எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:1-10

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:1-10 TAERV

இவை எரேமியாவின் செய்திகள். இல்க்கியா என்ற பெயருள்ள மனிதரின் குமாரன் எரேமியா. ஆனதோத் என்ற நகரத்தில் வாழ்ந்த ஆசாரியரின் குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அந்நகரமானது பென்யமீனின் கோத்திரத்தினருக்குரிய நாட்டில் இருந்தது. கர்த்தர், யூதா நாட்டின் ராஜாவாக யோசியா இருந்தபோது அந்நாட்களில் எரேமியாவுடன் பேசத்தொடங்கினார். யோசியா, ஆமோன் என்ற பெயருடைய மனிதரின் குமாரனாகும். கர்த்தர், யோசியாவின் ஆட்சியில் 13வது ஆண்டில் எரேமியாவுடன் பேச ஆரம்பித்தார். யூதாவின் ராஜாவாக யோயாக்கீம் இருந்தபோதும் அந்தக் காலத்தில் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். யோயாக்கீம் யோசியாவின் குமாரன், யூதாவின் ராஜாவாக சிதேக்கியா இருந்த பதினோறு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். சிதேக்கியாவும் யோசியாவின் குமாரனாக இருந்தான். சிதேக்கியா ராஜாவாக இருந்த பதினொன்றாவது ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் சிறையெடுக்கப்பட்டனர். கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர், “உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே நான் உன்னை அறிவேன். நீ பிறப்பதற்கு முன்பு உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார். பிறகு எரேமியா, “ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு சிறுவன்” என்றான். ஆனால் கர்த்தர் என்னிடம், “‘நீ சிறுவன்’ என்றுச் சொல்லாதே. நான் அனுப்புகிற எல்லா இடங்களுக்கும் நீ போகவேண்டும், நான் சொல்லுகிறவற்றை எல்லாம் நீ பேசவேண்டும்” என்றார். “எவருக்கும் பயப்படவேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. பிறகு கர்த்தர் தனது கரத்தை நீட்டி எனது வாயைத் தொட்டார், கர்த்தர் என்னிடம், “எரேமியா, நான் எனது வார்த்தைகளை உனது வாய்க்குள் வைக்கிறேன். இன்று நான் உன்னை நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்திருக்கிறேன். நீ வேரோடு பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் செய்வாய்” என்றார்.

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 1:1-10 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்