எஸ்றாவின் புத்தகம் 6:15-22

எஸ்றாவின் புத்தகம் 6:15-22 TAERV

ஆலயமானது தரியு அரசாளும் ஆறாம் ஆண்டு ஆதார் மாதம் மூன்றாம் தேதியில் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்தவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். இவ்வாறு தான் அவர்கள் தேவனுடைய ஆலயத்தை பிரதிஷ்டை செய்தது: அவர்கள் 100 காளைகள், 200 செம்மறியாட்டுக் கடாக்கள் மற்றும் 400 ஆண் ஆட்டுக் குட்டிகள் ஆகியவற்றைப் பலி கொடுத்தனர். அவர்கள் இஸ்ரவேலர்களின் பாவப்பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக்கடாக்களைப் பலி கொடுத்தனர். அந்த 12 வெள்ளாடுகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்திற்கும் ஒன்று வீதம் கொடுக்கப்பட்டவை. பிறகு அவர்கள் தங்கள் குழுவில் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்தனர். லேவியர்களை அவர்களின் குழுவிலும் தேர்ந்தெடுத்து எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலய வேலைக்கு நியமித்தனர். மோசேயின் புத்தகத்தில் சொன்னடியே அவர்கள் செய்து முடித்தார்கள். யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு எருசலேம் வந்த முதலாம் மாதம் 14வது நாள், பஸ்காவைக் கொண்டாடினார்கள். ஆசாரியர்களும் லேவியர்களும் தம்மைச் சுத்தப்படுத்திக்கொண்டு பஸ்கா பண்டிகையை கொண்டாடத் தயார் ஆனார்கள். லேவியர்கள் பஸ்கா ஆட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்த அனைத்து யூதர்களுக்காகவும் கொன்றனர். அவர்கள் இதனைத் தம் சகோதரர்களான ஆசாரியர்களுக்காகவும், தங்களுக்காகவும் செய்தனர். எனவே, இஸ்ரவேலின் அடிமைத்தனத்திலிருந்து மீட்புப் பெற்ற அனைத்து ஜனங்களும் பஸ்கா விருந்தை உண்டனர். அந்நாட்டிலுள்ள மற்றவர்கள் தம்மைக் கழுவி அந்நாட்டில் வசித்த ஜனங்களின் அசுத்தங்களிலிருந்து சுத்தம் செய்துக்கொண்டார்கள். இவ்வாறு சுத்தமானவர்களும் பஸ்கா விருந்தைப் பங்கிட்டுக் கொண்டனர். அவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம், உதவிக்காகப் போக முடியும். அவர்கள் புளிப்பில்லா அப்பப்பண்டிகையை மிக மகிழ்ச்சியோடு ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். கர்த்தர் ஜனங்களை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். ஏனென்றால் அசீரியா ராஜாவின் போக்கையும் கர்த்தர் மாற்றியிருந்தார். எனவே அசீரியாவின் ராஜாவும் தேவனுடைய ஆலய வேலைக்கு பெரிதும் உதவியாக இருந்தான்.