எபி 12:3-11

எபி 12:3-11 IRVTAM

ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். பாவத்திற்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள். நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ? எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைக் கண்டிக்கும்போது, அவர்களுக்கு நாம் பயந்து நடந்திருக்க, நாம் பிழைப்பதற்காக ஆவிகளின் பிதாவிற்கு அதிகமாக அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நல்லதென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் கண்டித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாவதற்காக நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைக் கண்டிக்கிறார் எந்தக் கண்டித்தலும் தற்காலத்தில் சந்தோஷமாக இல்லாமல் துக்கமாக இருக்கும்; ஆனாலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.