எஸ்தர் 9:20-28

எஸ்தர் 9:20-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மொர்தெகாய் இந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்து, அருகிலும் தூரத்திலும் அகாஸ்வேரு அரசனின் மாகாணங்கள் எங்குமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பினான். அதில் வருடந்தோறும் ஆதார் மாதத்தின் பதினான்காம், பதினைந்தாம் நாட்களைக் கொண்டாடும்படி கேட்கப்பட்டிருந்தது. இதை யூதர்கள் தங்கள் பகைவரிடமிருந்து விடுதலை பெற்ற காலமாகவும், அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறிய மாதமாகவும், தங்களுடைய அழுகை கொண்டாட்டமாக மாறிய நாளாகவும் கொண்டாடும்படி எழுதப்பட்டிருந்தது. அந்த நாட்களை விருந்துண்டு மகிழும் நாட்களாகவும், ஒருவருக்கொருவர் உணவுகளை அன்பளிப்பாகக் கொடுக்கும் நாட்களாகவும், ஏழைகளுக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கும் நாட்களாகவும் கைக்கொள்ளும்படி எழுதினான். எனவே யூதர்கள், மொர்தெகாய் தங்களுக்கு எழுதியபடிச் செய்து, தாங்கள் தொடங்கியிருந்த கொண்டாட்டத்தைத் தொடர்ந்துசெய்ய சம்மதித்தார்கள். ஏனெனில், எல்லா யூதர்களின் பகைவனான, ஆகாகியன் அம்மெதாத்தாவின் மகன் ஆமான் யூதர்களை அழிப்பதற்கென அவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டிருந்தான். அத்துடன் அவர்களுடைய அழிவுக்காகவும், நாசத்துக்காகவும் அவன் பூர் எனப்படும் சீட்டையும் போட்டிருந்தான். ஆனால் இந்தச் சதி அரசனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, யூதருக்கு எதிராக ஆமான் திட்டமிட்டிருந்த அந்த கொடிய சதித்திட்டம் அவனுடைய தலையின் மேலேயே திரும்பிவரும்படி, அரசன் ஒரு எழுத்து மூலமான உத்தரவைப் பிறப்பித்தான். அத்துடன் ஆமானும், அவன் மகன்களும் தூக்கு மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டான். ஆகவேதான் இந்த நாட்கள் பூர் என்ற சொல்லிலிருந்து பூரீம் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கடிதத்தில் எழுதப்பட்ட எல்லாவற்றிற்காகவும், அவர்கள் கண்டவற்றிற்காகவும், அவர்களுக்கு நிகழ்ந்தவற்றிற்காகவும், யூதர்கள் ஒரு வழக்கத்தை நிலைநிறுத்தவேண்டும் என்றும் உறுதி செய்துகொண்டார்கள். தாங்களும், தங்கள் சந்ததிகளும், தங்களுடன் இணைந்துகொள்ளும் எல்லோருடனும் வருடந்தோறும் இந்த இரண்டு நாட்களையும் நியமிக்கப்பட்ட காலத்திலேயும், விபரிக்கப்பட்ட விதத்திலேயும் தவறாது கைக்கொள்ளவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பட்டணத்திலும் இருக்கும், ஒவ்வொரு வழித்தோன்றலும் ஒவ்வொரு குடும்பத்தாரும் இந்த நாளை நினைவிற்கொண்டு கொண்டாடவேண்டும். இந்த பூரீம் நாட்கள் யூதர்களால் கொண்டாடப்படுவது ஒருபோதும் நின்று போகக்கூடாது. அவற்றைப் பற்றிய ஞாபகமும், அவர்களுடைய வழித்தோன்றலிலிருந்து அற்றுப்போகக் கூடாது என்றும் தீர்மானித்தார்கள்.

எஸ்தர் 9:20-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மொர்தெகாய் இந்தக் காரியங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பி, ஒவ்வொரு வருடமும் ஆதார் மாதத்தின் பதினான்காம் பதினைந்தாந்தேதிகளை, யூதர்கள் தங்களுடைய பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்களுடைய சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்களுடைய துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் அநுசரித்து, அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷம்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மம் செய்யவும்வேண்டும் என்று திட்டம் செய்தான். அப்பொழுது யூதர்கள் தாங்கள் செய்யத்துவங்கியபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள். அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதர்களுக்கெல்லாம் எதிரியாக இருந்து யூதர்களை அழிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் பூர் என்னப்பட்ட சீட்டைப் போட செய்தான். ஆனாலும் எஸ்தர், ராஜாவிற்கு முன்பாகப்போய், யூதர்களுக்கு விரோதமாக அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளையிட்டதால், அவனையும் அவனுடைய மகன்களையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள். ஆகையால் அந்த நாட்கள் பூர் என்னும் பெயரால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த கடிதத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினாலும், தாங்களே இந்த விஷயத்தில் அனுபவித்தவைகளினாலும், தங்களுக்கு சம்பவித்தவைகளினாலும், யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை ஒவ்வொரு வருடமும், அவைகளின் சரியான காலத்தில் கொண்டாடாமல் இருப்பதில்லை என்பதையும், இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூறப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதர்களுக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்களுடைய சந்ததியினர்களுக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்களுடைய சந்ததியினர்கள்மேலும், தங்களுடைய மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற எல்லோர்மேலும் கடனாக நியமித்துக் கொண்டார்கள்.

