எபிரெயர் 2:9-18

எபிரெயர் 2:9-18 TCV

ஆனாலும் சிறிது காலத்திற்கு இறைத்தூதர்களிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்ட இயேசுவோ, மரண வேதனையடைந்தவராய் இறைவனுடைய கிருபையினாலே, ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தபடியால் இப்பொழுது மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவரும் பொருட்டு, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை, வேதனை அனுபவிப்பதன் மூலமாக, முழுநிறைவுள்ள மூலகாரணராய் இறைவன் ஆக்கியது அவருக்கேற்ற செயலே. இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன. பரிசுத்தமாக்குகிற அவரும், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கப்படாதிருக்கிறார். இயேசு அவர்களைக்குறித்து சொல்லுகிறதாவது, “நான் உம்முடைய பெயரை, எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன்; திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்.” மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன், இதோ நானும் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார். பிள்ளைகள் இரத்தமும், மாம்சமும் உடையவர்களாய் இருக்கிறபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்குகொண்டார். அவருடைய மரணத்தினால், மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்த பிசாசை அழிக்கும்படிக்கும், தங்களுடைய வாழ்நாள் எல்லாம் சாவைக்குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்யும்படிக்கும் அவர் மனித இயல்பில் பங்குகொண்டார். இயேசு உதவிசெய்வது இறைத்தூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே. இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல் ஆகவேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில், அவர் இரக்கமும் உண்மையுள்ள பிரதான ஆசாரியன் ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவிர்த்தியைச் செய்வதற்காகவுமே, அவர் தம்முடைய சகோதரர்களைப் போலானார். இயேசு சோதனைக்குட்பட்டபோது, வேதனைகளை அனுபவித்தபடியால், இப்பொழுது சோதிக்கப்படுகிறவர்களுக்கு, அவர் உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.