நீங்கள் மனந்தளர்ந்து சோர்ந்துபோகாதபடிக்கு பாவிகளிலிருந்து வந்த இப்படிப்பட்ட எதிர்ப்பைச் சகித்தவரான இயேசுவைக்குறித்துச் சிந்தியுங்கள். பாவத்தை எதிர்த்துப் போராடுவதில் இரத்தம் சிந்தும் அளவுக்கு, நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை. ஒரு தந்தை தனது மகனைக் கூப்பிடுவதைப்போல, உங்களைக் கூப்பிட்டு உற்சாகப்படுத்தும் வார்த்தையை நீங்கள் முழுமையாக மறந்துவிட்டீர்களா? அவர்: “என் மகனே, கர்த்தர் உன்னைத் தண்டித்துத் திருத்தும்போது, அதை அலட்சியப்படுத்தாதே; அவர் உன்னைக் கண்டிக்கும்போது, மனந்தளர்ந்து போகாதே. ஏனெனில் கர்த்தர் தாம் நேசிக்கிறவர்களையே தண்டித்துத் திருத்துகிறார். தாம் மகனாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனையும் அவர் தண்டிக்கிறார்.” கஷ்டங்கள் வரும்போது அவை உங்களைத் திருத்துவதற்காகவே வருகின்றன என்று அறிந்து, சகித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவன் உங்களைத் தமது பிள்ளைகளாக நடத்துகிறார். தனது தந்தையினால் தண்டித்துத் திருத்தப்படாத மகன் எங்கே இருக்கிறான்? பிள்ளைகள் தண்டித்துத் திருத்தப்படுகிறார்கள். எனவே நீங்கள் அவ்விதம் தண்டித்துத் திருத்தப்படாவிட்டால், அவருடைய உண்மையான பிள்ளைகளாயிராமல், முறைகேடாய் பிறந்த பிள்ளைகளாய் இருப்பீர்கள். மேலும், நம்மைத் தண்டித்துத் திருத்திய சரீரத்தின் தந்தைமார்கள் நம் எல்லோருக்கும் இருந்திருக்கிறார்கள். நாம் அவர்களை மதித்து நடந்தோம். அப்படியானால் நம் ஆவிகளுக்குத் தந்தையாய் இருக்கிறவருக்கு நாம் பணிந்து நடந்து வாழ்வைப் பெறுவது எவ்வளவு அவசியம்? நம்முடைய சரீரத்தின் தந்தையர் சிறிது காலத்திற்குத் தமக்கு நலமாய்த் தோன்றியபடி, நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள்; ஆனால் இறைவனோ, நாம் அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ளும்படியாக, நம்முடைய நன்மைக்கென்றே நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார். நாம் தண்டித்துத் திருத்தப்படும்போது அது அவ்வேளையில் சந்தோஷமாயிருக்காமல், வேதனையுடையதாகவே இருக்கிறது. ஆனால் அது, பின்பு திருத்தப்பட்டவர்களுக்கு நீதிநிறைந்த சமாதான அறுவடையை தரும்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் எபிரெயர் 12
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எபிரெயர் 12:3-11
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்