ஏசா 5:12-24

ஏசா 5:12-24 IRVTAM

அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் யெகோவாவின் செயலை கவனிக்கிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை. என் மக்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் துவண்டுபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள். அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். சிறியவன் தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான்; மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோகும். சேனைகளின் யெகோவா நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராக விளங்குவார். அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அனுபவிப்பார்கள். மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து, நாம் பார்க்கும்படி, அவர் துரிதமாகத் தமது கிரியையைச் சீக்கிரமாக நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் தெரிந்துகொள்ளும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்கிறவர்களுக்கு ஐயோ, தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ, தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்திற்குப் புத்திமான்களுமாக இருக்கிறவர்களுக்கு ஐயோ, சாராயத்தைக் குடிக்க வீரர்களும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, லஞ்சத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாகப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ, இதினிமித்தம் நெருப்புத்தழல் வைக்கோலை சுட்டெரிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்களுடைய வேர் வாடி, அவர்களுடைய துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டை செய்தார்களே.