யாத்திராகமம் 20:1-15

யாத்திராகமம் 20:1-15 TAERV

பின்பு தேவன், “நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். “என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது. “நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது. எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன். என்னிடம் அன்போடிருந்து எனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களிடம் நான் இரக்கம் காட்டுவேன். ஆயிரம் தலைமுறை வரைக்கும் அவர்கள் குடும்பங்களிடம் கருணையோடு இருப்பேன். “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெயரைத் தகாத வழியில் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் அவ்வாறு பயன்படுத்தினால், அவன் குற்றவாளியாவான். கர்த்தர் அவனது குற்றத்திற்காக அவனை தண்டிப்பார். “ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள். உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது. ஏனெனில் கர்த்தர் ஆறு நாட்கள் வேலை செய்து வானம், பூமி, கடல் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். ஏழாம் நாளில் கர்த்தர் ஓய்வெடுத்தார். இவ்வாறு கர்த்தர் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை ஆசீர்வதித்தார். கர்த்தர் அதை ஒரு மிக விசேஷமான நாளாக்கினார். “உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் தரும் நாட்டில் நீண்டஆயுள் வாய்ப்பதற்கு இதைச் செய்தல் வேண்டும். “நீங்கள் யாரையும் கொல்லாதிருப்பீர்களாக. “நீங்கள் விபச்சாரம், செய்யாதிருப்பீர்களாக. “நீங்கள் எதையும் திருடாதிருப்பீர்களாக.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்