எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:9-18

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:9-18 TAERV

சிறிது காலத்திற்கு இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார். தேவனே அனைத்தையும் படைத்தவர். அனைத்தும் அவரது மகிமைக்காகவே உள்ளன. தன் மகிமையைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான மக்களை அவர் விரும்பினார். எனவே, தமக்குத் தேவையானவற்றை அவர் செய்தார். மக்களை இரட்சிப்புக்கு வழி நடத்திச் செல்ல பூரணமானவராக தேவன் இயேசுவை ஏற்படுத்தினார். இயேசு தன் துன்பத்தால் ஒரு பூரண இரட்சகரானார். மக்களைப் பரிசுத்தமாக்குகிறவரும் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே அவர்களைத் தம் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் அழைக்க இயேசு வெட்கம் கொள்ளவில்லை. “தேவனே உம்மைப்பற்றி நான் என் சகோதர சகோதரிகளிடம் கூறுவேன். உம்முடைய மக்கள் கூட்டத்தின் நடுவில் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்” என்று அவர் கூறுகிறார். “தேவன் மீது என் நம்பிக்கையை வைப்பேன்” என்றும் அவர் சொல்கிறார். “தேவன் எனக்களித்த பிள்ளைகளோடு நான் இங்கே இருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். மாம்சீகமான உடலைக்கொண்ட மக்களே அந்தப் பிள்ளைகள். ஆகவே இயேசுவும், அவர்களைப் போன்றே மாறி அவர்களைப் போன்றே அனுபவத்தையும் பெற்றார். மரண அதிகாரத்தைத் தன்னோடு வைத்திருக்கிற பிசாசை தனது மரணத்தின் மூலம் அழிக்கும்பொருட்டு இயேசு இப்படிச் செய்தார். அவர்களை விடுதலை செய்யும் பொருட்டே இயேசு தம் பிள்ளைகளைப் போலாகி மரித்தார். மரண பயத்தின் காரணமாக தம் வாழ்க்கை முழுக்க அவர்கள் அடிமையாக இருந்தார்கள். இயேசு தேவதூதர்களுக்கு உதவி செய்ய வரவில்லை என்பது வெளிப்படை. அவர் ஆபிரகாமின் வழிவந்த மக்களுக்கே உதவ வந்தார். இதனால் இயேசு, எல்லா வகையிலும் அவர்களுக்கு சகோதரரைப் போல் இருப்பது அவருக்கு முக்கியமாக இருந்தது. இவ்வழியில் தேவனுக்கான சேவையில் அவர்களுடைய இரக்கமும் நம்பிக்கையும் உள்ள பெரிய போதகராக இருக்கவும், மக்களின் பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கவும் அவரால் முடிந்தது. இப்போது சோதனைகளை எதிர்கொள்கிற மக்களுக்கு இயேசுவால் உதவி செய்ய முடியும். இயேசுவும் துன்பங்களுக்கு உள்ளாகி சோதனைகளுக்கு ஆட்பட்டவர் என்பதால், அவரால் உதவி செய்ய முடியும்.