நியாயாதிபதிகள் 16:1-17

நியாயாதிபதிகள் 16:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் சிம்சோன் பெலிஸ்திய பட்டணம் காசாவுக்குப் போனபோது அங்கே ஒரு வேசியைக் கண்டான். அவன் அங்கு சென்று அன்று இரவை அவளுடன் கழித்தான். காசாவின் மக்கள், “சிம்சோன் இங்கே இருக்கிறான்” என்று கேள்விப்பட்டபோது, அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து இரவு முழுவதும் பட்டணத்து வாசலில் பதுங்கியிருந்தார்கள். இரவுவேளையில் ஒன்றும் செய்யாமல், காலையில் அவன் வெளியில் வரும்போது அவனைக் கொலைசெய்யக் காத்திருந்தனர். ஆனால் சிம்சோன் நள்ளிரவு வரையுமே அங்கு படுத்திருந்தான். பின்பு அவன் எழுந்து பட்டணத்து வாசல் கதவுகளையும், அதன் இரண்டு நிலைகளையும், தாழ்ப்பாள்களையும் பிடுங்கி எடுத்து அவற்றைத் தன் தோளில் சுமந்துகொண்டு, எப்ரோனை நோக்கியுள்ள மலை உச்சிக்குப் போனான். சில நாட்களுக்குபின் அவன் சோராக் பள்ளத்தாக்கில் வசித்த தெலீலாள் என்னும் பெண்ணில் அன்பு வைத்தான். பெலிஸ்தியரின் ஆளுநர்கள் அவளிடம் சென்று, “நீ அவனுடன் நயமாகப் பேசி, இப்பெரிய ஆற்றல்மிக்க பெலன் எங்கிருந்து வருகிறது என்ற இரகசியத்தைக் காட்டும்படி அவனை வசப்படுத்த முடியுமா என்று பார். நாங்கள் அவனை மேற்கொண்டு கட்டியடிக்க முடியுமா என்று பார். நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு சேக்கல் நிறையுள்ள வெள்ளிக்காசை உனக்குத் தருவோம்” என்றார்கள். எனவே தெலீலாள் சிம்சோனிடம், “உனது இப்பெரிய வலிமையின் இரகசியத்தையும், எப்படி உன்னைக் கீழ்ப்படுத்திக் கட்டலாம் என்பதையும் எனக்குச் சொல்” எனக் கேட்டாள். அதற்கு சிம்சோன் அவளிடம், “யாராவது என்னை ஏழு காயாத தோல் வார்களினால் கட்டினால், மற்ற மனிதர்களைப்போல நானும் பெலனற்றவனாவேன்” என்று பதிலளித்தான். அப்பொழுது பெலிஸ்தியரின் ஆளுநர்கள் ஏழு காயாத தோல்வார்களை அவளிடம் கொடுத்தார்கள். அவள் அவனை அவற்றால் கட்டினாள். அந்த மனிதர்களை அறைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு, “சிம்சோனே இதோ பெலிஸ்தியர்கள் உன்னைப் பிடிக்க வந்துவிட்டார்கள்” என்று சொன்னாள். அப்பொழுது அவன் தன்னைக் கட்டியிருந்த அந்த தோல்வார்களை நெருப்புப்பட்ட கயிறுகளை அறுப்பதுபோல இலகுவாக அறுத்தான். எனவே அவனுடைய வல்லமை எங்கிருந்து வந்தது என்பதன் இரகசியம் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்பொழுது தெலீலாள் சிம்சோனிடம், “நீ என்னை ஏமாற்றி விட்டாய். நீ எனக்குப் பொய் சொல்லியிருக்கிறாய். இப்பொழுது நீ எதனால் உன்னைக் கட்டலாம் என்று எனக்குச் சொல்” என்றாள். அதற்கு அவன், “ஒருபோதும் பயன்படுத்தப்படாத புதிய கயிறுகளால் என்னைப் பாதுகாப்பாகக் கட்டினால், நானும் மற்ற மனிதர்களைப்போல பெலனற்றவனாவேன்” என்றான். எனவே தெலீலாள் புதியகயிறுகளை எடுத்து அவனைக் கட்டினாள். பின்பு அந்த மனிதர்கள் அறைக்குள் பதுங்கியிருக்கும்போது அவள், “சிம்சோனே பெலிஸ்தியர் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றாள். அவனோ தன் கையில் கட்டியிருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். அப்பொழுது தெலீலாள் சிம்சோனிடம், “இதுவரைக்கும் நீ என்னை ஏமாற்றிக்கொண்டும், பொய் சொல்லிக்கொண்டும் இருக்கிறாய். உன்னை எதனால் கட்டமுடியும் என்று இப்பொழுது எனக்குச் சொல்” என்றாள். அதற்கு அவன், “என் தலைமயிரில் உள்ள ஏழு சடைகளை எடுத்து அவற்றை நெசவுத்தறியிலுள்ள நூல் பாவோடு சேர்த்து நெசவுசெய்து ஆணியால் இறுக்கினால், நான் மற்ற மனிதரைப்போல் பெலனற்றவனாவேன்” எனச் சொன்னான். எனவே அவள் அவன் நித்திரையாயிருக்கும்போது, அவன் தலைமயிரில் ஏழு சடைகளை எடுத்து நெசவுத்தறி நூல் பாவோடு நெசவுசெய்து ஆணியால் இறுக்கினாள். திரும்பவும் அவள் அவனை அழைத்து, “சிம்சோனே பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றாள். உடனே அவன் நித்திரை விட்டெழுந்து பின்னலை ஆணியடிக்கப்பட்டிருந்த நெசவுத்தறியோடு பிடுங்கிக்கொண்டு போனான். அப்பொழுது அவள் அவனிடம், “என்னில் முழுநம்பிக்கை இல்லாதபோது, ‘உன்னை நேசிக்கிறேன்’ என்று எப்படிச் சொல்லலாம் என்றாள். உனது வலிமைமிக்க பெலன் எங்கிருந்து வருகின்றதென்ற இரகசியத்தைச் சொல்லாமல் மூன்றாவது முறையாக என்னை ஏமாற்றியிருக்கிறாயே” என்றாள். இவ்வாறு அவள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நச்சரித்துத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்ததால் அவன் தாங்கமுடியாத அளவு சோர்வடைந்தான். எனவே அவன் அவளிடம், “என்னுடைய தலையில் இதுவரை சவரக்கத்தி பட்டதேயில்லை. ஏனெனில் நான் பிறந்தது முதற்கொண்டே இறைவனுக்கென வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருக்கிறேன்; எனது தலைசவரம் செய்யப்பட்டால் என் பெலன் என்னைவிட்டுப் போய்விடும். நான் மற்ற மனிதரைப்போல பெலனற்ற மனிதனாவேன்” என அவன் எல்லாவற்றையும் அவளிடம் சொன்னான்.

