ஆதியாகமம் 42:5-13

ஆதியாகமம் 42:5-13 TCV

கானான் நாட்டிலும் பஞ்சம் ஏற்பட்டபடியால், தானியம் வாங்குவதற்காக எகிப்திற்குப் போனவர்களுடன் இஸ்ரயேலின் மகன்களும் போனார்கள். இப்பொழுது யோசேப்பு எகிப்து நாட்டின் ஆளுநனாக இருந்தான், மக்கள் யாவருக்கும் அவனே தானியம் விற்றான். யோசேப்பின் சகோதரர் அங்கு வந்ததும், தரையிலே முகங்குப்புற விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு சகோதரர்களைக் கண்டவுடனே, அவர்களை இன்னார் என அறிந்துகொண்டான். ஆனால் அவன் அவர்களை அறியாத ஒரு அந்நியனைப்போல் பாசாங்கு செய்து கடுமையாய்ப் பேசி, “நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் தானியம் வாங்கும்படி கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறோம்” என்றார்கள். யோசேப்பு தன் சகோதரர்களை யாரென்று அறிந்திருந்தாலும் அவர்களோ அவனை இன்னாரென்று அறிந்துகொள்ளவில்லை. பின்பு யோசேப்பு, தான் முன்னர் அவர்களைக் குறித்துக் கண்ட கனவுகளை நினைத்துத் தன் சகோதரர்களிடம், “நீங்கள் உளவாளிகள்! எங்கள் நாட்டில் பாதுகாப்புக் குறைவு எங்கிருக்கின்றது என அறியவே இங்கு வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள், “இல்லை ஆண்டவனே, உம்முடைய அடியவர்களாகிய நாங்கள் உணவு வாங்குவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் ஒரே தகப்பனின் பிள்ளைகள். உமது அடியார்கள் உண்மையானவர்கள், உளவாளிகள் அல்ல” என்றார்கள். யோசேப்போ, “இல்லை! நீங்களோ எங்கள் நாடு எங்கே பாதுகாப்பற்று இருக்கிறது எனப் பார்க்கவே வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள், “உம்முடைய அடியார்களாகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், கானான் நாட்டில் வாழும் ஒரே தகப்பனின் மகன்கள். கடைசி மகன் இப்பொழுது எங்கள் தகப்பனோடு இருக்கிறான், மற்றவன் இறந்துபோனான்” என்றார்கள்.