யாத்திராகமம் 20:1-15

யாத்திராகமம் 20:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவன் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பேசினார்: “அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே. “நீ என்னைத்தவிர வேறு தெய்வங்களை உனக்காக வைத்திருக்காதே. நீ உனக்காக ஒரு விக்கிரகத்தைச் செய்யாதே. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உள்ள எதனுடைய உருவத்திலும் விக்கிரகத்தைச் செய்யாதே. நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம். ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன். ஆனால் என்னிடம் அன்பாயிருந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறைகளுக்கும் அன்பு காட்டுகிறவராயும் இருக்கிறேன். உன் இறைவனாகிய யெகோவாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், யெகோவா தனது பெயரை தவறாகப் பயன்படுத்துகிற ஒருவனையும் தண்டிக்காமல் விடுவதில்லை. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய்க் கைக்கொள்ளும்படி அதை நினைவில் வைத்துக்கொள். ஆறு நாட்களும் உழைத்து உன் வேலையை எல்லாம் செய்யவேண்டும். ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது, நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. உன் மிருகங்களோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையும் செய்யக்கூடாது. ஏனெனில், யெகோவா வானத்தையும் பூமியையும், கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் படைத்தார். ஏழாம் நாளிலோ அவர் ஓய்ந்திருந்தார். அதனால் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு. அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்வாய். கொலைசெய்ய வேண்டாம். விபசாரம் செய்யவேண்டாம். களவு செய்யவேண்டாம்.

யாத்திராகமம் 20:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவன் பேசிச் சொல்லிய எல்லா வார்த்தைகளாவன. “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே. என்னைத்தவிர உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சிலையையாவது, விக்கிரகத்தையாவது நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய யெகோவாவாக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன். என்னிடம் அன்புகூர்ந்து, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் செய்கிறவராக இருக்கிறேன். உன்னுடைய தேவனாகிய யெகோவாடைய நாமத்தை வீணிலே வழங்காமல் இருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார். ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க நினை; ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து; ஏழாம்நாளோ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், உன்னுடைய மகளானாலும், உன்னுடைய வேலைக்காரனானாலும், உன்னுடைய வேலைக்காரியானாலும், உன்னுடைய மிருகஜீவனானாலும், உன்னுடைய வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், எந்த வேலையும் செய்யவேண்டாம். யெகோவா ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே.

யாத்திராகமம் 20:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பு தேவன், “நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். “என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது. “நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது. எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன். என்னிடம் அன்போடிருந்து எனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களிடம் நான் இரக்கம் காட்டுவேன். ஆயிரம் தலைமுறை வரைக்கும் அவர்கள் குடும்பங்களிடம் கருணையோடு இருப்பேன். “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெயரைத் தகாத வழியில் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் அவ்வாறு பயன்படுத்தினால், அவன் குற்றவாளியாவான். கர்த்தர் அவனது குற்றத்திற்காக அவனை தண்டிப்பார். “ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள். உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது. ஏனெனில் கர்த்தர் ஆறு நாட்கள் வேலை செய்து வானம், பூமி, கடல் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். ஏழாம் நாளில் கர்த்தர் ஓய்வெடுத்தார். இவ்வாறு கர்த்தர் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை ஆசீர்வதித்தார். கர்த்தர் அதை ஒரு மிக விசேஷமான நாளாக்கினார். “உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் தரும் நாட்டில் நீண்டஆயுள் வாய்ப்பதற்கு இதைச் செய்தல் வேண்டும். “நீங்கள் யாரையும் கொல்லாதிருப்பீர்களாக. “நீங்கள் விபச்சாரம், செய்யாதிருப்பீர்களாக. “நீங்கள் எதையும் திருடாதிருப்பீர்களாக.

யாத்திராகமம் 20:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன: உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. கொலை செய்யாதிருப்பாயாக. விபசாரம் செய்யாதிருப்பாயாக. களவு செய்யாதிருப்பாயாக.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்