ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான். அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான். காசா நகர ஜனங்களிடம், “சிம்சோன் இங்கு வந்திருக்கிறான்” என்று யாரோ தெரிவித்தனர். அவர்கள் அவனைக் கொல்ல எண்ணினார்கள். எனவே, அவன் இருந்த இடத்தை சூழ்ந்தனர். அவர்கள் மறைந்திருந்து சிம்சோனின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்கள் நகர வாயிலருகே இரவு முழுவதும் அமைதியாகத் தங்கியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “காலையில் சிம்சோனைக் கொல்வோம்” என்று பேசிக்கொண்டனர்.
ஆனால் சிம்சோன் அவ்விலைமகளோடு நள்ளிரவுவரை மட்டுமே தங்கியிருந்தான். சிம்சோன் நள்ளிரவில் விழித்தெழுந்தான். சிம்சோன் நகரவாயில் கதவுகளை பிடித்து, மதிலிலிருந்து தளர்த்திப் பெயர்த்தெடுத்தான். சிம்சோன் கதவுகளையும், அவற்றின் இரண்டு தூண்களையும், கதவுகளை மூடும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டான். சிம்சோன் அதை தோளில் சுமந்துக்கொண்டு, எபிரோன் நகருக்கு அருகிலுள்ள மலையின்மீது ஏறினான்.
பின்னர் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பெண்ணை நேசித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள்.
பெலிஸ்திய ஜனங்களின் தலைவர்கள் தெலீலாளிடம் சென்றனர். அவர்கள், “சிம்சோனைப் பெலசாலியாக வைத்திருப்பது எதுவென்று நாங்கள் அறிய விரும்புகிறோம். அவனது இரகசியத்தை உனக்குத் தெரிவிக்குமாறு நீ ஏதேனும் தந்திரம் செய். அப்போது அவனைப் பிடித்துக் கட்டுவது எப்படியென்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். பிறகு அவனைக் கட்டுப்படுத்துவதும் எளிதாயிருக்கும். நீ இதைச் செய்தால் நாங்கள் ஒவ்வொரு வரும் உனக்கு 28 பவுண்டு எடையுள்ள வெள்ளியைக் கொடுப்போம்” என்றார்கள்.
எனவே தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் எதனால் பெலசாலியாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். எவ்வாறு உங்களைக் கட்டி பெலவீனப்படுத்த முடியும்?” என்று கேட்டாள்.
சிம்சோன் பதிலாக, “ஏழு பச்சையான உலராத வில் நாண்களால் என்னைக் கட்டவேண்டும். அவ்வாறு செய்தால் நான் பிறரைப் போன்று பெலனற்றவனாவேன்” என்றான்.
அப்போது பெலிஸ்தியரின் அதிகாரிகள் தெலீலாளிடம் ஏழு பச்சையான வில் நாண்களைக் கொண்டு வந்தனர். அவை இன்னும் உலர்ந்திருக்கவில்லை. அவற்றால் தெலீலாள் சிம்சோனைக் கட்டினாள். சிலர் அடுத்த அறையில் ஒளித்திருந்தனர். தெலீலாள் சிம்சோனிடம், “சிம்சோன், உங்களைப் பெலிஸ்தியர்கள் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். ஆனால் சிம்சோன் எளிதாக அந்த வில் நாண்களை அறுத்துப்போட்டான். விளக்கில் எரியும் திரியிலுள்ள சாம்பலைப் போன்று அவைத் தெறித்து விழுந்தன. எனவே பெலிஸ்தியர்கள் சிம்சோனின் பெலத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளவில்லை.
அப்போது தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் என்னிடம் பொய் சொன்னீர்கள்! என்னை முட்டாளாக்கினீர்கள். உண்மையைத் தயவுசெய்து எனக்குக் கூறுங்கள். எப்படி, யாரால் உங்களைக் கட்டிப்போட முடியும்?” என்று கேட்டாள்.
சிம்சோன், “யாராவது என்னை முன்னால் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் கட்டவேண்டும். அவ்வாறு யாரேனும் எனக்குச் செய்தால் நானும் பிற மனிதர்களைப் போன்று பெலமிழந்தவனாகிவிடுவேன்” என்றான்.
எனவே தெலீளாள் சில புதுக்கயிறுகளை எடுத்து சிம்சோனைக் கட்டினாள். சில ஆட்கள் அடுத்த அறையில் ஒளித்துக்கொண்டிருந்தனர். தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கபோகிறார்கள்!” என்றாள். ஆனால் அவன் கயிறுகளை எளிதாக அறுத்துவிட்டான். நூலை அறுத்தாற்போன்று அவன் கயிறுகளை அறுத்தெறிந்தான்.
பின்பு தெலீலாள் சிம்சோனை நோக்கி, “நீங்கள் என்னிடம் மீண்டும் பொய் சொல்லிவிட்டீர்கள்! என்னை முட்டாள் ஆக்கிவிட்டீர்கள். இப்போது உங்களை ஒருவன் எவ்வாறு கட்டக்கூடும் என்பதைக் கூறுங்கள்” என்றாள்.
சிம்சோன், “நீ என் தலைமயிரின் 7 ஜடைகளையும் நெசவு தறியால் நெய்து அதனைப் பின்னலிட்டு இறுகக் கட்டினால் நானும் பிற மனிதரைப்போல் பெலமற்றவனாவேன்” என்றான்.
பின் சிம்சோன் உறங்கப்போனான். தெலீலாள் நெசவுத் துணியின் நூலைப் பயன்படுத்தி அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் நெய்தாள். பின் தறியை நிலத்தில் ஒரு கூடார ஆணியால் அடித்தாள். அவள் மீண்டும் சிம்சோனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கப் போகிறார்கள்!” என்றாள். சிம்சோன் கூடார ஆணியையும், தறியையும், பாவையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு எழுந்தான்!
பின் தெலீலாள் சிம்சோனைப் பார்த்து, “முற்றிலும் என்மேல் நம்பிக்கையற்றவராக இருக்கும்போது ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? உங்கள் இரகசியத்தை சொல்ல மறுக்கிறீர்கள்? மூன்றாவதுமுறை நீங்கள் என்னை முட்டாளாக்கிவிட்டீர்கள். உங்களது பேராற்றலின் இரகசியத்தை நீங்கள் இன்னும் எனக்குக் கூறவில்லை” என்றாள். தினந்தோறும் அவள் சிம்சோனைத் தொந்தரவுச் செய்துக்கொண்டேயிருந்தாள். அவனது இரகசியத்தைப்பற்றி அவள் கேட்டதினால் அவன் ஆத்துமா மிகவும் சோர்ந்து, வாழ்க்கையை வெறுத்தான். இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான்.