எஸ்றா 6:15-22

எஸ்றா 6:15-22 IRVTAM

ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருடம் ஆதார் என்னும் மாதத்தின் மூன்றாம் தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையை சந்தோஷமாகக் கொண்டாடினார்கள். தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவுகளின்படியும், லேவியர்களை அவர்கள் முறைவரிசைகளின்படியும் நிறுத்தினார்கள். சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள். ஆசாரியர்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டுத் தங்களை சுத்தம் செய்துகொண்டதால், எல்லோரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோருக்காகவும், ஆசாரியர்களான தங்களுடைய சகோதரர்களுக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள். அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் மக்களும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தைவிட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைச் சாப்பிட்டு, புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களாக சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; யெகோவா அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்களுடைய கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாக அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்களிடம் சார்ந்திருக்கப்பண்ணினார்.