ஏசாயா 5:12-24

ஏசாயா 5:12-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் யாழோடும், வீணையோடும், தம்புராக்களோடும், குழலோடும், மதுவோடும் விருந்து கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் யெகோவாவின் செயல்களை நினைப்பதோ, அவரின் கரம் செய்தவற்றை நோக்கிப் பார்ப்பதோ இல்லை. எனவே எனது மக்கள் அறிவின்மையால் நாடுகடத்தப்படுவார்கள்; அவர்களின் பெருமதிப்பிற்குரியவர்கள் பட்டினியால் சாவார்கள், பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போவார்கள். எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, தன் வாயை அளவின்றித் திறக்கிறது. உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், வெறியரும் அதற்குள் இறங்குவார்கள். இப்படியாக மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான். மனுக்குலமும் தாழ்த்தப்படும். அகங்காரரின் கண்களும் தாழ்த்தப்படும். ஆனால் எல்லாம் வல்ல யெகோவா தமது நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்த இறைவனும் தமது நீதியினால் தம்மைப் பரிசுத்தராக வெளிப்படுத்துவார். அப்பொழுது செம்மறியாடுகள் தங்கள் மேய்ச்சல் இடங்களில் மேயும். செல்வந்தரின் பாழடைந்த இடங்களை அந்நியர்கள் அனுபவிப்பார்கள். வஞ்சகத்தின் கயிறுகளால் பாவத்தையும், வண்டியின் கயிறுகளால் கொடுமையையும் இழுத்து, ஐயோ கேடு! “நாம் காணத்தக்கதாக, இறைவன் துரிதமாய் வந்து தமது வேலையை விரைவாகச் செய்யட்டும். நாம் அறியத்தக்கதாக, இஸ்ரயேலரின் பரிசுத்தர் தமது திட்டத்தை வெளிப்படுத்தி, அதை நிறைவேற்றட்டும்” என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு! தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பை கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ, கேடு! தங்கள் கண்களுக்கு ஞானியாக இருப்பவர்களுக்கும், தங்கள் கணிப்பில் புத்திசாலியாக இருப்பவர்களுக்கும் ஐயோ, கேடு! திராட்சைமது குடிப்பதில் வீரரும், மதுபானம் கலக்குவதில் வல்லவர்களுமாயிருந்து, இலஞ்சத்துக்காகக் குற்றவாளியை விடுவித்து, குற்றமற்றவனுக்கு நீதியை வழங்க மறுக்கிறவர்களுக்கு ஐயோ, கேடு! ஆகவே அக்கினி ஜூவாலை வைக்கோலைச் சுட்டெரிப்பதுபோலவும், காய்ந்த புல் நெருப்பில் எரிந்து மடிவதுபோலவும், அவர்களின் வேர்கள் அழுகி, பூக்கள் புழுதிபோல் பறந்துவிடும். ஏனெனில் அவர்கள் எல்லாம் வல்ல யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து, இஸ்ரயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை இழிவுபடுத்தினார்கள்.

ஏசாயா 5:12-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் யெகோவாவின் செயலை கவனிக்கிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை. என் மக்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் துவண்டுபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள். அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். சிறியவன் தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான்; மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோகும். சேனைகளின் யெகோவா நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராக விளங்குவார். அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அனுபவிப்பார்கள். மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து, நாம் பார்க்கும்படி, அவர் துரிதமாகத் தமது கிரியையைச் சீக்கிரமாக நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் தெரிந்துகொள்ளும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்கிறவர்களுக்கு ஐயோ, தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ, தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்திற்குப் புத்திமான்களுமாக இருக்கிறவர்களுக்கு ஐயோ, சாராயத்தைக் குடிக்க வீரர்களும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, லஞ்சத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாகப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ, இதினிமித்தம் நெருப்புத்தழல் வைக்கோலை சுட்டெரிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்களுடைய வேர் வாடி, அவர்களுடைய துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டை செய்தார்களே.

