எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 15

15
1கர்த்தர் என்னிடம், “எரேமியா இப்பொழுது மோசேயும் சாமுவேலும் இருந்து யூதாவின் ஜனங்களுக்காக ஜெபம் செய்தாலும் நான் இந்த ஜனங்களுக்காக இரக்கப்படுவதில்லை. என்னைவிட்டு யூத ஜனங்களை தூர அனுப்பு, அவர்களைப் போகும்படி சொல். 2அந்த ஜனங்கள் உன்னைக் கேட்கலாம், ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று நீ அவர்களுக்கு இதனைச் சொல் என்றார். இதுதான் கர்த்தர் சொன்னது:
“சில ஜனங்களை மரிப்பதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,
அந்த ஜனங்கள் மரிப்பார்கள்,
சில ஜனங்களை வாளால் கொல்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள்.
நான் சில ஜனங்களை பசியால் மரிக்க தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அந்த ஜனங்கள் பசியால் மரிப்பார்கள்.
நான் சில ஜனங்களைச் சிறைபிடிக்கப்பட்டு அந்நிய நாட்டிற்குக் கொண்டுபோகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அவர்கள் அந்நியநாடுகளில் கைதிகளாக இருப்பார்கள்.
3நான் அவர்களுக்கு எதிராக நான்கு வகை அழிவு சக்திகளை அனுப்புவேன்”
இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது.
“நான் எதிரியை ஒரு வாளோடு கொல்வதற்கு அனுப்புவேன்.
நான் நாய்களை அவர்களது உடல்களை வெளியே இழுத்துவர அனுப்புவேன்.
நான் வானத்து பறவைகளையும், காட்டு மிருகங்களையும்
அவர்களது உடல்களை உண்ணவும் அழிக்கவும் அனுப்புவேன்.
4நான் யூதாவின் ஜனங்களை பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும்
ஒரு பயங்கரமான செயலுக்கான உதாரணமாகச் செய்வேன்.
நான் இதனை யூதா ஜனங்களுக்காகச் செய்வேன்.
ஏனென்றால், மனாசே எருசலேமில் செய்ததுதான்.
மனாசே எசேக்கியா ராஜாவின் குமாரன்.
மனாசே யூதாவின் ராஜா.”
5“உனக்காக எவனும் வருத்தப்படமாட்டான்.
எருசலேம் நகரமே, எவனும் உனக்காக பரிதாபப்படவோ அழவோமாட்டான்.
எவனும், ‘நீ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்க தனது வழியிலிருந்து திரும்பிக் கேட்கமாட்டான்!
6எருசலேமே, நீ என்னை விட்டு விலகினாய்.”
இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது:
“மீண்டும், மீண்டும் என்னை விட்டு விலகினாய் எனவே,
நான் உன்னைத் தண்டித்து அழிப்பேன்.
நான் உனது தண்டனையை நிறுத்தி வைத்தே களைத்துப்போனேன்.
7நான் எனது தூற்றுக் கட்டையால் யூதா ஜனங்களைத் தனியாகப் பிரித்துப்போடுவேன்.
நான் அவர்களை நகர வாசல்களில் சிதறச் செய்வேன்.
எனது ஜனங்கள் மாறவில்லை.
எனவே, நான் அவர்களை அழிப்பேன்.
நான் அவர்களது பிள்ளைகளை வெளியே எடுப்பேன்.
8பல பெண்கள் தம் கணவனை இழப்பார்கள்.
கடற்கரையில் உள்ள மணல்களை விட விதவைகள் மிகுதியாக இருப்பார்கள்.
மதிய வேளையில் நான் அழிக்கிறவனை அழைத்து வருவேன்.
யூதாவிலுள்ள இளைஞர்களின் தாய்மார்களை அழிக்கிறவன் தாக்குவான்.
நான் யூதா ஜனங்களுக்கு துன்பத்தையும் பயத்தையும் கொண்டு வருவேன்.
மிக விரைவில் இது நிகழுமாறு நான் செய்வேன்.
9எதிரி தன் வாள்களால் தாக்கி ஜனங்களைக் கொல்வான்.
யூதாவிலுள்ள மீதியிருப்பவர்களை அவர்கள் கொல்வார்கள்.
ஒரு பெண்ணுக்கு ஏழு குமாரர்கள் இருக்கலாம்.
ஆனாலும் அவர்கள் மரித்துப்போவார்கள்.
அவள் பலவீனமாகி மூச்சுவிடமுடியாத நிலை அடையும்வரை அழுவாள்.
அவள் திகைப்பும் குழப்பமும் அடைவாள்.
அவளது ஒளிமயமான பகல் துன்பமான இருட்டாகும்.”