நியாயாதிபதிகள் 16:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான். அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊர்க்காரர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை சுற்றிவளைத்து இரவுமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் காத்திருந்து இரவு முழுவதும் பேசாமல் இருந்தார்கள். சிம்சோன் நடுஇரவுவரை படுத்திருந்து, நடு இரவில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடுப் பெயர்த்து, தன்னுடைய தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனான். அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான். அவளிடத்திற்கு பெலிஸ்தர்களின் அதிபதிகள் போய்: நீ அவனை வசப்படுத்தி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டி பலவீனப்படுத்துவதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் 1,100 வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன்னுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னை பலவீனப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள். அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளினாலே என்னைக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளை அவளிடம் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள். மறைந்திருக்கிறவர்கள் உள் அறையிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப் பட்டவுடனே அறுந்துபோகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவனுடைய பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று அவர்களால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னை ஏமாற்றி, எனக்கு பொய் சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று என்னிடம் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் பயன்படுத்தாமலிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: மறைந்திருக்கிறவர்கள் உள் அறையில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன்னுடைய புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னை ஏமாற்றி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினால் கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என்னுடைய தலைமுடியின் ஏழு ஜடைகளை நெசவுநூல் தறியோடு பின்னிவிட்டால் மற்ற மனிதர்களைப்போல் ஆவேன் என்றான். அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு எழுந்து, நெசவு ஆணியையும் தறியையும் பிடுங்கிக்கொண்டு போனான். அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன்னுடைய இருதயம் என்னோடு இல்லாமலிருக்க, உன்னை நேசிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுமுறைகளும் என்னைப் பரியாசம் செய்தாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று என்னிடம் சொல்லாமல் போனாயே என்று சொல்லி, இப்படி அவனைத் தினம்தினம் தன்னுடைய வார்த்தைகளினாலே நெருக்கி தொந்தரவுசெய்தபடியால், சாகத்தக்கதாக அவனுடைய ஆத்துமா துக்கப்பட்டு, தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலை சிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

நியாயாதிபதிகள் 16:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான். அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான். காசா நகர ஜனங்களிடம், “சிம்சோன் இங்கு வந்திருக்கிறான்” என்று யாரோ தெரிவித்தனர். அவர்கள் அவனைக் கொல்ல எண்ணினார்கள். எனவே, அவன் இருந்த இடத்தை சூழ்ந்தனர். அவர்கள் மறைந்திருந்து சிம்சோனின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்கள் நகர வாயிலருகே இரவு முழுவதும் அமைதியாகத் தங்கியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “காலையில் சிம்சோனைக் கொல்வோம்” என்று பேசிக்கொண்டனர். ஆனால் சிம்சோன் அவ்விலைமகளோடு நள்ளிரவுவரை மட்டுமே தங்கியிருந்தான். சிம்சோன் நள்ளிரவில் விழித்தெழுந்தான். சிம்சோன் நகரவாயில் கதவுகளை பிடித்து, மதிலிலிருந்து தளர்த்திப் பெயர்த்தெடுத்தான். சிம்சோன் கதவுகளையும், அவற்றின் இரண்டு தூண்களையும், கதவுகளை மூடும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டான். சிம்சோன் அதை தோளில் சுமந்துக்கொண்டு, எபிரோன் நகருக்கு அருகிலுள்ள மலையின்மீது ஏறினான். பின்னர் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பெண்ணை நேசித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள். பெலிஸ்திய ஜனங்களின் தலைவர்கள் தெலீலாளிடம் சென்றனர். அவர்கள், “சிம்சோனைப் பெலசாலியாக வைத்திருப்பது எதுவென்று நாங்கள் அறிய விரும்புகிறோம். அவனது இரகசியத்தை உனக்குத் தெரிவிக்குமாறு நீ ஏதேனும் தந்திரம் செய். அப்போது அவனைப் பிடித்துக் கட்டுவது