ஆதியாகமம் 42:5-13

ஆதியாகமம் 42:5-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள். யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ளவந்தோம் என்றார்கள். யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை. யோசேப்பு அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம். நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள். அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான். அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள்.

ஆதியாகமம் 42:5-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கானான் நாட்டிலும் பஞ்சம் ஏற்பட்டபடியால், தானியம் வாங்குவதற்காக எகிப்திற்குப் போனவர்களுடன் இஸ்ரயேலின் மகன்களும் போனார்கள். இப்பொழுது யோசேப்பு எகிப்து நாட்டின் ஆளுநனாக இருந்தான், மக்கள் யாவருக்கும் அவனே தானியம் விற்றான். யோசேப்பின் சகோதரர் அங்கு வந்ததும், தரையிலே முகங்குப்புற விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு சகோதரர்களைக் கண்டவுடனே, அவர்களை இன்னார் என அறிந்துகொண்டான். ஆனால் அவன் அவர்களை அறியாத ஒரு அந்நியனைப்போல் பாசாங்கு செய்து கடுமையாய்ப் பேசி, “நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் தானியம் வாங்கும்படி கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறோம்” என்றார்கள். யோசேப்பு தன் சகோதரர்களை யாரென்று அறிந்திருந்தாலும் அவர்களோ அவனை இன்னாரென்று அறிந்துகொள்ளவில்லை. பின்பு யோசேப்பு, தான் முன்னர் அவர்களைக் குறித்துக் கண்ட கனவுகளை நினைத்துத் தன் சகோதரர்களிடம், “நீங்கள் உளவாளிகள்! எங்கள் நாட்டில் பாதுகாப்புக் குறைவு எங்கிருக்கின்றது என அறியவே இங்கு வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள், “இல்லை ஆண்டவனே, உம்முடைய அடியவர்களாகிய நாங்கள் உணவு வாங்குவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் ஒரே தகப்பனின் பிள்ளைகள். உமது அடியார்கள் உண்மையானவர்கள், உளவாளிகள் அல்ல” என்றார்கள். யோசேப்போ, “இல்லை! நீங்களோ எங்கள் நாடு எங்கே பாதுகாப்பற்று இருக்கிறது எனப் பார்க்கவே வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள், “உம்முடைய அடியார்களாகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், கானான் நாட்டில் வாழும் ஒரே தகப்பனின் மகன்கள். கடைசி மகன் இப்பொழுது எங்கள் தகப்பனோடு இருக்கிறான், மற்றவன் இறந்துபோனான்” என்றார்கள்.

ஆதியாகமம் 42:5-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்ததால், தானியம் வாங்கப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் மகன்களும் போனார்கள். யோசேப்பு அந்த தேசத்திற்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் மக்கள் அனைவருக்கும் தானியத்தை விற்றான். யோசேப்பின் சகோதரர்கள் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர்கள் என்று தெரிந்துகொண்டான்; தெரிந்தும் தெரியாதவன்போலக் கடினமாக அவர்களோடு பேசி: “நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள்” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “கானான் தேசத்திலிருந்து தானியம் வாங்கவந்தோம்” என்றார்கள். யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர்கள் என்று தெரிந்தும், அவர்களுக்கு அவனைத் தெரியவில்லை. யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட கனவுகளை நினைத்து, அவர்களை நோக்கி: “நீங்கள் உளவாளிகள், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் வாங்க வந்தோம். நாங்கள் எல்லோரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நேர்மையானவர்கள்; உமது அடியார் உளவாளிகள் அல்ல” என்றார்கள். அதற்கு அவன்: “அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள்” என்றான். அப்பொழுது அவர்கள்: “உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான்” என்றார்கள்.

ஆதியாகமம் 42:5-13 பரிசுத்த பைபிள் (TAERV)

கானான் பகுதியில் பஞ்சம் மிகவும் கொடுமையாக இருந்தது. எனவே ஏராளமான ஜனங்கள் எகிப்துக்குப் போனார்கள். அவர்களுள் இஸ்ரவேலின் குமாரர்களும் இருந்தனர். யோசேப்புதான் எகிப்தின் ஆளுநராக அச்சமயத்தில் இருந்தான். எகிப்துக்கு வரும் ஜனங்களுக்கு விற்கப்படும் தானியத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு அவனிடமே இருந்தது. எனவே யோசேப்பின் சகோதரர்கள் அவனிடம் வந்து குனிந்து வணங்கி நின்றனர். யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்ததும், உடனே அடையாளம் கண்டுகொண்டான். எனினும் தெரிந்துகொண்டதைப்போல் காட்டிகொள்ளாமல் அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டான். “எங்கேயிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் கானான் பகுதியிலிருந்து வருகிறோம். உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வந்தோம்” என்றனர். யோசேப்புக்கு அவர்கள் அனைவரும் தன் சகோதரர்கள் என்று புரிந்தது. ஆனால் அவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. அவன் தன் சகோதரர்களைப்பற்றி தான் கண்ட கனவை நினைத்துப் பார்த்தான். யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் உணவுப் பொருட்கள் வாங்க வரவில்லை, நீங்கள் ஒற்றர்கள். எங்கள் நாட்டின் பலவீனத்தைத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்” என்றான். அவர்களோ, “இல்லை ஐயா! நாங்கள் உங்கள் வேலைக்காரர்களாக வந்திருக்கிறோம். உணவுப் பொருட்களை வாங்கவே வந்துள்ளோம். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். எங்கள் அனைவருக்கும் ஒரே தந்தை. நாங்கள் நேர்மையானவர்கள். நாங்கள் தானியம் வாங்கவே வந்தோம்” என்றனர். பின்னும் யோசேப்பு, “இல்லை! நீங்கள் எங்கள் பலவீனத்தை அறியவே வந்துள்ளீர்கள்” என்றான். அவர்களோ, “இல்லை நாங்கள் அனைவரும் சகோதரர்கள். மொத்தம் பன்னிரெண்டு பேர். எல்லோருக்கும் ஒரே தந்தை. எங்கள் இளைய தம்பி வீட்டில் தந்தையோடு இருக்கிறான். இன்னொரு சகோதரன் பல ஆண்டுகளுக்கு முன் மரித்து போனான். இப்போது உங்கள் முன் வேலைக்காரர்களைப் போன்று இருக்கிறோம். நாங்கள் கானான் நாட்டிலிருந்து வந்துள்ளோம்” என்றார்கள்.