எரேமியா மீண்டும் தேவனிடம் முறையிடுகிறான்
10தாயே! நீ எனக்கு பிறப்பைக் கொடுத்ததற்காக
நான் (எரேமியா) வருந்துகிறேன்.
தேசத்துக்கெல்லாம் வாதும் வழக்கும் உள்ளவனாக நான் இருக்கிறேன்.
நான் கடன் கொடுத்ததுமில்லை,
கடன் வாங்கியதுமில்லை.
ஆனால் ஒவ்வொருவனும் என்னை சபிக்கிறான்.
11உண்மையாக கர்த்தாவே, நான் உமக்கு நன்கு தொண்டு செய்துள்ளேன்.
நெருக்கடி நேரத்தில் என் பகைவர்களைக்குறித்து உம்மிடம் ஜெபம் செய்தேன்.
தேவன் எரேமியாவிற்குப் பதிலளிக்கிறார்
12“எரேமியா எவராலும் ஒரு இரும்புத் துண்டைக்கூட
உடைக்க முடியாது என்பதை நீ அறிவாய்.
வடக்கிலிருந்து வருகிற அந்த விதமான இரும்பைக் குறித்து நான் குறிப்பிடுகிறேன்.
எவராலும் ஒரு வெண்கலத் துண்டையும் உடைக்க முடியாது.
13யூதாவின் ஜனங்களுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன.
நான் அவற்றை மற்ற ஜனங்களுக்குக் கொடுப்பேன்.
அந்த மற்றவர்கள் அச்செல்வத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.
நான் அவர்களுக்கு அச்செல்வத்தைக் கொடுப்பேன்.
ஏனென்றால் யூதாவிடம் பல பாவங்கள் உள்ளன.
யூதாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஜனங்கள் பாவம் செய்தனர்.
14யூதாவின் ஜனங்களே! நான் உங்களை உமது பகைவர்களின் அடிமைகளாக்குவேன்.
நீங்கள் எப்போதும் அறிந்திராத நாடுகளில் அடிமைகளாக இருப்பீர்கள்.
நான் மிகக் கோபமாக இருக்கிறேன்.
எனது கோபம் சூடான நெருப்பு போல் உள்ளது.
நீ எரிக்கப்படுவாய்.”
15கர்த்தாவே! நீர் என்னை அறிவீர்.
என்னை நினைவில் வைத்துள்ளீர்.
என்னை கவனித்துக்கொள்வீர்.
ஜனங்கள் என்னைப் புண்படுத்துகிறார்கள்.
அந்த ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்.
நீர் ஜனங்களோடு பொறுமையாக இருக்கிறீர்.
நீர் அவர்களுடன் பொறுமையாக இருப்பதால்
என்னை அழித்து விடாதேயும்.
என்னை நினைத்துப் பாரும்.
கர்த்தாவே நான் உமக்காக அடைந்த வலியை எண்ணிப் பாரும்.
16உமது செய்தி எனக்கு வந்தது.
நான் உமது வார்த்தைகளை உண்டேன்.
உமது செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று.
நான் உமது நாமத்தால் அழைக்கப்படுவதில் மகிழ்ந்தேன்.
உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
17நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில்
ஒருபோதும் இருந்ததில்லை.
உமது நோக்கம் என்மேல் இருப்பதால் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன்.
என்னைச் சுற்றிலும் தீமை நடக்கும்போது, நீர் என்னைக் கோபத்தால் நிரப்பினீர்.
18நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்?
என்று எனக்குப் புரியவில்லை.
எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?
அல்லது குணப்படுத்த முடியவில்லை?
என்பது எனக்குப் புரியவில்லை.
கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன்.
நீர், ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர்.
நீர், ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர்.
19பிறகு, கர்த்தர், “எரேமியா, நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், பிறகு நான் உன்னைத் தண்டிக்கமாட்டேன்.
நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால்,
நீ எனக்கு சேவை செய்யலாம்.
நீ பயனற்ற வார்த்தைகளைப் பேசாமல்,
முக்கியமானவற்றைப்பற்றி பேசினால் பின் நீ எனக்காகப் பேசமுடியும்.
யூதாவின் ஜனங்கள் மாறி உன்னிடம் திரும்பி வருவார்கள்.
ஆனால் நீ மாறி அவர்களைப்போல் இருக்க வேண்டாம்.
20நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்வேன்.
அந்த ஜனங்கள் உன்னை பலமுடையவர்களாக,
வெண்கலத்தாலான சுவரைப்போன்று எண்ணுவார்கள்.
யூதாவின் ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிடுவார்கள்.
ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உனக்கு உதவுவேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21“நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன்.
அந்த ஜனங்கள் உன்னை பயப்படுத்துவார்கள்.
ஆனால் நான் உன்னை அவர்களிடமிருந்து காப்பேன்.”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 15: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்