எஸ்றா 6:15-22
எஸ்றா 6:15-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள். தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள் முறைவரிசைகளின்படியும் நிறுத்தினார்கள். சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள். ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள். அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து, புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.
எஸ்றா 6:15-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தரியு அரசனுடைய ஆட்சியின் ஆறாம் வருடத்தில் ஆதார் மாதம் மூன்றாம் நாளில் ஆலயம் கட்டிமுடிந்தது. அதன்பின்பு இஸ்ரயேல் மக்களான ஆசாரியரும், லேவியர்களும், மற்றும் நாடுகடத்தப்பட்டவர்களான மீதியானவர்களும் இறைவனின் ஆலயத்தை அர்ப்பணம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இறைவனின் ஆலய அர்ப்பணத்திற்கு அவர்கள் நூறு காளைகள், இருநூறு ஆட்டுக்கடாக்கள், நானூறு ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றைப் பலியாகச் செலுத்தினார்கள். எல்லா இஸ்ரயேலரினதும் பாவநிவாரணக் காணிக்கையாக பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்களைச் செலுத்தினார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒன்றாக அவற்றைச் செலுத்தினார்கள். பின்பு மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி எருசலேமிலுள்ள இறைவனின் பணிக்காக ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவின்படியும் லேவியர்களை அவர்களுடைய குழுக்களின்படியும் நியமித்தார்கள். அவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியில் பஸ்காவைக் கொண்டாடினார்கள். ஆசாரியரும், லேவியர்களும் ஒன்றாக சேர்ந்து தங்களைச் சுத்திகரித்து எல்லோரும் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருந்தனர். லேவியர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த அனைவருக்காகவும், தங்கள் சகோதரர்களான ஆசாரியருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள். நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்த இஸ்ரயேலர்கள் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படி, மற்ற அயலவர்களுடைய அசுத்தமான நடைமுறைகளிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டிருந்த அனைவருடனும் அதைச் சாப்பிட்டார்கள். அவர்கள் ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். ஏனெனில், இஸ்ரயேலின் இறைவனின் தேவாலயத்தின் வேலையில் அசீரியா அரசன் அவர்களுக்கு உதவி செய்தான். யெகோவா அசீரிய அரசனின் மனதை மாற்றியதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியால் நிறைத்திருந்தார்.
எஸ்றா 6:15-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருடம் ஆதார் என்னும் மாதத்தின் மூன்றாம் தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையை சந்தோஷமாகக் கொண்டாடினார்கள். தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவுகளின்படியும், லேவியர்களை அவர்கள் முறைவரிசைகளின்படியும் நிறுத்தினார்கள். சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள். ஆசாரியர்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டுத் தங்களை சுத்தம் செய்துகொண்டதால், எல்லோரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோருக்காகவும், ஆசாரியர்களான தங்களுடைய சகோதரர்களுக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள். அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் மக்களும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தைவிட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைச் சாப்பிட்டு, புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களாக சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; யெகோவா அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்களுடைய கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாக அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்களிடம் சார்ந்திருக்கப்பண்ணினார்.
எஸ்றா 6:15-22 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆலயமானது தரியு அரசாளும் ஆறாம் ஆண்டு ஆதார் மாதம் மூன்றாம் தேதியில் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்தவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். இவ்வாறு தான் அவர்கள் தேவனுடைய ஆலயத்தை பிரதிஷ்டை செய்தது: அவர்கள் 100 காளைகள், 200 செம்மறியாட்டுக் கடாக்கள் மற்றும் 400 ஆண் ஆட்டுக் குட்டிகள் ஆகியவற்றைப் பலி கொடுத்தனர். அவர்கள் இஸ்ரவேலர்களின் பாவப்பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக்கடாக்களைப் பலி கொடுத்தனர். அந்த 12 வெள்ளாடுகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்திற்கும் ஒன்று வீதம் கொடுக்கப்பட்டவை. பிறகு அவர்கள் தங்கள் குழுவில் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்தனர். லேவியர்களை அவர்களின் குழுவிலும் தேர்ந்தெடுத்து எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலய வேலைக்கு நியமித்தனர். மோசேயின் புத்தகத்தில் சொன்னடியே அவர்கள் செய்து முடித்தார்கள். யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு எருசலேம் வந்த முதலாம் மாதம் 14வது நாள், பஸ்காவைக் கொண்டாடினார்கள். ஆசாரியர்களும் லேவியர்களும் தம்மைச் சுத்தப்படுத்திக்கொண்டு பஸ்கா பண்டிகையை கொண்டாடத் தயார் ஆனார்கள். லேவியர்கள் பஸ்கா ஆட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்த அனைத்து யூதர்களுக்காகவும் கொன்றனர். அவர்கள் இதனைத் தம் சகோதரர்களான ஆசாரியர்களுக்காகவும், தங்களுக்காகவும் செய்தனர். எனவே, இஸ்ரவேலின் அடிமைத்தனத்திலிருந்து மீட்புப் பெற்ற அனைத்து ஜனங்களும் பஸ்கா விருந்தை உண்டனர். அந்நாட்டிலுள்ள மற்றவர்கள் தம்மைக் கழுவி அந்நாட்டில் வசித்த ஜனங்களின் அசுத்தங்களிலிருந்து சுத்தம் செய்துக்கொண்டார்கள். இவ்வாறு சுத்தமானவர்களும் பஸ்கா விருந்தைப் பங்கிட்டுக் கொண்டனர். அவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம், உதவிக்காகப் போக முடியும். அவர்கள் புளிப்பில்லா அப்பப்பண்டிகையை மிக மகிழ்ச்சியோடு ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். கர்த்தர் ஜனங்களை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். ஏனென்றால் அசீரியா ராஜாவின் போக்கையும் கர்த்தர் மாற்றியிருந்தார். எனவே அசீரியாவின் ராஜாவும் தேவனுடைய ஆலய வேலைக்கு பெரிதும் உதவியாக இருந்தான்.