எஸ்தர் 9:20-28

எஸ்தர் 9:20-28 TCV

மொர்தெகாய் இந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்து, அருகிலும் தூரத்திலும் அகாஸ்வேரு அரசனின் மாகாணங்கள் எங்குமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பினான். அதில் வருடந்தோறும் ஆதார் மாதத்தின் பதினான்காம், பதினைந்தாம் நாட்களைக் கொண்டாடும்படி கேட்கப்பட்டிருந்தது. இதை யூதர்கள் தங்கள் பகைவரிடமிருந்து விடுதலை பெற்ற காலமாகவும், அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறிய மாதமாகவும், தங்களுடைய அழுகை கொண்டாட்டமாக மாறிய நாளாகவும் கொண்டாடும்படி எழுதப்பட்டிருந்தது. அந்த நாட்களை விருந்துண்டு மகிழும் நாட்களாகவும், ஒருவருக்கொருவர் உணவுகளை அன்பளிப்பாகக் கொடுக்கும் நாட்களாகவும், ஏழைகளுக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கும் நாட்களாகவும் கைக்கொள்ளும்படி எழுதினான். எனவே யூதர்கள், மொர்தெகாய் தங்களுக்கு எழுதியபடிச் செய்து, தாங்கள் தொடங்கியிருந்த கொண்டாட்டத்தைத் தொடர்ந்துசெய்ய சம்மதித்தார்கள். ஏனெனில், எல்லா யூதர்களின் பகைவனான, ஆகாகியன் அம்மெதாத்தாவின் மகன் ஆமான் யூதர்களை அழிப்பதற்கென அவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டிருந்தான். அத்துடன் அவர்களுடைய அழிவுக்காகவும், நாசத்துக்காகவும் அவன் பூர் எனப்படும் சீட்டையும் போட்டிருந்தான். ஆனால் இந்தச் சதி அரசனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, யூதருக்கு எதிராக ஆமான் திட்டமிட்டிருந்த அந்த கொடிய சதித்திட்டம் அவனுடைய தலையின் மேலேயே திரும்பிவரும்படி, அரசன் ஒரு எழுத்து மூலமான உத்தரவைப் பிறப்பித்தான். அத்துடன் ஆமானும், அவன் மகன்களும் தூக்கு மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டான். ஆகவேதான் இந்த நாட்கள் பூர் என்ற சொல்லிலிருந்து பூரீம் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கடிதத்தில் எழுதப்பட்ட எல்லாவற்றிற்காகவும், அவர்கள் கண்டவற்றிற்காகவும், அவர்களுக்கு நிகழ்ந்தவற்றிற்காகவும், யூதர்கள் ஒரு வழக்கத்தை நிலைநிறுத்தவேண்டும் என்றும் உறுதி செய்துகொண்டார்கள். தாங்களும், தங்கள் சந்ததிகளும், தங்களுடன் இணைந்துகொள்ளும் எல்லோருடனும் வருடந்தோறும் இந்த இரண்டு நாட்களையும் நியமிக்கப்பட்ட காலத்திலேயும், விபரிக்கப்பட்ட விதத்திலேயும் தவறாது கைக்கொள்ளவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பட்டணத்திலும் இருக்கும், ஒவ்வொரு வழித்தோன்றலும் ஒவ்வொரு குடும்பத்தாரும் இந்த நாளை நினைவிற்கொண்டு கொண்டாடவேண்டும். இந்த பூரீம் நாட்கள் யூதர்களால் கொண்டாடப்படுவது ஒருபோதும் நின்று போகக்கூடாது. அவற்றைப் பற்றிய ஞாபகமும், அவர்களுடைய வழித்தோன்றலிலிருந்து அற்றுப்போகக் கூடாது என்றும் தீர்மானித்தார்கள்.