எரேமியா 1:1-10

எரேமியா 1:1-10 TCV

இல்க்கியாவின் மகன் எரேமியாவின் வார்த்தைகள்: இல்க்கியா பென்யமீன் பிரதேசத்தில் உள்ள ஆனதோத் என்ற ஊரில் வசித்த ஆசாரியர்களில் ஒருவன். யூதாவின் அரசனாயிருந்த ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக் காலத்தின் பதின்மூன்றாம் வருடத்தில், யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. தொடர்ந்து யூதாவின் அரசனாயிருந்த, யோசியாவின் மகன் யோயாக்கீமின் ஆட்சிக்காலம் முழுவதிலும், யூதாவின் அரசனாயிருந்த யோசியாவின் மகன் சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருடம் ஐந்தாம் மாதம் முடியும் வரையும், யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. அப்பொழுதுதான் எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்டார்கள். யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர் என்னிடம், “உன் தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கும் முன்பே நான் உன்னை அறிந்தேன், நீ பிறக்கும் முன்பே எனக்கு ஊழியம் செய்யும்படி நான் உன்னை பிரித்தெடுத்தேன்; நாடுகளுக்கு இறைவாக்கினனாக உன்னை நியமித்தேன்” என்றார். அதற்கு நான், “ஆண்டவராகிய யெகோவாவே, எப்படிப் பேசவேண்டுமென்று எனக்குத் தெரியாது; நான் சிறுபிள்ளை தானே” என்றேன். ஆனால் யெகோவா என்னிடம் சொன்னதாவது, “நான் ஒரு சிறுபிள்ளை தானே” என்று நீ சொல்லாதே; நான் உன்னை அனுப்பும் ஒவ்வொருவரிடமும் நீ போய் நான் கட்டளையிடுவதையெல்லாம் சொல்லவேண்டும். நீ அவர்களுக்குப் பயப்படாதே. ஏனெனில் நான் உன்னோடிருக்கிறேன், நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது யெகோவா தமது கரத்தை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம், “இப்பொழுது என் வார்த்தைகளை உன் வாயில் வைத்திருக்கிறேன். இதோ பார், நாடுகளுக்கும் அரசுகளுக்கும் மேலாக அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் நான் இன்று உன்னை நியமித்திருக்கிறேன்” என்றார்.

எரேமியா 1:1-10 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்