எபிரெயர் 12:3-11

எபிரெயர் 12:3-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் மனந்தளர்ந்து சோர்ந்துபோகாதபடிக்கு பாவிகளிலிருந்து வந்த இப்படிப்பட்ட எதிர்ப்பைச் சகித்தவரான இயேசுவைக்குறித்துச் சிந்தியுங்கள். பாவத்தை எதிர்த்துப் போராடுவதில் இரத்தம் சிந்தும் அளவுக்கு, நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை. ஒரு தந்தை தனது மகனைக் கூப்பிடுவதைப்போல, உங்களைக் கூப்பிட்டு உற்சாகப்படுத்தும் வார்த்தையை நீங்கள் முழுமையாக மறந்துவிட்டீர்களா? அவர்: “என் மகனே, கர்த்தர் உன்னைத் தண்டித்துத் திருத்தும்போது, அதை அலட்சியப்படுத்தாதே; அவர் உன்னைக் கண்டிக்கும்போது, மனந்தளர்ந்து போகாதே. ஏனெனில் கர்த்தர் தாம் நேசிக்கிறவர்களையே தண்டித்துத் திருத்துகிறார். தாம் மகனாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனையும் அவர் தண்டிக்கிறார்.” கஷ்டங்கள் வரும்போது அவை உங்களைத் திருத்துவதற்காகவே வருகின்றன என்று அறிந்து, சகித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவன் உங்களைத் தமது பிள்ளைகளாக நடத்துகிறார். தனது தந்தையினால் தண்டித்துத் திருத்தப்படாத மகன் எங்கே இருக்கிறான்? பிள்ளைகள் தண்டித்துத் திருத்தப்படுகிறார்கள். எனவே நீங்கள் அவ்விதம் தண்டித்துத் திருத்தப்படாவிட்டால், அவருடைய உண்மையான பிள்ளைகளாயிராமல், முறைகேடாய் பிறந்த பிள்ளைகளாய் இருப்பீர்கள். மேலும், நம்மைத் தண்டித்துத் திருத்திய சரீரத்தின் தந்தைமார்கள் நம் எல்லோருக்கும் இருந்திருக்கிறார்கள். நாம் அவர்களை மதித்து நடந்தோம். அப்படியானால் நம் ஆவிகளுக்குத் தந்தையாய் இருக்கிறவருக்கு நாம் பணிந்து நடந்து வாழ்வைப் பெறுவது எவ்வளவு அவசியம்? நம்முடைய சரீரத்தின் தந்தையர் சிறிது காலத்திற்குத் தமக்கு நலமாய்த் தோன்றியபடி, நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள்; ஆனால் இறைவனோ, நாம் அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ளும்படியாக, நம்முடைய நன்மைக்கென்றே நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார். நாம் தண்டித்துத் திருத்தப்படும்போது அது அவ்வேளையில் சந்தோஷமாயிருக்காமல், வேதனையுடையதாகவே இருக்கிறது. ஆனால் அது, பின்பு திருத்தப்பட்டவர்களுக்கு நீதிநிறைந்த சமாதான அறுவடையை தரும்.

எபிரெயர் 12:3-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். பாவத்திற்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள். நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ? எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைக் கண்டிக்கும்போது, அவர்களுக்கு நாம் பயந்து நடந்திருக்க, நாம் பிழைப்பதற்காக ஆவிகளின் பிதாவிற்கு அதிகமாக அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நல்லதென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் கண்டித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாவதற்காக நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைக் கண்டிக்கிறார் எந்தக் கண்டித்தலும் தற்காலத்தில் சந்தோஷமாக இல்லாமல் துக்கமாக இருக்கும்; ஆனாலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

எபிரெயர் 12:3-11 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவைப் பற்றி நினைத்துப்பாருங்கள். பாவிகள் அவருக்கு எதிராகச் செயல்புரிந்தபோது அவர் அதனைப் பொறுமையாக ஏற்றுக்கொண்டார். இயேசு செய்தது போலவே நீங்களும் பொறுமையோடு சோர்ந்து போகாமல் இருங்கள். நீங்கள் பாவத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் போராட்டம் இன்னும் நீங்கள் கொல்லப்படுகிற அளவுக்கு வன்மையாகவில்லை. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் உங்கள் ஆறுதலுக்காகவே பேசுகிறார். நீங்கள் அந்த வார்த்தைகளை மறந்துவிட்டீர்கள். “என் மகனே! கர்த்தர் உன்னைத் தண்டிக்கும்போது அதனை அற்பமாக எண்ணாதே. அவர் உன்னைத் திருத்தும்போது உன் முயற்சியைக் கைவிட்டு விடாதே. தம் நேசத்துக்குரிய ஒவ்வொருவரையும் கர்த்தர் தண்டிக்கிறார். தம் மக்களாக ஏற்றுக்கொள்கின்ற எல்லோரையும் தண்டித்துத் திருத்துகிறார்.” எனவே ஒரு பிதாவின் தண்டனை என்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு தந்தை தன் குமாரனைத் தண்டிப்பது போன்றே தேவன் உன்னையும் தண்டித்திருக்கிறார். எல்லாப் பிள்ளைகளுமே தம் தந்தைகளால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் எந்த நாளிலும் தண்டிக்கப்படாவிட்டால் உண்மையில் தேவனுடைய பிள்ளைகள் ஆகவில்லை என்று பொருள். இங்கே பூமியில் தண்டிக்கிற தந்தைகளையே நாம் கொண்டிருக்கிறோம். அதற்காக அவர்களை நாம் மதிக்கிறோம். ஆகவே நம் ஆன்மீகத் தந்தைக்கு மிக அதிகமாக அடங்கி நடக்கவேண்டும். நாம் இதனைச் செய்தால் நமக்கு வாழ்வு உண்டு. உலகில் உள்ள தந்தைகளின் தண்டனை கொஞ்ச காலத்திற்குரியது. அவர்கள் தங்களின் சிந்தனைக்குச் சரியாகத் தோன்றுகிறதையே செய்கிறார்கள். ஆனால் தேவன் நமக்கு உதவி செய்வதற்காகவே தண்டிக்கிறார். எனவே நாமும் அவரைப் போன்று பரிசுத்தமாகலாம். எந்தத் தண்டனையும் அந்நேரத்தில் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பதில்லை! ஆனால், பிறகு அதில் பழகியவர்கள், நேர்மையான வாழ்விலிருந்து வருகிற சமாதானத்தை அனுபவிப்பார்கள்.

எபிரெயர் 12:3-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.