளவு நிந்தையைச் சகித்தேன் என்பதையும் நினைத்துப் பாரும். உமது வார்த்தைகள் எனக்கு வந்தபோது, நான் அவைகளை உட்கொண்டேன். சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே! உமது பெயரை நான் தரித்திருக்கிறபடியால், அவ்வார்த்தைகள் என் சந்தோஷமும், என் இருதயத்தின் களிப்புமாயிருந்தன. நான் ஒருபோதும் பரியாசக்காரருடைய கூட்டத்தில் சேர்ந்து மகிழ்ந்ததில்லை. உமது கரம் என்மேல் இருந்தபடியால், நான் தனிமையாய் இருந்தேன். நீர் என்னை கோபத்தினால் நிரப்பினீர். ஏன் என்னுடைய வேதனை முடிவடையாமல் இருக்கிறது. ஏன் எனது காயம் கடுமையாயும், ஆறாமலும் இருக்கிறது? நீர் எனக்கு ஒரு ஏமாற்றும் நீரோடையைப் போலவும், ஊற்றெடுக்காத ஓடையைப் போலவும் இருப்பீரோ? என்றேன்.

எரேமியா 15:15-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு எனக்காக நீதியைச் செய்யும்; உம்முடைய நீடிய பொறுமையினால் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய காரணமாக நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும். உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பெயர் எனக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை; உமது கைகளுக்காக தனித்து உட்கார்ந்தேன்; சோர்வினால் என்னை நிரப்பினீர். என் வியாதி நீண்டகாலமாகவும், என் காயம் ஆறாத பெரிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற தண்ணீரைப்போலவும் இருப்பீரோ?

எரேமியா 15:15-18 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே! நீர் என்னை அறிவீர். என்னை நினைவில் வைத்துள்ளீர். என்னை கவனித்துக்கொள்வீர். ஜனங்கள் என்னைப் புண்படுத்துகிறார்கள். அந்த ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும். நீர் ஜனங்களோடு பொறுமையாக இருக்கிறீர். நீர் அவர்களுடன் பொறுமையாக இருப்பதால் என்னை அழித்து விடாதேயும். என்னை நினைத்துப் பாரும். கர்த்தாவே நான் உமக்காக அடைந்த வலியை எண்ணிப் பாரும். உமது செய்தி எனக்கு வந்தது. நான் உமது வார்த்தைகளை உண்டேன். உமது செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று. நான் உமது நாமத்தால் அழைக்கப்படுவதில் மகிழ்ந்தேன். உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில் ஒருபோதும் இருந்ததில்லை. உமது நோக்கம் என்மேல் இருப்பதால் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன். என்னைச் சுற்றிலும் தீமை நடக்கும்போது, நீர் என்னைக் கோபத்தால் நிரப்பினீர். நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்? என்று எனக்குப் புரியவில்லை. எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை? அல்லது குணப்படுத்த முடியவில்லை? என்பது எனக்குப் புரியவில்லை. கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன். நீர், ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர். நீர், ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர்.

எரேமியா 15:15-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடிய பொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும். உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது. நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர். என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?