ஏசாயா 5:12-24 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் மது, சுரமணடலம், தம்புரு, மேளம், நாகசுரம் போன்றவற்றோடு விருந்து கொண்டாடுகிறீர்கள். கர்த்தர் செய்த செயல்களை நீங்கள் பார்ப்பதில்லை. கர்த்தருடைய கைகள் பலவற்றைச் செய்துள்ளன. ஆனால் நீங்கள் அவற்றைக் கவனிக்கவில்லை. அதனால், இவை உங்களுக்குக் கேடு தரும். கர்த்தர், “என் ஜனங்கள் சிறை பிடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.” ஏனென்றால், அவர்கள் என்னை உண்மையில் அறிந்துகொள்ளவில்லை. இஸ்ரவேலில் வாழ்கின்ற சிலர் இப்பொழுது முக்கியமானவர்களாக உள்ளனர். அவர்கள் தம் எளிமையான வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தாகத்தாலும், பசியாலும் துன்பமடைவார்கள். பிறகு அவர்கள் மரித்து கல்லறைக்குப்போவார்கள். பாதாளம் மேலும், மேலும் ஜனங்களைப் பெறும். அது அளவில்லாமல் தன் வாயைத் திறந்து வைத்திருக்கும். அனைவரும் பாதாளத்துக்குப்போவார்கள் என்றார். ஜனங்கள் பணிவுள்ளவர்களாக இருப்பார்கள். அப்பெரியவர்கள் தலை தரையை பார்த்தவாறு, தலை குனிந்து வணங்குவார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நீதி வழங்குவார். ஜனங்கள் அவரை உயர்வானவர் என்று அறிந்துகொள்வார்கள். பரிசுத்தமான தேவன் சரியானவற்றை மட்டுமே செய்வார். ஜனங்கள் அவருக்கு மரியாதை செய்வார்கள். தேவன், இஸ்ரவேல் ஜனங்களைத் தம் நாட்டை விட்டு போகும்படி செய்வார். நாடு காலியாக இருக்கும். ஆடுகள் தாம் விரும்பிய இடத்துக்குப்போகும். செல்வந்தர்கள் ஒருகாலத்தில் வைத்திருந்த நிலங்களில் பரதேசிகள் நடந்து திரிவார்கள். அந்த ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் தம் குற்றங்களையும் பாவங்களையும் வண்டிகளைக் கயிறு கட்டி இழுத்துச் செல்வதுபோன்று இழுத்துத் செல்கிறார்கள். அந்த ஜனங்கள், “தேவன் சீக்கிரமாய் செயல் புரிய விரும்புகிறோம். அவர் திட்டமிட்டபடி செய்துமுடிக்கட்டும். பிறகு, அவை நிறைவேறவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். கர்த்தருடைய விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று விரும்புகிறோம். பின்னரே அவரது திட்டம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள். அந்த ஜனங்கள், நல்லதைக் கெட்டதென்றும் கெட்டதை நல்லது என்றும் கூறுகிறார்கள். அவர்கள் இருளை வெளிச்சம் என்றும் வெளிச்சத்தை இருள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் இனிப்பைக் கசப்பு என்றும் கசப்பை இனிப்பு என்றும் எண்ணுகிறார்கள். அந்த ஜனங்கள் தங்களை ஞானிகள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் மது குடிப்பதிலே புகழ் பெற்றவர்கள். அவர்கள் குடிவகைகளைக் கலப்பதில் பராக்கிரமசாலிகள். நீங்கள் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால், அவர்கள் குற்றவாளிகளை விடுவிப்பார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்களுக்கு நியாயமாக நீதி வழங்கமாட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் கேடு ஏற்படும். அவர்களின் சந்ததி முழுமையாக அழிக்கப்படும். அவர்கள் காய்ந்த புல் நெருப்பில் எரிவதுபோன்று அழிவார்கள். அவர்களின் சந்ததி வேர் வாடி, தூசியைப்போல் பறந்துபோகும். அவர்கள் நெருப்பில் எரியும் பூக்களைப்போன்று எரிந்து, காற்றில் சாம்பல் பறப்பது போன்று ஆவார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய போதனைகளுக்கு அடிபணிய அவர்கள் மறுத்துவிட்டனர். இஸ்ரவேலரின் பரிசுத்தமான தேவனிடமிருந்து வரும் செய்தியை அவர்கள் வெறுத்தனர்.

ஏசாயா 5:12-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை. என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள். அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள் கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள். சிறியவன் தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான்; மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோகும். சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார். அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அநுபவிப்பார்கள். மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து, நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ! தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ! தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ! சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ! இதினிமித்தம் அக்கினிஜூவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே.