நியா 16:1-17

நியா 16:1-17 IRVTAM

பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு விபச்சாரியை கண்டு, அவளிடம் போனான். அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊர்க்காரர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை சுற்றிவளைத்து இரவுமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் காத்திருந்து இரவு முழுவதும் பேசாமல் இருந்தார்கள். சிம்சோன் நடுஇரவுவரை படுத்திருந்து, நடு இரவில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடுப் பெயர்த்து, தன்னுடைய தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனான். அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான். அவளிடத்திற்கு பெலிஸ்தர்களின் அதிபதிகள் போய்: நீ அவனை வசப்படுத்தி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டி பலவீனப்படுத்துவதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் 1,100 வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன்னுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னை பலவீனப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள். அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளினாலே என்னைக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளை அவளிடம் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள். மறைந்திருக்கிறவர்கள் உள் அறையிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப் பட்டவுடனே அறுந்துபோகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவனுடைய பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று அவர்களால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னை ஏமாற்றி, எனக்கு பொய் சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று என்னிடம் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் பயன்படுத்தாமலிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: மறைந்திருக்கிறவர்கள் உள் அறையில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன்னுடைய புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னை ஏமாற்றி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினால் கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என்னுடைய தலைமுடியின் ஏழு ஜடைகளை நெசவுநூல் தறியோடு பின்னிவிட்டால் மற்ற மனிதர்களைப்போல் ஆவேன் என்றான். அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு எழுந்து, நெசவு ஆணியையும் தறியையும் பிடுங்கிக்கொண்டு போனான். அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன்னுடைய இருதயம் என்னோடு இல்லாமலிருக்க, உன்னை நேசிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுமுறைகளும் என்னைப் பரியாசம் செய்தாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று என்னிடம் சொல்லாமல் போனாயே என்று சொல்லி, இப்படி அவனைத் தினம்தினம் தன்னுடைய வார்த்தைகளினாலே நெருக்கி தொந்தரவுசெய்தபடியால், சாகத்தக்கதாக அவனுடைய ஆத்துமா துக்கப்பட்டு, தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலை சிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நியா 16:1-17