எப்படியென்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். பிறகு அவனைக் கட்டுப்படுத்துவதும் எளிதாயிருக்கும். நீ இதைச் செய்தால் நாங்கள் ஒவ்வொரு வரும் உனக்கு 28 பவுண்டு எடையுள்ள வெள்ளியைக் கொடுப்போம்” என்றார்கள். எனவே தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் எதனால் பெலசாலியாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். எவ்வாறு உங்களைக் கட்டி பெலவீனப்படுத்த முடியும்?” என்று கேட்டாள். சிம்சோன் பதிலாக, “ஏழு பச்சையான உலராத வில் நாண்களால் என்னைக் கட்டவேண்டும். அவ்வாறு செய்தால் நான் பிறரைப் போன்று பெலனற்றவனாவேன்” என்றான். அப்போது பெலிஸ்தியரின் அதிகாரிகள் தெலீலாளிடம் ஏழு பச்சையான வில் நாண்களைக் கொண்டு வந்தனர். அவை இன்னும் உலர்ந்திருக்கவில்லை. அவற்றால் தெலீலாள் சிம்சோனைக் கட்டினாள். சிலர் அடுத்த அறையில் ஒளித்திருந்தனர். தெலீலாள் சிம்சோனிடம், “சிம்சோன், உங்களைப் பெலிஸ்தியர்கள் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். ஆனால் சிம்சோன் எளிதாக அந்த வில் நாண்களை அறுத்துப்போட்டான். விளக்கில் எரியும் திரியிலுள்ள சாம்பலைப் போன்று அவைத் தெறித்து விழுந்தன. எனவே பெலிஸ்தியர்கள் சிம்சோனின் பெலத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளவில்லை. அப்போது தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் என்னிடம் பொய் சொன்னீர்கள்! என்னை முட்டாளாக்கினீர்கள். உண்மையைத் தயவுசெய்து எனக்குக் கூறுங்கள். எப்படி, யாரால் உங்களைக் கட்டிப்போட முடியும்?” என்று கேட்டாள். சிம்சோன், “யாராவது என்னை முன்னால் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் கட்டவேண்டும். அவ்வாறு யாரேனும் எனக்குச் செய்தால் நானும் பிற மனிதர்களைப் போன்று பெலமிழந்தவனாகிவிடுவேன்” என்றான். எனவே தெலீளாள் சில புதுக்கயிறுகளை எடுத்து சிம்சோனைக் கட்டினாள். சில ஆட்கள் அடுத்த அறையில் ஒளித்துக்கொண்டிருந்தனர். தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கபோகிறார்கள்!” என்றாள். ஆனால் அவன் கயிறுகளை எளிதாக அறுத்துவிட்டான். நூலை அறுத்தாற்போன்று அவன் கயிறுகளை அறுத்தெறிந்தான். பின்பு தெலீலாள் சிம்சோனை நோக்கி, “நீங்கள் என்னிடம் மீண்டும் பொய் சொல்லிவிட்டீர்கள்! என்னை முட்டாள் ஆக்கிவிட்டீர்கள். இப்போது உங்களை ஒருவன் எவ்வாறு கட்டக்கூடும் என்பதைக் கூறுங்கள்” என்றாள். சிம்சோன், “நீ என் தலைமயிரின் 7 ஜடைகளையும் நெசவு தறியால் நெய்து அதனைப் பின்னலிட்டு இறுகக் கட்டினால் நானும் பிற மனிதரைப்போல் பெலமற்றவனாவேன்” என்றான். பின் சிம்சோன் உறங்கப்போனான். தெலீலாள் நெசவுத் துணியின் நூலைப் பயன்படுத்தி அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் நெய்தாள். பின் தறியை நிலத்தில் ஒரு கூடார ஆணியால் அடித்தாள். அவள் மீண்டும் சிம்சோனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். சிம்சோன் கூடார ஆணியையும், தறியையும், பாவையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு எழுந்தான்! பின் தெலீலாள் சிம்சோனைப் பார்த்து, “முற்றிலும் என்மேல் நம்பிக்கையற்றவராக இருக்கும்போது ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? உங்கள் இரகசியத்தை சொல்ல மறுக்கிறீர்கள்? மூன்றாவதுமுறை நீங்கள் என்னை முட்டாளாக்கிவிட்டீர்கள். உங்களது பேராற்றலின் இரகசியத்தை நீங்கள் இன்னும் எனக்குக் கூறவில்லை” என்றாள். தினந்தோறும் அவள் சிம்சோனைத் தொந்தரவுச் செய்துக்கொண்டேயிருந்தாள். அவனது இரகசியத்தைப்பற்றி அவள் கேட்டதினால் அவன் ஆத்துமா மிகவும் சோர்ந்து, வாழ்க்கையை வெறுத்தான். இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான்.

நியாயாதிபதிகள் 16:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான். அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுவதும் பேசாதிருந்தார்கள். சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பெயர்த்து, தன் தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான். அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னைச் சிறுமைப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள். பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை. அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என் தலைமயிரின் ஏழுஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னிவிட்டால் ஆகும் என்றான். அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும் கூடப் பிடுங்கிக்கொண்டு போனான். அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்று விசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி, இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.