எஸ்தர் 9:20-28 பரிசுத்த பைபிள் (TAERV)

மொர்தெகாய் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதினான். பிறகு அவன் அகாஸ்வேரு ராஜாவின் மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அருகிலும் தொலைவிலும் உள்ள அனைவருக்கும் கடிதம் அனுப்பினான். மொர்தெகாய் அதில் யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆதார் மாதத்தின் 14 மற்றும் 15ஆம் நாட்களில் பூரீம் விழாவை கொண்டாடும்படி எழுதினான். யூதர்கள் அந்நாட்களைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், அந்நாட்களில் அவர்கள் தம் பகைவர்களை அழித்தனர். அம்மாதத்தில் அவர்களின் துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறியதால் அம்மாதத்தைக் கொண்டாடினார்கள். இம்மாதத்தில் அவர்களது அழுகை மாறி குதூகலமாய் கொண்டாடும் மாதமாக மாறிற்று. மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அவர்களிடம் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாளாக கொண்டாடச் சொன்னான். அவர்கள் ஒருவருக்கொருவர் விருந்தும் அன்பளிப்பும் கொடுத்து, ஏழைகளுக்குப் பரிசு கொடுத்து அந்த நாளை கொண்டாடச் சொன்னான். எனவே யூதர்கள் மொர்தெகாய் எழுதியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தொடங்கிய விழாவை தொடர ஒப்புக்கொண்டனர். அம்மெதாத்தாவின் குமாரனான ஆமான் என்னும் ஆகாகியன் யூதர்களின் பகைவன். யூதர்களை அழிக்க அவன் ஒரு தீய திட்டத்தை வைத்திருந்தான். அவன் யூதர்களை அழிக்கும் நாளை குலுக்கல் சீட்டு போட்டு தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அக்காலத்தில் குலுக்கல் சீட்டானது “பூர்” என்று அழைக்கப்பட்டது. எனவே, விடுமுறைநாளும் “பூரீம்” என அழைக்கப்பட்டது. ஆமான் அவற்றைச் செய்தான். ஆனால் எஸ்தர் ராஜாவிடம் பேசச் சென்றாள். எனவே, அவன் புதிய கட்டளைகளை அனுப்பினான். அந்த கட்டளைகள் ஆமானின் திட்டத்தை அழித்ததோடு, ஆமானுக்கும் அவனது குடும்பத்திற்கும், அதே தீமை ஏற்படும்படியும் ஆயிற்று. எனவே, ஆமானும் அவனது குமாரர்களும் தூக்கு மரத்தில் தொங்கினார்கள். இப்போது, குலுக்கல் சீட்டு “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. எனவே, இந்த விடுமுறை நாளும் “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. மொர்தெகாய் யூதர்களுக்கு கடிதம் எழுதி இந்நாளைக் கொண்டாடச் சொன்னான். எனவே, யூதர்கள் ஆண்டில் இரண்டு நாளைக் கொண்டாடும் வழக்கத்தைக்கொண்டனர். இது அவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை நினைவுப்படுத்துவதாக இருந்தது. யூதர்களும் மற்ற ஜனங்களும் சேர்ந்து சரியான காலத்தில் சரியான முறையில் ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்கள் கொண்டாடினார்கள். ஒவ்வொரு தலைமுறையில் ஒவ்வொரு குடும்பமும் இந்த இரண்டு நாட்களையும் நினைவுபடுத்தினர். அவர்கள் இந்த விடுமுறையை ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரிலும் கொண்டாடினார்கள் யூதர்கள் என்றென்றும் பூரீம் விழாவைக் கொண்டாடுவதை நிறுத்தக் கூடாது. யூதர்களின் சந்ததிகளும் எப்பொழுதும் இவ்விடுமுறையை நினைத்துக்கொள்ள வேண்டும்.

எஸ்தர் 9:20-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி, வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து, அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான். அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள். அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான். ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில் போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள். ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினிமித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும், யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும், அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும், இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக் கொண்டார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்