எரேமியா 1:1-10

எரேமியா 1:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இல்க்கியாவின் மகன் எரேமியாவின் வார்த்தைகள்: இல்க்கியா பென்யமீன் பிரதேசத்தில் உள்ள ஆனதோத் என்ற ஊரில் வசித்த ஆசாரியர்களில் ஒருவன். யூதாவின் அரசனாயிருந்த ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக் காலத்தின் பதின்மூன்றாம் வருடத்தில், யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. தொடர்ந்து யூதாவின் அரசனாயிருந்த, யோசியாவின் மகன் யோயாக்கீமின் ஆட்சிக்காலம் முழுவதிலும், யூதாவின் அரசனாயிருந்த யோசியாவின் மகன் சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருடம் ஐந்தாம் மாதம் முடியும் வரையும், யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. அப்பொழுதுதான் எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்டார்கள். யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர் என்னிடம், “உன் தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கும் முன்பே நான் உன்னை அறிந்தேன், நீ பிறக்கும் முன்பே எனக்கு ஊழியம் செய்யும்படி நான் உன்னை பிரித்தெடுத்தேன்; நாடுகளுக்கு இறைவாக்கினனாக உன்னை நியமித்தேன்” என்றார். அதற்கு நான், “ஆண்டவராகிய யெகோவாவே, எப்படிப் பேசவேண்டுமென்று எனக்குத் தெரியாது; நான் சிறுபிள்ளை தானே” என்றேன். ஆனால் யெகோவா என்னிடம் சொன்னதாவது, “நான் ஒரு சிறுபிள்ளை தானே” என்று நீ சொல்லாதே; நான் உன்னை அனுப்பும் ஒவ்வொருவரிடமும் நீ போய் நான் கட்டளையிடுவதையெல்லாம் சொல்லவேண்டும். நீ அவர்களுக்குப் பயப்படாதே. ஏனெனில் நான் உன்னோடிருக்கிறேன், நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது யெகோவா தமது கரத்தை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம், “இப்பொழுது என் வார்த்தைகளை உன் வாயில் வைத்திருக்கிறேன். இதோ பார், நாடுகளுக்கும் அரசுகளுக்கும் மேலாக அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் நான் இன்று உன்னை நியமித்திருக்கிறேன்” என்றார்.

எரேமியா 1:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் மகன் எரேமியாவினுடைய வசனங்கள்: ஆமோனுடைய மகனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருடத்தில் எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானது. அப்புறம் யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் அரசாட்சியின் நாட்களிலும், யோசியாவின் மகனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருடத்து முடிவுவரையும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப் போகும்வரைக்கும் யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது. யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குவதற்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்செய்து, உன்னை தேசங்களுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். அப்பொழுது நான்: ஆ யெகோவாவாகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். ஆனாலும் யெகோவா: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லோரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காப்பதற்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லி, யெகோவா தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன். பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் தேசங்களின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று யெகோவா என்னுடனே சொன்னார்.

எரேமியா 1:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

இவை எரேமியாவின் செய்திகள். இல்க்கியா என்ற பெயருள்ள மனிதரின் குமாரன் எரேமியா. ஆனதோத் என்ற நகரத்தில் வாழ்ந்த ஆசாரியரின் குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அந்நகரமானது பென்யமீனின் கோத்திரத்தினருக்குரிய நாட்டில் இருந்தது. கர்த்தர், யூதா நாட்டின் ராஜாவாக யோசியா இருந்தபோது அந்நாட்களில் எரேமியாவுடன் பேசத்தொடங்கினார். யோசியா, ஆமோன் என்ற பெயருடைய மனிதரின் குமாரனாகும். கர்த்தர், யோசியாவின் ஆட்சியில் 13வது ஆண்டில் எரேமியாவுடன் பேச ஆரம்பித்தார். யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் இருந்தபோதும் அந்தக் காலத்தில் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். யோயாக்கீம் யோசியாவின் குமாரன், யூதாவின் ராஜாவாக சிதேக்கியா இருந்த பதினோறு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். சிதேக்கியாவும் யோசியாவின் குமாரனாக இருந்தான். சிதேக்கியா ராஜாவாக இருந்த பதினொன்றாவது ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் சிறையெடுக்கப்பட்டனர். கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர், “உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே நான் உன்னை அறிவேன். நீ பிறப்பதற்கு முன்பு உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார். பிறகு எரேமியா, “ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு சிறுவன்” என்றான். ஆனால் கர்த்தர் என்னிடம், “‘நீ சிறுவன்’ என்றுச் சொல்லாதே. நான் அனுப்புகிற எல்லா இடங்களுக்கும் நீ போகவேண்டும், நான் சொல்லுகிறவற்றை எல்லாம் நீ பேசவேண்டும்” என்றார். “எவருக்கும் பயப்படவேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. பிறகு கர்த்தர் தனது கரத்தை நீட்டி எனது வாயைத் தொட்டார், கர்த்தர் என்னிடம், “எரேமியா, நான் எனது வார்த்தைகளை உனது வாய்க்குள் வைக்கிறேன். இன்று நான் உன்னை நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்திருக்கிறேன். நீ வேரோடு பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் செய்வாய்” என்றார்.

எரேமியா 1:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்: ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி, கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.