ஏசாயா 5:12-24

ஏசாயா 5:12-24 TCV

அவர்கள் யாழோடும், வீணையோடும், தம்புராக்களோடும், குழலோடும், மதுவோடும் விருந்து கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் யெகோவாவின் செயல்களை நினைப்பதோ, அவரின் கரம் செய்தவற்றை நோக்கிப் பார்ப்பதோ இல்லை. எனவே எனது மக்கள் அறிவின்மையால் நாடுகடத்தப்படுவார்கள்; அவர்களின் பெருமதிப்பிற்குரியவர்கள் பட்டினியால் சாவார்கள், பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போவார்கள். எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, தன் வாயை அளவின்றித் திறக்கிறது. உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், வெறியரும் அதற்குள் இறங்குவார்கள். இப்படியாக மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான். மனுக்குலமும் தாழ்த்தப்படும். அகங்காரரின் கண்களும் தாழ்த்தப்படும். ஆனால் எல்லாம் வல்ல யெகோவா தமது நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்த இறைவனும் தமது நீதியினால் தம்மைப் பரிசுத்தராக வெளிப்படுத்துவார். அப்பொழுது செம்மறியாடுகள் தங்கள் மேய்ச்சல் இடங்களில் மேயும். செல்வந்தரின் பாழடைந்த இடங்களை அந்நியர்கள் அனுபவிப்பார்கள். வஞ்சகத்தின் கயிறுகளால் பாவத்தையும், வண்டியின் கயிறுகளால் கொடுமையையும் இழுத்து, ஐயோ கேடு! “நாம் காணத்தக்கதாக, இறைவன் துரிதமாய் வந்து தமது வேலையை விரைவாகச் செய்யட்டும். நாம் அறியத்தக்கதாக, இஸ்ரயேலரின் பரிசுத்தர் தமது திட்டத்தை வெளிப்படுத்தி, அதை நிறைவேற்றட்டும்” என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு! தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பை கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ, கேடு! தங்கள் கண்களுக்கு ஞானியாக இருப்பவர்களுக்கும், தங்கள் கணிப்பில் புத்திசாலியாக இருப்பவர்களுக்கும் ஐயோ, கேடு! திராட்சைமது குடிப்பதில் வீரரும், மதுபானம் கலக்குவதில் வல்லவர்களுமாயிருந்து, இலஞ்சத்துக்காகக் குற்றவாளியை விடுவித்து, குற்றமற்றவனுக்கு நீதியை வழங்க மறுக்கிறவர்களுக்கு ஐயோ, கேடு! ஆகவே அக்கினி ஜூவாலை வைக்கோலைச் சுட்டெரிப்பதுபோலவும், காய்ந்த புல் நெருப்பில் எரிந்து மடிவதுபோலவும், அவர்களின் வேர்கள் அழுகி, பூக்கள் புழுதிபோல் பறந்துவிடும். ஏனெனில் அவர்கள் எல்லாம் வல்ல யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து, இஸ்ரயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை இழிவுபடுத்தினார்கள்.