ஆதியாகமம் 42:5-13

ஆதியாகமம் 42:5-13 TAERV

கானான் பகுதியில் பஞ்சம் மிகவும் கொடுமையாக இருந்தது. எனவே ஏராளமான ஜனங்கள் எகிப்துக்குப் போனார்கள். அவர்களுள் இஸ்ரவேலின் குமாரர்களும் இருந்தனர். யோசேப்புதான் எகிப்தின் ஆளுநராக அச்சமயத்தில் இருந்தான். எகிப்துக்கு வரும் ஜனங்களுக்கு விற்கப்படும் தானியத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு அவனிடமே இருந்தது. எனவே யோசேப்பின் சகோதரர்கள் அவனிடம் வந்து குனிந்து வணங்கி நின்றனர். யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்ததும், உடனே அடையாளம் கண்டுகொண்டான். எனினும் தெரிந்துகொண்டதைப்போல் காட்டிகொள்ளாமல் அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டான். “எங்கேயிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் கானான் பகுதியிலிருந்து வருகிறோம். உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வந்தோம்” என்றனர். யோசேப்புக்கு அவர்கள் அனைவரும் தன் சகோதரர்கள் என்று புரிந்தது. ஆனால் அவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. அவன் தன் சகோதரர்களைப்பற்றி தான் கண்ட கனவை நினைத்துப் பார்த்தான். யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் உணவுப் பொருட்கள் வாங்க வரவில்லை, நீங்கள் ஒற்றர்கள். எங்கள் நாட்டின் பலவீனத்தைத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்” என்றான். அவர்களோ, “இல்லை ஐயா! நாங்கள் உங்கள் வேலைக்காரர்களாக வந்திருக்கிறோம். உணவுப் பொருட்களை வாங்கவே வந்துள்ளோம். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். எங்கள் அனைவருக்கும் ஒரே தந்தை. நாங்கள் நேர்மையானவர்கள். நாங்கள் தானியம் வாங்கவே வந்தோம்” என்றனர். பின்னும் யோசேப்பு, “இல்லை! நீங்கள் எங்கள் பலவீனத்தை அறியவே வந்துள்ளீர்கள்” என்றான். அவர்களோ, “இல்லை நாங்கள் அனைவரும் சகோதரர்கள். மொத்தம் பன்னிரெண்டு பேர். எல்லோருக்கும் ஒரே தந்தை. எங்கள் இளைய தம்பி வீட்டில் தந்தையோடு இருக்கிறான். இன்னொரு சகோதரன் பல ஆண்டுகளுக்கு முன் மரித்து போனான். இப்போது உங்கள் முன் வேலைக்காரர்களைப் போன்று இருக்கிறோம். நாங்கள் கானான் நாட்டிலிருந்து வந்துள்ளோம்” என்றார்கள்.