எபிரெயர் 2:9-18

எபிரெயர் 2:9-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனாலும் சிறிது காலத்திற்கு இறைத்தூதர்களிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்ட இயேசுவோ, மரண வேதனையடைந்தவராய் இறைவனுடைய கிருபையினாலே, ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தபடியால் இப்பொழுது மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவரும் பொருட்டு, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை, வேதனை அனுபவிப்பதன் மூலமாக, முழுநிறைவுள்ள மூலகாரணராய் இறைவன் ஆக்கியது அவருக்கேற்ற செயலே. இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன. பரிசுத்தமாக்குகிற அவரும், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கப்படாதிருக்கிறார். இயேசு அவர்களைக்குறித்து சொல்லுகிறதாவது, “நான் உம்முடைய பெயரை, எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன்; திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்.” மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன், இதோ நானும் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார். பிள்ளைகள் இரத்தமும், மாம்சமும் உடையவர்களாய் இருக்கிறபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்குகொண்டார். அவருடைய மரணத்தினால், மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்த பிசாசை அழிக்கும்படிக்கும், தங்களுடைய வாழ்நாள் எல்லாம் சாவைக்குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்யும்படிக்கும் அவர் மனித இயல்பில் பங்குகொண்டார். இயேசு உதவிசெய்வது இறைத்தூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே. இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல் ஆகவேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில், அவர் இரக்கமும் உண்மையுள்ள பிரதான ஆசாரியன் ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவிர்த்தியைச் செய்வதற்காகவுமே, அவர் தம்முடைய சகோதரர்களைப் போலானார். இயேசு சோதனைக்குட்பட்டபோது, வேதனைகளை அனுபவித்தபடியால், இப்பொழுது சோதிக்கப்படுகிறவர்களுக்கு, அவர் உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.

எபிரெயர் 2:9-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்க தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைப் பார்க்கிறோம். ஏனென்றால், தமக்காகவும் தம்மூலமாகவும் எல்லாவற்றையும் உண்டாக்கினவர், அநேக பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்போது அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாக இருந்தது. எப்படியென்றால், பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்; நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். எனவே, பிள்ளைகள் சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க, அவரும் அவர்களைப்போல சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார். எனவே, அவர் தேவதூதர்களுக்கு உதவியாகக் கைகொடுக்காமல், ஆபிரகாமின் வம்சத்திற்கு உதவியாகக் கைகொடுத்தார். அன்றியும், அவர் மக்களின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையும் உள்ள பிரதான ஆசாரியராக இருப்பதற்கு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல மாறவேண்டியதாக இருந்தது. எனவே, அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுகள்பட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.

எபிரெயர் 2:9-18 பரிசுத்த பைபிள் (TAERV)

சிறிது காலத்திற்கு இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார். தேவனே அனைத்தையும் படைத்தவர். அனைத்தும் அவரது மகிமைக்காகவே உள்ளன. தன் மகிமையைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான மக்களை அவர் விரும்பினார். எனவே, தமக்குத் தேவையானவற்றை அவர் செய்தார். மக்களை இரட்சிப்புக்கு வழி நடத்திச் செல்ல பூரணமானவராக தேவன் இயேசுவை ஏற்படுத்தினார். இயேசு தன் துன்பத்தால் ஒரு பூரண இரட்சகரானார். மக்களைப் பரிசுத்தமாக்குகிறவரும் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே அவர்களைத் தம் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் அழைக்க இயேசு வெட்கம் கொள்ளவில்லை. “தேவனே உம்மைப்பற்றி நான் என் சகோதர சகோதரிகளிடம் கூறுவேன். உம்முடைய மக்கள் கூட்டத்தின் நடுவில் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்” என்று அவர் கூறுகிறார். “தேவன் மீது என் நம்பிக்கையை வைப்பேன்” என்றும் அவர் சொல்கிறார். “தேவன் எனக்களித்த பிள்ளைகளோடு நான் இங்கே இருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். மாம்சீகமான உடலைக்கொண்ட மக்களே அந்தப் பிள்ளைகள். ஆகவே இயேசுவும், அவர்களைப் போன்றே மாறி அவர்களைப் போன்றே அனுபவத்தையும் பெற்றார். மரண அதிகாரத்தைத் தன்னோடு வைத்திருக்கிற பிசாசை தனது மரணத்தின் மூலம் அழிக்கும்பொருட்டு இயேசு இப்படிச் செய்தார். அவர்களை விடுதலை செய்யும் பொருட்டே இயேசு தம் பிள்ளைகளைப் போலாகி மரித்தார். மரண பயத்தின் காரணமாக தம் வாழ்க்கை முழுக்க அவர்கள் அடிமையாக இருந்தார்கள். இயேசு தேவதூதர்களுக்கு உதவி செய்ய வரவில்லை என்பது வெளிப்படை. அவர் ஆபிரகாமின் வழிவந்த மக்களுக்கே உதவ வந்தார். இதனால் இயேசு, எல்லா வகையிலும் அவர்களுக்கு சகோதரரைப் போல் இருப்பது அவருக்கு முக்கியமாக இருந்தது. இவ்வழியில் தேவனுக்கான சேவையில் அவர்களுடைய இரக்கமும் நம்பிக்கையும் உள்ள பெரிய போதகராக இருக்கவும், மக்களின் பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கவும் அவரால் முடிந்தது. இப்போது சோதனைகளை எதிர்கொள்கிற மக்களுக்கு இயேசுவால் உதவி செய்ய முடியும். இயேசுவும் துன்பங்களுக்கு உள்ளாகி சோதனைகளுக்கு ஆட்பட்டவர் என்பதால், அவரால் உதவி செய்ய முடியும்.

எபிரெயர் 2:9-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்; உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.